பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட 4 அலுவலகங்களை விலைக்கு வாங்கி ஒரே நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுத்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான அமிதாப் பச்சன் தற்போது அயோத்தியிலேயே வீடு கட்ட முடிவு செய்துள்ளார்.

அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அயோத்திக்கு எப்போதும் இல்லாத அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சனும் அயோத்தியில் 10,000 சதுர அடி நிலத்தை வாங்கியிருக்கிறார். 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சரயு நகரில் இந்த நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கி இருக்கிறார்.

அயோத்தி சரயு

இந்த சரயு நகர் மொத்தம் 51 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகரமே வரும் 22ம் தேதிதான் முறைப்படி திறக்கப்படுகிறது.

அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ.14.5 கோடியாகும். இந்தப் புதிய நகரத்தை லோதா நிறுவனம் உருவாக்குகிறது. அதில் அமிதாப் பச்சன் வீடு கட்டத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “எனது இதயத்தில் இடம் பிடித்த அயோத்தியின் சரயு நகரில் என் பயணத்தைத் தொடங்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

அயோத்தியின் காலத்தால் அழியாத ஆன்மிகம், கலாச்சாரம் போன்றவை புவியியல் எல்லையைத் தாண்டிய ஓர் உணர்வுபூர்வ தொடர்பை உருவாக்கி இருக்கிறது. இது அயோத்தியின் ஆன்மாவுக்கான இதயபூர்வமான பயணத்தின் தொடக்கமாகும். சர்வதேச ஆன்மிகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்டப்போகிறேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரயு நகரை உருவாக்கும் அபிநந்தன் லோத்தா அளித்த பேட்டியில், “சரயு நகரத்தின் முதல் குடிமகனாக அமிதாப் பச்சனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அமிதாப் பச்சன் எங்களுடன் சேர்ந்திருப்பது அயோத்தியைச் சர்வதேச ஆன்மிகத்தின் சின்னமாக மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சரயு நதி

அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத்திலும், ராமர் கோயிலிலிருந்து 15 நிமிடத்திலும் சரயு நகருக்குச் செல்ல முடியும். இங்குக் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்திற்குக் கட்டப்படும். இத்திட்டத்தை மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதாவின் இளைய மகன் அபிநந்தன் லோதா நிறைவேற்றி வருகிறார்.

இத்திட்டம் 2028ம் ஆண்டு முடிவடையும். அயோத்தியில் இப்போது நிலத்தின் மதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அதுவும் உச்சநீதிமன்றம் அயோத்தியில் கோயில் கட்ட சாதகமாகத் தீர்ப்பு சொன்னவுடன் நிலத்தின் மதிப்பு 30 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. பனாரஸ், விருந்தாவன், சிம்லா மற்றும் அமிர்தசரஸில் 4 சொகுசு ஹோட்டல்கள் கட்ட லோதா திட்டமிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.