பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கால்நடைகளைப் போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளன்று, உழவிற்கு வழி செய்யும் மாடுகளைச் சுத்தம் செய்து கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெல்லி மற்றும் நெட்டி மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே!

நெட்டி மாலை உற்பத்தியில்…

மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம் மற்றும் சீர்காழியடுத்த ஆனைக்காரன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பொங்கலை முன்னிட்டு நெட்டி மாலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். நெட்டி செடி ஃபேபேசி (பட்டாணி) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நீர்வாழ் தாவரமாகும்.

இவை டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் அதிக அளவில் நீரோடைகள் மற்றும் குளங்களின் கரையில் காணப்படுகிறது. இதன் நடுப்பகுதி தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல் பகுதி சிறு கிளைகளை உடையதாகவும் இருக்கும். ஆணைகாரண்சத்திரம் மேலவல்லம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். கிராம மக்கள் வருடத்தின் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்களில் விவசாய கூலி வேலை இல்லாததால் நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபடுவர்.

மூன்று தலைமுறைகளாக நெட்டி தொழிலை மேற்கொள்ளும் மக்கள் ஏரிகள் மற்றும் குளங்களில் இயற்கையாய் விளையும் நெட்டி தாவரங்களை வெட்டி எடுத்துச் சரியான கால இடைவெளியில் பதப்படுத்துவர். பின்னர் அவற்றின் தோலைச் சீவி, சுத்தம் செய்து மாலைகளுக்குத் தகுந்தாற்போல் கருணை, கீழ்குஞ்சம், வில்லை போன்ற வடிவங்களாக மாற்றி, கலர் சாயம் நனைத்து, வெயிலில் உலர வைக்கின்றனர். நன்றாக உலர்ந்த நெட்டி தக்கைகளை இணைத்து பல்வேறு வடிவ மாலையாகத் தயாரிக்கின்றனர்.

நெட்டி மாலை உற்பத்தியில்…

மாலைகள் கால்நடைகளுக்கு ஏற்ற அளவோடு கட்டப்படும். மாலையைக் கட்டுவதற்குத் தாழை நாரை பயன்படுத்துவதாகப் பெருமிதம் கொள்கிறார்கள் கிராம மக்கள். மேலும் மூங்கில் தோட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம், பெரும்பாலும் நாங்க நெட்டி தக்கைகளைச் சென்னை,பாண்டிச்சேரி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் வாங்குறோம். இரண்டு தலைமுறையா தொழிலைச் செஞ்சிட்டு வருவதாகவும் கூறினார்.

நெட்டி மாலை

இந்த மாலைகள் இயற்கைக்கு நண்பனாகவும் பல மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. ஆனால் இத்தொழிலை மேற்கொள்ள போதிய வருவாய் இல்லாததால் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.