சேலம் ஓமலூர் திண்டமங்கலத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை, பொங்கல். தை பிறந்தால், வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறியது. தை பிறந்துள்ளது இத்திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும்.

இந்த இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மையை பார்த்தார்கள்… ஏழை, எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. இரண்டரை ஆண்டுக்காலத்தில் மக்களிடம் கொள்ளையடித்ததுதான் தி.மு.க-வின் சாதனை. நாட்டு மக்களைப் பற்றியும், மக்கள் படும் பாடு குறித்தும் கவலையில்லை… பல்வேறு துறைகளில் பல்லாயிரம் கோடி பணத்தைக் கொள்ளையடித்து தி.மு.க ஆட்டம் போட்டு வருகிறது.

அதனால் சிலர் சிறையில் உள்ளனர், பலர் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுக்காலத்தில், எப்போது தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்புவோம் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை காட்சிகளாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க அரசில் நிர்வாகத் திறமையற்ற, பொம்மை முதலமைச்சராகவே உள்ள ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான், மோசமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு, நியாய விலைக் கடைகளில் பொருள்களை முறையாக வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மழை வெள்ள பாதிப்பில் மக்களைக் காத்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்தான். அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிட்டு செயல்படுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம். நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு தடுப்பணைகள் அதிக அளவில் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சி அ.தி.மு.க ஆட்சி என்ற சிறப்பு பெற்றோம்.

கால்நடை பூங்கா

ஏழைகளுக்காக திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்தான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் தி.மு.க-வின் சாதனைகள். விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு நல்ல அரசாங்கமாக இருந்தால், முறையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். கொள்ளையடிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளது தி.மு.க. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். தி.மு.க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தலாக அமையும்.

நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை, மக்கள் ஆதரிக்க வேண்டும். தி.மு.க அரசாங்கத்தை அகற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

சேலம், அ.தி.மு.க-வின் கோட்டை… சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க-தான். தமிழகத்தில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி, அதிகமான வித்தியாசத்தில் நம்மை வெற்றி பெற செய்யும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.