பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விமான நிலையம் ஒன்றில் தானும், வேறு சில பயணிகளும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எந்த ஊர் என்றோ அல்லது எந்த ஏர்லைன்ஸ் என்றோ எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் மும்பை விமான நிலையத்தைத்தான் சுட்டிக்காட்டி குறிப்பிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தாமதமானதால் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களை அறையில் அடைத்து வைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கபாலி படத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ள தகவலில், ”இன்று காலையில் 8.30 மணிக்கு விமானத்தில் ஏறுவதாக இருந்தது. இப்போது மணி 10.50. இன்னும் விமானம் ஏறவில்லை. விமானம் தாமதமானதால் எங்களை கண்ணாடி கதவு கொண்ட ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

உள்ளே பாத்ரூம் வசதியோ அல்லது குடிநீர் வசதியோ கிடையாது. பாதுகாப்புக்கு நின்றவர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. ஒரு மணி நேரமாவது உள்ளே இருக்க வேண்டி இருக்கும் என ஏர்லைன்ஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இப்போது 12 மணி வரை ஆகும் என்று சொல்கிறார்கள். நாங்கள் பூட்டிய அறைக்குள் இருக்கிறோம். விமான பணியாளர்கள் மாறுவதாகவும், புதிய ஊழியர்கள் இன்னும் வரவில்லை என்று ஏர்லைன்ஸ் தரப்பில் சொன்னார்கள். பின்னர் விமான ஊழியர்கள் வந்து விட்டதாகவும், இன்னும் சிலர் மட்டும் வரவேண்டியிருப்பதாக சொன்னார்கள். எவ்வளவு நேரம் எங்களை இப்படி அடைத்து வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. நான் எப்படியே தப்பித்து வெளியில் வந்து பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பேசினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ராதிகா சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன் மும்பை விமான நிலையத்தில் இது போன்று நடப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் ஆன்லைனில் ராதிகா கருத்துக்கு தங்களது பதிலை தெரிவித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.