மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு மே இறுதியில் சிவசேனாவை உடைத்துக்கொண்டு, வெளியில் வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி, பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. அதன் பிறகு சிவசேனாவின் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சிவசேனா சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து விலகியது, கட்சித் தலைமை கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது போன்ற காரணங்களை காட்டி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் மாநில சபாநாயகரிடமும், சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் இம்மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

தாக்கரே – ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே அணியும், உத்தவ் தாக்கரே அணியில் இடம் பெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்தது. மனுவை சபாநாயகர் தொடர்ந்து கிடப்பில் போட்டதால், தங்களது எம்.எல்.ஏ பதவி பறிப்பு மனுமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பில் நிர்ப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என்றும், இதில் சபாநாயகர்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. மேலும் எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு மனுவை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, மகாராஷ்டிரா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராகுல் நர்வேகர்

அப்படி இருந்தும் சபாநாயகர், எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு தொடர்பாக இரு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட 34 மனுக்கள்மீது முடிவு எடுக்காமல் இருந்தார். இதையடுத்து சபாநாயகரை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்திருந்தது. அதோடு ஜனவரி 10-ம் தேதிக்குள் விசாரித்து முடிவை அறிவிக்கும்படி கடந்த மாதம் 15-ம் தேதி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்தே எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு மனுமீதான விசாரணையை சபாநாயகர் தொடங்கினார். விசாரணை முடிந்து 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில், சபாநாயகர் ராகுல் நர்வேகர், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் சபாநாயகர் தனது தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, சபாநாயகர் தனது இந்த விவகாரத்தில் தனது முடிவைத் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

இது தொடர்பாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அளித்தப் பேட்டியில், “சிவசேனாவின் 1999-வது சட்டப்பிரிவின்கீழ் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா. கட்சி சார்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதற்காக, எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க முடியாது.

உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி நியமித்த பரத் கோகாவாலாதான் உண்மையான சிவசேனா கொறடாவாகும்” என்றார்.

சபாநாயகரின் இத்தகைய முடிவு, ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. எனவே, இது தாக்கரே தரப்புக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.