ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு, ‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும்’ என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஜம்மு காஷ்மீர்

அந்தத் தீர்ப்பு விவாதங்களை கிளப்பியது. மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கலாம், அதை யூனியன் பிரதேசமாக மாற்றலாம் என்ற நிலை ஆபத்தானது என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. குறிப்பாக, பிரபல சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்தனர்.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், ஜம்மு – கஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் ஹுசைன், ஜம்மு – கஷ்மீர் அவாமி தேசிய மாநாட்டின் தலைவர் முசாபர் ஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் என அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் செய்தியாள்களிடம் பேசும்போது,“ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ நீக்க முடியாது. 370 வது பிரிவின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். இது குறித்து நீதிமன்றத்தில் விவாதிப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாது, தனி நபர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும், ஜம்மு – கஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரேதசங்களாக பிரித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.