5-வது முறையாக பிரதமர்:

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அவாமி லீக் ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா இருக்கிறார். இந்த அரசின் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 7-ம் தேதி வாக்கு பதவி நடந்தது. ஒட்டு எண்ணிக்கை 8-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது, அவாமி லீக். மேலும் ஷேக் ஹசீனா எட்டாவது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1986-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். நடப்பு தேர்தலில் 2,49,965 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

வங்கதேசம்

அவரை எதிர்த்து களம் கண்ட பங்களாதேஷ் சுப்ரீம் கட்சியின் எம் நிஜாம் உதின் லஷ்கருக்கு வெறும் 469 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து பிரதமர் நாற்காலியில் 5-வது முறையாக அமர்கிறார், ஷேக் ஹசீனா. இதேபோல வங்கதேச கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆளுங்கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னதாக ‘ஹசீனா பதவி விலக வேண்டும்’ என்ற தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி.

சர்வாதிகாரியா ஷேக் ஹசீனா?

“வங்கதேசத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. ஜனவரியில் நாம் பார்க்கப் போவது போலித் தேர்தல். கடந்த சில ஆண்டுகளில் ஷேக் ஹசீனா ஒரு சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார். இது கவலையளிக்கக் கூடிய ஒன்று” என வெடித்திருந்தார், பிஎன்பி மூத்த தலைவர் அப்துல் மொயீன் கான். இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது, ஆளும் அவாமி லீக் கட்சி. “மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுகிறார்கள். இந்த தேர்தலில் பி.என்.பி. தவிர பல அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன” என சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்திருந்தார்.

வாக்கு இயந்திரம்

இதற்கிடையில் தேர்தல் சமையத்தில் பின்னர் வெடித்த களேபரத்தில் வாக்குச்சாவடிகள் பல தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அச்சத்தில் மக்கள் பலர் வாக்களிக்க விரும்பததால் சுமார் 40% வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஷேக் ஹசீனாவின் வெற்றி இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக தேர்தல் நாளில், “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தோம். அப்போது அவர்கள்தான் அடைக்கலம் கொடுத்தார்கள்.

வலுவடையும் இந்தியா, வங்கதேச உறவு:

இந்திய மக்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார். எனவே வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்கிறார்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள். “இந்தியாவின் அண்டை நாடாக வங்கதேசம் இருக்கிறது. இங்கு முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இருந்த வங்கதேசம் ஷேக் ஹசீனா தலைமைக்கு வந்த பிறகு பொருளாதார ஏற்றம் கண்டிருக்கிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கங்கையின் குறுக்கே 2.9 பில்லியன் டாலரில் கட்டப்பட்ட பத்மா பாலம் போன்றவற்றை கூற முடியும்.

ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இருப்பினும் கொரோனாவின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது, அந்த நாடு. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடனும் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையில் ஹசீனாவின் ஆட்சியில் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அரசியல் எதிரிகள், எதிர்ப்பாளர்கள், ஊடகங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் கூட அரசை விமர்சனம் செய்து போராட்டங்களை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதனை ஷேக் ஹசீனா தரப்பு மறுத்து வருகிறது.

கால் பதிக்க விரும்பும் சீனா:

ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் சர்ச்சை அதிகமாக இருந்தாலும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறார், ஷேக் ஹசீனா. இருநாடுகளும் சுமார் 4,000 கிலோ மீட்டர் வரையில் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் வரலாற்று, கலாசார ரீதியிலான தொடர்புகளும், வணிக ரீதியிலான உறவுகளும் இருக்கிறது. பிரதமர் மோடியுடன் நல்ல நட்பில் இருக்கிறார், ஷேக் ஹசீனா. இதனால் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். மேலும் இவரது ஆட்சி காலத்தில்தான் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள் தீர்ந்தது. மேலும் இந்தியா, தனது ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்கதேசம் வழியாக சாலை மற்றும் நதி போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் கால் பதிக்க சீனாவும் காய்நகர்த்தி வருகிறது. அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டுபவர். எனவே இவரது வெற்றி இந்தியாவுக்கு பலனை தரும்” என்கிறார்கள்.

தொடர்ந்து 5வது முறையாக பதவிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். “வங்கதேசத்தின் ஸ்தாபக தந்தையும் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள், ஹசீனா. இவர் கடந்த 1980களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1996-ம் ஆண்டு முதல் முறையாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி.யிடம் தோல்வியடைந்தார். 2006-2008 ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது ​​மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் ஹசீனா கைது செய்யப்பட்டார். பின்னர் 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்ற வெற்றி தற்போது வரையில் தொடர்கிறது. முன்னதாக 1975-ம் ஆண்டு அவரது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரி தவிர முழு குடும்பமும் கொல்லப்பட்டது.

சீனா

கொல்லப்பட்ட குடும்பமும்… அசுர வளர்ச்சியும்…

அப்போது ஹசீனா, கணவர் வசேத் மற்றும் சகோதரி ரெஹானா ஆகியோர் ஐரோப்பாவிற்கு சென்றிருந்தனர். அப்போது மேற்கு ஜெர்மனிக்கான வங்கதேச தூதரின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்டனர். இதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரினர். அப்போது அந்த நாட்டில் நடத்த ஜியாவுர் ரஹ்மானின் ராணுவ ஆட்சியில் வங்கதேசத்திற்குள் நுழைய ஹசீனாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1981-ம் ஆண்டு அவாமி லீக்கின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு பல்வேறு போராட்டங்களை கடந்து நாட்டின் 5 வது பிரதமராக தொடர்கிறார். இதற்கு மக்களின் நலனுக்காக அவர் போராடுவதே காரணம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.