ஆட்டத்தின் இறுதிக்கட்டம். ‘ஹப்பாடா’ என்று ஜாலியாக இருக்கத் தோன்றினாலும் இது முக்கியமான பகுதி.

வெற்றியாளர் யார் என்பது பார்வையாளர்களால் தீர்மானிக்கப்படவிருக்கும் நேரம். எனவே தனது ஒவ்வொரு அசைவையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய தருணம். சில திரைப்படங்கள் அதுவரைக்கும் சிறப்பாக இருந்தாலும் கிளைமாக்ஸ் சரியில்லாத காரணத்தால் தோற்று விடும். அப்படி ஆகி விடக்கூடாது.

இப்படியொரு சூழலில் ‘மாயா என்னை விட பெட்டர் பிளேயர்” என்று அர்ச்சனா சொன்னது அபத்தமானது. ‘டைட்டில் வின்னர்’ என்று மற்றவர்களால் கிண்டலும் பாராட்டும் கலந்து சொல்லப்படும் அர்ச்சனா இப்படி இன்னொருவரிடம் சரண் அடைந்தது சரியான ஆட்ட உத்தி அல்ல.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘புலி உறுமுது… புலி உறுமுது…’ என்கிற பாடலை அலற விட்டு போட்டியாளர்களை பதற வைத்து எழுப்பி விட்டார் பிக் பாஸ். மற்றவர்கள் தூக்கக்கலக்கத்துடன் உடம்பை அசைக்க, மணி மட்டும் எப்போது வேண்டுமானாலும் ஆடுவேன் என்கிற எனர்ஜியுடன் இருக்கிறார்.

மார்னிங் ஆக்டிவிட்டி. ஒருவர் இன்னொருவருக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். இது வித்தியாசமான ஐடியா. யாருக்கு யார் ஃபேவர் என்பது தெரிந்து விடும். தினேஷிற்காக பேசிய மணி “ரொம்ப நேர்மையா ஆடுவார். பின்னாடி பேசறதுலாம் கிடையாது. அப்பவே சொல்லிடுவார்” என்றார். விஜய்க்காக பேசிய மாயா “ இவரோட முதல் வார கேப்டன்சியை கமல் பாராட்டியிருக்கார். தான் ஜெயிக்கணும்னு மட்டும் நெனக்காம கூட இருக்கறவங்களும் மேல வரணும்னு நெனப்பார்” என்றார்.

அடுத்து வந்த தினேஷ் விஷ்ணுவிற்காக பேசினார். “டிக்கெட் டூ பினாலேவை வாங்கி வெச்சிக்கிட்டே ஃபீல் பண்ணிட்டு இருக்கான். எல்லோரும்தான் இங்க சண்டை போடறாங்க. ஆனா அவன் சண்டைக்கு அப்புறம் ஒண்ணு பண்ணுவான். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நீ நீயா இரு. பூமாலைகள் விழும்” என்று விஷ்ணுவின் மைனஸ் பாயிண்டையும் இணைத்து வாழ்த்தினார் தினேஷ். மணிக்காகப் பேசிய விஷ்ணு, “பதினோரு நாமினேஷன்ல தப்பி.. இப்பவா.. அப்பவா’ன்னு இருந்து நூலிழையில் உயிர் தப்பிச்சிட்டு வரான். (இப்படியா பிரச்சாரம் செய்வார்கள்?!) காலைல டான்ஸ் ஆடி ஒரு vibe-ஐ அவன்தான் முதல்ல ஆரம்பிச்சு வெப்பான். சோர்ந்து உக்காந்ததே கிடையாது” என்று முடித்தார்.

மற்றவர்களுக்காக செய்யும் பிரச்சாரம்

“நான் மாயாவோட ஃபேன்” என்று ரசிகர் மன்ற தலைவர் போல் ஆரம்பித்தார் விஜய். ஆனால் சக ஆட்டக்காரரின் திறமையை மதிப்பதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். ‘எவ்வளவு அடிவாங்கினாலும் ‘ நான் என் வேலையைப் பார்க்கப் போறேன்’ன்னு ஆடிட்டு வராங்க. சண்டை போட்டிருக்காங்க. மத்தவங்களை ஓட விட்டிருக்காங்க. நல்ல கேமர். முன்னாடி இன்னொருத்தர் இருந்தாரு. அவருக்கு அப்புறம் இவர்தான்” என்று சொல்வதின் மூலம் பிரதீப்பின் இன்னொரு பிம்பம்தான் மாயா என்பதை உறுதிப்படுத்தினார் விஜய். (ஆனால் வெளியில் பிரதீப்பிற்கு வரவேற்பும் மாயாவிற்கு வெறுப்பும் கிடைப்பதற்குப் பின்னால் சமூகத்தின் தன்னிச்சையான ஆணாதிக்க உணர்வு இயங்குகிறதோ என்று தோன்றுகிறது! புத்திசாலியான பெண்களை பெண்களுக்கே பிடிக்காமல் போகிறதா?!).

அர்ச்சனாவிற்காக பிரச்சாரம் செய்ய யாருமில்லை. எனவே ‘யார் யாரோ. நண்பன் என்று..’ என்கிற பாடலை கிண்டலாகப் பாடியபடியே எழுந்தார் அர்ச்சனா. “நீதாம்மா டைட்டில் வின்னர். உனக்கு பிரச்சாரம் தேவையில்லை. நீ பேசினாலே போதும்” என்று மற்றவர்கள் கலாய்த்தார்கள். தினேஷிற்காக பேசினார் அர்ச்சனா. “வைல்ட் கார்ட் என்ட்ரி ஃபயர் மாதிரி அதிரடியா உள்ளே வந்தார். பட்டுன்னு பேசினாலும் அவருக்கு எல்லோர் மேலயும் உள்ளே அன்பு இருக்கு. எதையும் மனசுல சுமந்துக்க மாட்டார். நல்ல மனிதர்” என்று பாராட்டி விட்டு அமர்ந்தார்.

“என்னப்பா.. இந்தப் புள்ள.. இப்படிப் பேசிடுச்சு.. இனிமே அர்ச்சனா கூட எப்படி சண்டை போடுவேன்?” என்று மணியிடம் ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார் தினேஷ். ஆனால் சில நிமிடங்களிலேயே ஒரு சண்டை வந்தது. தினேஷ் பூரி சுடும் முறையைப் பற்றி அர்ச்சனா கமெண்ட் செய்ய “அவ்வளவு ஆர்வம் இருந்தா நீயே சமையல் செய்யணும்” என்று பட்டென்று சொன்னார் தினேஷ். அப்போதைக்கு சமாளித்து பேசி விட்டு வந்தாலும் இதனால் அர்ச்சனாவின் மனம் புண்பட்டது. “குறை சொல்லிட்டே இருந்தா எனக்குப் பிடிக்காது. இன்னமும் அஞ்சே நாள்..” என்று அவர் மாயாவிடம் புலம்ப “அவங்க சமையல் பண்றாங்கன்னா விட்ருங்க” என்று சமாதானம் சொன்னார் மாயா.

மற்றவர்கள் உத்திகளை விட தன்னுடைய உத்தி எப்படி மேம்பட்டது?

“இதான் ஃபைனல் வீக்கா. எனக்கு ரொம்ப போரடிக்குது” என்று குழந்தை மாதிரி அழுது ஜாலியாக கத்தினார் அர்ச்சனா. ‘அப்படியா.. சரி. ஒரு முக்கியமான டாஸ்க் ஏற்பாடு பண்றேன். வந்து சேருங்க’ என்று பிக் பாஸ் உள்ளே நினைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் ஆட்ட யுக்திகளைச் சொல்லி, அவற்றை விட தன்னுடையது எவ்வாறு மேம்பட்டது என்று விளக்க வேண்டும்.

இது சற்று இழுவையான டாஸ்க்காக இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் இந்த அலசல் முக்கியமானது. இதன் மூலம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பார்வையாளர்கள் தொகுத்துக் கொள்ள உதவும். அது மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எத்தனை விழிப்பாக இருந்து தன்னுடைய மற்றும் மற்றவர்களின் ப்ளஸ், மைனஸ் பாயிணட்டுகளை கவனித்து வைத்திருக்கிறார்கள் என்பதும் புரியும். இதில் எத்தனை சதவீத உண்மை, பொய் இருக்கிறது என்பதை பார்வையாளர்கள்தான் பிரித்தறிய வேண்டும். இந்த டாஸ்க்கில் பார்வையாளர்களும் இணைந்து ஆட வேண்டும். அப்போதுதான் சரியான நபருக்கு வாக்களிக்க முடியும்.

முதலில் எழுந்தவர் தினேஷ். “விஷ்ணு இருபத்து நான்கு மணி நேரமும் ஸ்ட்ராட்டஜி பத்திதான் யோசிப்பாரு. அதனாலேயே மாறி மாறி டவுன் ஆவாரு. நான் அந்த மாதிரி இல்ல. மணி வந்து விட்டுக்கொடுத்து பட்டும் படாம ஆடுவார். நம்ம கிட்ட அந்த மாதிரியான கவச ஆட்டம்லாம் கிடையாது. அர்ச்சனா ரொம்ப கிளவர். பாயிண்ட்ஸ்லாம் தெளிவா பேசுவாங்க. ஆனா ஸ்பேஸ் கொடுக்காம மத்தவங்க பேச்சுல ஓவர்லாப் பண்ணுவாங்க. நான் பேச வேண்டியத மட்டும்தான் பேசுவேன். விஜய் ரீஎன்ட்ரில கிளாரிட்டியா வந்த மாதிரி இருந்துச்சு. ஆனா காமன் ஸ்மூத் எபிசோடா ஆடறாரு. நம்ம கிட்ட அதெல்லாம் கிடையாது. மாயா செம ஸ்மார்ட். ஒரு பிராசஸ்ல மத்தவங்களை உள்ளே எப்படி கொண்டு வர்றதுன்னு அவங்களுக்குத் தெரியும். அன்பு செஞ்சு. உதவி பண்ணி மத்தவங்களை தக்க வெச்சுப்பாங்க. எனக்கு அப்படி குறிப்பிட்ட ஜோன்லாம் கிடையாது” என்று அலசி முடித்தார் தினேஷ்.

‘எண்டர்டெயின்மென்ட்றது வெறும் காமெடி மட்டுமே கிடையாது’

அடுத்து எழுந்தவர் மாயா. இவரது விளக்கம் வித்தியாசமாகவும் தீர்க்கமாகவும் இருந்தது. “என் ஸ்ராட்டஜி டிராமாதான். எண்டர்டெயின்மென்ட்றது வெறும் காமெடி கிடையாது. அதில் நிறைய ஜானர் இருக்கு. வம்பு பேசறது, முரண்படறது..ன்னு எல்லாமே எண்டர்டெயின்மென்ட்தான். தினேஷை விடவும் நான் எப்படி பெட்டர் பிளேயர்னா, நான் எதிராளியை பேச விடுவேன். விஷ்ணு நிறைய வார்த்தைகளை விட்டுவாரு. டிரிக்கர் ஆயிடுவாரு. நான் ஆனதே கிடையாது. மணிக்கு என்னன்னா. ரிலேஷன்ஷிப் முக்கியம். ஆனா நீ இதைப் பண்ணாதேன்னு ஒருத்தரை கண்ட்ரோல் பண்ணக்கூடாது. நான் அப்படிச் செஞ்சதில்லை. (ரவீனா – பூர்ணிமா). அர்ச்சனா சூப்பரா பேசுவாங்க. ஆனா அதைச் சரியா பயன்படுத்தலை. வெறும் எமோஷனல் டிராமாதான். நான் இங்க செய்தி மட்டும்தான் சொல்லியிருக்கேன். விஜய் ரொம்ப பேலன்ஸ்ட். அவருக்கு வராதது எனக்கு வரும். அவர் பட்டுன்னு வாய்ஸ் அவுட் பண்ண மாட்டாரு” என்று முடித்தார்.

அடுத்து வந்தவர் விஷ்ணு. “தினேஷ் ஒரு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காம இழுத்துட்டே போவார். நான் அப்படியில்ல. அதுக்கு தீர்வு தேடுவேன். மணி யார் வழிக்கும் போக மாட்டேன்னு இருப்பார். நான் நிப்பேன். அர்ச்சனா பத்தி வெளில கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப டெரர்ன்னு. ஆனா இங்க வந்தப்ப ஆரம்பத்துல இன்னோசென்ட்டான்னு தோணுச்சு. ஆனா புத்திசாலிதான். ஒருத்தர் தப்பு பண்ணா, அதை சாதகமாக பயன்படுத்தி சண்டை போட்டதை பின்னாடி இருந்து அப்சர்வ் பண்ணியிருக்கேன். மாயா எமோஷனல் வெச்சு கேம் ஆடுவாங்க. சாஃபட் டார்கெட்டை இவங்களே நேரா அடிச்சிடுவாங்க. ஹார்ட் டார்கெட்டை வெயிட் பண்ணி சுத்தி வந்து அடிப்பாங்க. எமோஷனை வெச்சு நான் பிளே பண்ணதே கிடையாது” என்று விஷ்ணு முடிக்க மாயா சர்காஸ்டிக்கான சிரிப்பை உதிர்த்தார்.

‘மணி கோரியோ பண்ணதில்ல’ – விஜய்யின் அநியாய குற்றச்சாட்டு

தினேஷ் பாராட்டும்படியாக விஜய்யின் அலசல் ஏறத்தாழ துல்லியமாக இருந்தது. “தினேஷ் பழைய சுமைகளை சுமக்க மாட்டார்ன்னு சொல்றாங்க. அப்படி கிடையாது. அப்படி சொல்லி ஏமாத்தியிருக்காரு. நான் நிறைய இடத்துல கண்டுபிடிச்சிருக்கேன். விஷ்ணு நல்ல பிளேயர்தான். ஆனா வீக்கான போட்டியாளர்கள் கிட்டதான் மோதுவாரு. நான் ஸ்ட்ராங்கா இருக்கறவங்க கிட்டதான் மோதுவேன்” என்று தொடர்ந்த விஜய், மணியைப் பற்றி அடுத்து சொன்ன புகார் அபாண்டமாக இருந்தது. “டாஸ்க் தவிர்த்து மணி இங்க கோரியோ பண்ணி நான் பார்த்ததே இல்லை. அதிகமாக பண்ணியிருக்கணும்” என்றதும் மணியின் முகம் சோர்வில் விழுந்தது. மணியின் பெரிய பிளஸ்ஸே நடனம்தான். அதிலேயே கை வைத்தால்? விஜய்யின் கருத்தை தினேஷ் மறுத்தார். மணியும் தன்னுடைய முறை வரும் போது இதற்கு விளக்கம் அளித்தார்.

விஜய்யின் பேச்சு தொடர்ந்தது. “அர்ச்சனா எப்படின்னா.. நானே ஒண்ணு கிரியேட் பண்ணி.. நானே அதுக்கு ஆன்ஸர் கண்டுபிடிப்பேன். ஆறு சீசனையும் கரைச்சுக் குடிச்சிருக்காங்க. ஜாக்பாட் டாஸ்க்ல அவங்க பாடி லேங்வேஜ் வேற மாதிரியா இருந்தது. அக்ரஸன் தெரிஞ்சது. குழந்தைத்தனமா இருக்கறவங்க கிட்ட அப்படி வராது. பத்து தடவை ஒரு விஷயத்தை பேசிட்டே இருந்தா, ஒருமுறையாவது டிவில வந்துரும்னு அவங்களுக்குத் தெரியுது. என் கிட்ட வந்தாலே நான் ஆஃப் பண்ணிடுவேன். மாயா மைண்ட் கேம். வேணும்ன்ட்டே ஒண்ணை நோண்டுவாங்க. மத்தவங்க காதில விழற மாதிரி பேசுவாங்க. நான்லாம் அதை பிளாக் பண்ணிடுவேன்” என்று முடித்தார்.

அடுத்து வந்த மணிக்கு தர்க்கத் திறனுடன் பேசத் தெரியவில்லையென்றாலும் சுருக்கமாக பாயிண்ட்டுகளை முன்வைத்தார்.ஒவ்வொருவருடனும் தன்னை ஒப்பிட்டு ‘நான் அப்படி இல்ல’ என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார். தன் உத்தியை விளக்கவில்லை. “தினேஷ் அங்கயே வார்த்தைகளை விட்டுவாரு. கிழிச்சிடுவாரு. நான் அப்படி இல்ல. புலம்பல்தான் விஷ்ணுவோட ஸ்ட்ராட்டஜி. அப்புறம் மாட்டிப்பாரு. நான் புலம்பியதில்ல. சின்ன விஷயங்களை ஊதிப் பெருக்கிடுவாங்க அர்ச்சனா. நான் அப்படி இல்ல. விஜய் ரீஎன்ட்ரி முழுக்க சேஃப் கேம். நான் கோரியோ பண்ணதில்லன்னு சொன்னாரு. நெறைய இடத்துல பண்ணியிருக்கேன். மாயா என் கிட்டயே டிராமா பண்ணியிருக்காங்க. ஒரு டாஸ்க்ல நான் ஜெயிச்சவுடன் வேற முகம் காட்டினாங்க. எண்டர்டெயின்ட்மென்ட்டா இருந்தா நான் போயிடுவேன். ஆனா ஸ்ட்ராட்டஜின்னா அவங்க பக்கத்துலயே போக மாட்டேன்” என்று முடித்தார்.

‘மாயா என்னை விட பெட்டர் பிளேயர்’ – அதிர்ச்சியான வாக்குமூலம் தந்த அர்ச்சனா

“ஹலோ..அந்த கலர் டாஸ்க் உங்களுக்குப் புரியவேயில்ல. நான்தான் சொல்லிக் கொடுத்தேன்” என்று மாயா சொன்னதை தினேஷூம் ஒரு மாதிரியாக வழிமொழிந்தார். நிறங்களை நினைவு வைத்துக் கொள்ளும் டாஸ்க்கில் வேண்டுமென்றே தோற்றால் ஒருவரை நாமினேட் செய்ய முடியும் என்கிற மாதிரியான ஆட்டம் அது என்பது தினேஷின் விளக்கம். ஆனால் மணி சமாளித்தாலும் ஒப்புக் கொள்ளவில்லை.

அடுத்து வந்தவர் அர்ச்சனா. “உக்காந்துக்கம்மா” என்றார் மாயா. இதன் மூலம் அர்ச்சனா நீண்ட நேரம் பேசப் போகிறார் என்பதற்கான கிண்டல் போலிருக்கிறது. அர்ச்சனா தன் உரையைத் துவங்க மற்றவர்கள் ஆரம்பத்திலேயே கட்டையைப் போட்டார்கள். “மத்தவங்க சொன்னதுக்கு ரெவ்யூ பண்ணக்கூடாது. உங்க ஸ்ட்ராட்டஜி பத்தி மட்டும் பேசுங்க” என்று கடுமையான ஆட்சேபம் எழுந்தது. “என்னைப் பேச விடுங்க. ஏன் பயப்படறீங்களா?” என்று இன்னமும் அவர்களைக் காண்டாக்கினார் அர்ச்சனா. பிறகு ஒருவழியாக அவரது பேச்சு ஆரம்பித்தது.

“என்னுடையது நோ ஸ்ட்ராட்டஜி. தண்ணி கொடுக்கற சாதாரண விஷயத்துல கூட தினேஷ் என்னென்னமோ யோசிப்பாரு. நான் அப்படிப் பண்ணதில்லை. விஷ்ணுவோட ஒப்பிட்டா, நான் சொந்தமா என் கப்பல்லதான் டிராவல் பண்ணுவேன். அடுத்தவங்க கப்பலை கவுக்கணும்ன்றது என் கேம் பிளான் கிடையாது. மணி ஒரு லிமிட்டோட விளையாடுவாரு. விஜய் பாயிண்ட்லாம் யோசிச்சு வெச்சிக்கிட்டு வார இறுதில மட்டும்தான் பேசுவாரு. வார நாட்கள்லயும் பேசணும். நான் பேசுவேன்” என்று சொன்ன அர்ச்சனா, கடைசியாகச் சொன்னது அதிர்ச்சியானது மட்டுமல்ல அபத்தமானதும் கூட. “மாயா என்னை விட பெட்டர் பிளேயர்” என்று மொத்தமாக விட்டுக் கொடுத்தது ஏற்புடையதல்ல.

ஒரு சாதாரண உரையாடலில் சக ஆட்டக்காரரை பாராட்டுவது வேறு. ஒரு முக்கியமான டாஸ்க்கில், அதிலும் இறுதிக்கட்டத்தில் ‘என்னை விடவும் இவர் சிறந்த ஆட்டக்காரர்’ என்று சொந்த சூன்ய வாக்குமூலம் தருவது ‘படுத்தே விட்டானய்யா’ என்கிற வரிக்கு சமமானது. ‘தெளிவாக பாயிணட்டா பாயிண்டா பேசுவார்’ என்று மற்றவர்களால் புகழப்படும் அர்ச்சனா, ஏன் சுருக்கமாக தன் பேச்சை முடித்துக் கொண்டார்? ஏன் மாயாவிடம் சரணாகதி அடைந்தார்? தன்னுடைய பேச்சின் ஆரம்பத்தில் மற்றவர்கள் குறுக்கிட்ட எரிச்சலின் விளைவா? எதுவாக இருந்தாலும் தன் தகுதியைத்தான் அவர் உயர்த்தி வைத்துப் பேசியிருக்க வேண்டும். ஏன் இறுதிக்கட்டத்தில் மாயாவிற்கு சாதகமாக காற்று வீசுகிறது? விநோதம்தான்.

“டைட்டில் வின்னருக்கு 15 லட்ச ரூபா மனை தராங்களாம். என்னை மறந்துடாதீங்க” என்று குறும்பாக அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. “நான் ஏதோ பிராடுத்தனம் பண்ணிட்ட மாதிரியே சொல்றாங்க. ஏன் இப்படி வன்மத்தைக் கக்கறாங்க. பட்டு பட்டுன்னு பேசினா எனக்கு ஹர்ட் ஆகுது ” என்று புலம்பிய அர்ச்சனாவை சமாதானப்படுத்தினார் மாயா.

விஷ்ணுவிற்கு கிடைத்த வீடியோ கால் வாய்ப்பு

‘கலர் டாஸ்க்லாம் பெரிய மேட்டர் கிடையாது. மாயாவோட மூவ் ஒவ்வொண்ணும் எனக்குத் தெரியும்” என்று மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விஷ்ணு. “விஷ்ணு மணி கிட்டலாம் நேர்மையே இருக்காது. எனக்கு அது பிடிக்காது. மணிக்கு கேம் பத்திய புரிதலே கிடையாது.” என்று அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா.

விஷ்ணுவிடம் அதிகமான நாணயங்கள் இருப்பதால் அதை வைத்து அவர் தன் நண்பர்களிடம் வீடியோவில் பேச முடியும் என்கிற வாய்ப்பை தந்தார் பிக் பாஸ். “தலைகுனிய வைக்கற மாதிரி நான் எதையும் பண்ணிடல்லல.. பெட்டி எடுக்காம போனது நல்ல முடிவுதானே..

“ என்றெல்லாம் தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொண்டார் விஷ்ணு. “ஏண்டா இப்படி புலம்பிட்டே இருக்கே. ஃபன் பண்ணு.. ஜாலியா இரு. நீ ஒன் மேன் ஆர்மி மாதிரி. தன்னம்பிக்கையா பேசு.” என்று வந்தவர்கள் சரியான உபதேசத்தை தர விஷ்ணுவின் முகத்தில் தெளிவு வந்தது. “என்ன பண்றது.. இங்க கொலைவெறியா இருக்கானுவ.. யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாதுன்னு நெனக்கறேன். அடுத்த டாஸ்க்ல பாரு. எல்லோரையும் ஜாலியா வெச்சு செய்யறேன். வோட்டு போடச் சொல்லுங்க” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் விஷ்ணு.

இந்த வீடியோ அழைப்பு விஷ்ணுவின் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? முதல் ஃபைனலிஸ்ட் ஆனாலும் மந்திரித்து விட்ட கோழி மாதிரியே மந்தமாக சுற்றிக் கொண்டிருக்கும் விஷ்ணுவிடம் மறுமலர்ச்சி ஏற்படுமா? பார்க்கலாம்.

மற்றவர்களின் உத்திகளை அலசிக் காயப் போட்ட ‘ஸ்ட்ராட்டஜி டாஸ்க்கில்’ யார் அதிகமான பொய்களைப் பேசினார்கள்? யார் நேர்மையாக நடந்து கொண்டார்கள்? கமெண்ட்டில் வந்து சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.