சுற்றுச்சூழல் மீதான அக்கறை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. மனித செயல்பாடுகள் மூலம் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்பாட்டில் வைக்க, அதிகளவு மாசுள்ள காற்றை வெளியிடும் நாடுகளில் காற்றின் மீதான ஒரு அளவுகோல் வைக்கப்படும். அந்த அளவை தாண்டி அந்த நாடு மாசுள்ள காற்றை வெளியிடக்கூடாது. 

மீத்தேன் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உலகம் முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நாடுகள் `உலக மீத்தேன் உறுதிமொழியில்’ (Global Methane Pledge) கையெழுத்திட்டுள்ளன. 

air pollution

பலரும் பொதுவாக அறிந்த கார்பன் டை ஆக்ஸைடு பல நூற்றாண்டுகளாகக் காற்றிலேயே இருந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மீத்தேன் அப்படியில்லை. மீத்தேன் பத்தாண்டுகளுக்கு மேல் காற்றில் நீடிக்காது. ஆதலால் இதனைச் சமாளிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

மீத்தேன் உறுதிமொழியின்படி, உலகளவில் மீத்தேன் உமிழ்வை 30 சதவிகிதம் குறைப்பது, 2050-ல் புவி வெப்பமயமாதலை 0.2 செல்சியஸ் (0.36F) வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

இந்த நிலையில் இயற்கை எரிவாயு குழாய்களில் ஏற்படும் கசிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்தி மீத்தேன் அளவை குறைக்கப் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதில் நியூசிலாந்து நாடு பல முயற்சிகளை செய்து வருகிறது. 

நியூசிலாந்தை பொறுத்தவரையில் அங்கு 43 சதவிகித அளவு மீத்தேன் உள்ளது. இதற்கு காரணம் அங்குள்ள மாடுகளும், ஆடுகளும்தான். நியூசிலாந்தில் சுமார் 10 மில்லியன் மாடுகளும், 26 மில்லியன் ஆடுகளும் உள்ளன.  

கால்நடை வளர்ப்பு நல்லது தானே என பலரும் நினைக்கலாம். சிக்கல் என்னவென்றால், ஆடுகளும் மாடுகளும் விடும் ஏப்பம் மற்றும் சாணம் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு சார்ந்த செயல்பாடுகள் மூலம் மீத்தேனின் அளவு நியூசிலாந்தில் அதிகரித்துள்ளது.

இதில் மாடுகள் விடும் ஏப்பம், மீத்தேன் உமிழ்தலில் முக்கிய விஷயமாக பார்க்க முடிகிறது. பண்ணைகளில் வளர்க்கப்படும் உயிரினங்களின் செரிமான பாதையில் நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் விளைவால் மீத்தேன் உண்டாகி, ஏப்பம் மூலமாக வளிமண்டலத்தில் சேருகிறது.

புல் மேயும் மாடுகள் (சித்தரிப்பு படம்)

நியூசிலாந்தின் மொத்த வாயு வெளியேற்றத்தில் 50 சதவிகிதம் விவசாயத்திலிருந்து வருகிறது. இதில் 43 சதவிகிதம் மீத்தேன் வாயுவாகும். இந்த 43 சதவிகிதத்தில் 85 சதவிகிதம் மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து வருகிறது. இந்த நிலையில் கால்நடை வளர்ப்பில் இருந்து மீத்தேன் உமிழ்வைக் குறைக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சில மாடுகள் அதிகளவு மீத்தேனையும், சில மாடுகள் குறைந்தளவு மீத்தேனையும் வெளியிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து இயற்கையிலேயே குறைந்தளவு மீத்தேன் வெளியிடும் திறன் கொண்ட மாடுகளை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. 

கால்நடைகளின் தீவன சேர்க்கைகளில் (Feed additive) சில மாற்றங்களைச் செய்தது. போவர் (Bovaer) எனப்படும் தீவன சேர்க்கை சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது.

இந்த தீவன சேர்க்கை மாடுகளின் உணவுகளில் சேர்க்கப்படும் பட்சத்தில் மீத்தேன் உமிழ்வை 30 சதவிகிதம் குறைக்கலாம். இருந்தபோதும் வெளியில் மேய்ச்சலுக்காக மாடுகள் விடப்படுவதால் நடைமுறைக்கு இந்த திட்டம் ஒத்து வரவில்லை. 

தடுப்பூசிகள் மற்றும் மரபணுவை மாற்றும் `ஜீன் எடிட்டிங்’ போன்ற தொழில்நுட்பத்தைக் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாடுகளுக்கு தீவனம் (சித்தரிப்பு படம்)

மீத்தேனை தடுக்கும் தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், 2030-க்குள் தடுப்பூசிகள் தயாராகும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது என்று கூறியுள்ளனர்.  

இதோடு குறைந்தளவு மீத்தேன் உமிழ்வை வெளியிடும் காளைகளுடன் பசுக்களை இனப்பெருக்கத்திற்கு விடுவது மீத்தேன் உமிழ்வைக் குறைக்கலாம் என்று கூறியுள்ளனர்.   

2017 முதல் 2030-ம் ஆண்டுக்குள் மீத்தேன் அளவை 10 சதவிகிதம் குறைக்கவும், 2050-க்குள் 24 முதல் 47 சதவிகித அளவு மீத்தேனை குறைக்கவும் 2019-ல் நியூசிலாந்து இரண்டு அடுக்கு சட்டத்தை இயற்றியுள்ளது.

நியூசிலாந்து வேளாண்மை பசுமை இல்ல வாயு ஆராய்ச்சி மையம் (NZAGRC), நேரடியாக இல்லாமல் தடுப்பூசிகள் மற்றும் மீத்தேன் தடுப்பான்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை ஆராயும் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தும் வருகிறது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.