நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் கோவை சூலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன். சாதாரண ரசிகனாக தொடங்கிய அவரின் பயணம், 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் இளம் எம்.எல்.ஏ என்ற உயரத்தை எட்டியது.

விஜயகாந்த்

விஜயகாந்தின் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்த தினகரன், “நான் முதன்முதலாகப் பார்த்த சினிமா கேப்டனுடையதுதான். பள்ளிப் பருவத்திலேயே அவரின் தீவிர ரசிகன். பிளஸ் டு படிக்கும்போது எங்கள் பகுதியில் ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன். சிறிய வயதில் இருந்தே அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தில் அவரைதான் வைத்திருந்தேன்.

எந்த இடத்தில் பேசினாலும் அவரை ‘மனித தெய்வம்’ என்றே குறிப்பிடுவேன். முதன்முதலாக உடுமலைப்பேட்டையில் ‘நெறஞ்ச மனசு’ படத்தின் சூட்டிங்குக்காக வந்திருந்தபோது அவரை சந்தித்து போட்டோ எடுத்தேன். கட்சி தொடங்கியவுடன் என்னை ஒன்றிய செயலாளராக்கினார். ஒரு வருடத்திலேயே எனக்கு மாவட்டச் செயலாளராகப் பதவி உயர்வு கொடுத்தார்.

தினகரன்

27 வயதிலேயே மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததால், அரசியலில்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியும் கொடுப்பார். ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும், அவர் மனதுக்குப் பிடித்த 10 மாவட்டச் செயலாளர்களின் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டார். அவரின் சொந்த மகனைப்போல தான் வைத்திருந்தார்.

2011 சட்டசபைத் தேர்தலில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு போராடி ஒரு சீட் வாங்கினார். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க எதிர்ப்பு இருந்தும், கேப்டன் என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரவளித்தார். ‘என் மகன் ஜெயிப்பான்.  எல்லாரும் வேலையை பாருங்க.’ என்று சொன்னார். கேப்டன் தீவிர பிரசாரம் செய்ததால், அந்தத் தேர்தலில் அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். சட்டசபையிலும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொல்லி எங்களை சிறப்பாகவே வழிநடத்தினார்.

தினகரன்
விஜயகாந்துடன் தினகரன்

இப்போதும் சட்டசபையில் கேப்டன் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று வைரலாகும் சம்பவத்தில், உண்மையில் நடந்ததே வேறு. அன்றைக்கு அவர் ஜெயலலிதாவை கைநீட்டி எல்லாம் பேசவில்லை. பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு தவறு என்றுதான் பேசினார். அது தொடர்பான விவாதத்தின்போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டனர். அவர்களைத்தான் கேப்டன் கண்டித்தார். அதை அவர்கள் வேறு மாறி மாற்றிவிட்டனர்.

கேப்டன் தலைமையில்தான் என் திருமணம் நடந்தது. என் குழந்தைக்கு அவர்தான் பெயர் வைத்தார். நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்களிடமும் இறங்கிப் பேசுவார். சீனியர் மாவட்டச் செயலாளர்கள் நிறைந்த கூட்டத்தில்கூட, என்னை எழுப்பி `உன் கருத்தைச் சொல்’ என்று கூறுவார். கடைசியாக பொள்ளாச்சியில் ‘சகாப்தம்’ படம் சூட்டிங் நடந்தபோது அவரைச் சந்தித்துப் பேசினேன். விமானம் தாமதமானதால் பொள்ளாச்சி ராவுத்தர் தோட்டத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு அவருக்கு கோதுமை புரோட்டா வாங்கிக் கொடுத்தோம். அதன் பிறகு அவரிடம் பேசும் வாய்ப்பு அமையவில்லை.

குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது
திருமணத்தில்

எதிரியும்கூட நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனம் கொண்டவர். எனக்குத் தெரிந்து ஒருமுறைகூட யாரையும் தவறாகப் பேசியதில்லை. ரசிகர் மன்றத்தின் கிளை நிர்வாகியாக இருந்த என்னை, எம்.எல்.ஏ.வாக உயர்த்தி அழகு பார்த்தவர். கட்சியை விட்டு விலகும் வரை என்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றவில்லை நான் பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவன். கேப்டன் மீதான ஈர்ப்பால் தேமுதிகவில் பயணித்தேன். அவர் தீவிர அரசியலில் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே தி.மு.க-வில் இணைந்தேன். இருப்பினும் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.