2024 பொங்கல் வெளியீடாக ரஜினியின் `லால் சலாம்’, சிவகார்த்திகேயனின் `அயலான்’, தனுஷின் `கேப்டன் மில்லர்’, சுந்தர்.சி-யின் `அரண்மனை 4′ ஆகிய படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் உற்சாகத்திலிருந்தனர். ஆனால் தற்போது பொங்கல் ரேஸிலிருந்து `லால் சலாம்’ படமும் `அரண்மனை 4′ படமும் பின் வாங்குவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன?

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்…

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் முதலில் தீபாவளி ரேசில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் படம் பொங்கல் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். பொங்கலுக்கு வருவதாக இருந்த விக்ரமின் ‘தங்கலான்’ ஜனவரி 26ம் தேதிக்குத் தள்ளிப்போனது.

‘அயலான்’ படத்தில் சிவா, ரகுல் ப்ரீத்சிங் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். ‘நேற்று இன்று நாளை’ ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டிலேயே ‘அயலா’னின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டனர். அதன் பின், 2019ல் மீண்டும் படப்பிடிப்புக்குக் கிளம்பினார்கள். 2020-லும் படப்பிடிப்பு நடந்தது. கடைசியில் 2021ல்தான் படப்பிடிப்பை நிறைவு செய்தார்கள். அதன்பின், கிராபிக்ஸ் வேலைகளுக்கு போதுமான நேரம் அமைந்ததால், ஏலியன் கதாபாத்திரத்தைச் செதுக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘லால் சலாம்’ படப் பூஜையின் போது…

அடுத்து ‘கேப்டன் மில்லர்’ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம். இந்த ஆண்டே டிசம்பர் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம், ‘கங்குவா’, ‘தங்கலான்’ படங்கள் தள்ளிப்போனதால், பொங்கல் வெளியீடாக வருமென அறிவித்துவிட்டனர். 1930-40 காலகட்டத்தில் நடக்கும் கதை இது. சமூகத்திலிருந்த ஏற்றத்தாழ்வு, பிரச்னைகள் பற்றிப் பேசுகிற ஆக்‌ஷன் டிராமா என்றும் போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிய படமிது என்றும் சொல்கிறார்கள். தனுஷ் இதில் பல தோற்றங்களில் வருகிறார்.

மேற்கண்ட இரண்டு படங்களும் இப்போதைக்கு உறுதியாகப் பொங்கலன்று வெளிவருகின்றன.

தமன்னா

அடுத்ததாக ‘லால் சலாம்’, ‘அரண்மனை 4’ படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகின்றன என்கிறது கோடம்பாக்கம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்து வரும் படம் ‘லால் சலாம்’. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர் எனப் பலரும் நடித்துள்ளனர். திருவண்ணாமலை, செஞ்சி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒரு சிங்கிள் டிராக் கூட சமீபத்தில் வெளியானது. ரஜினியின் பிறந்தநாளுக்கு ஒரு டீசரையும் வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் சில போர்ஷன்களை ரீஷூட் செய்ய வேண்டியிருப்பதால், படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது. இதனால் பொங்கல் ரிலீஸில் பங்கேற்காமல் போகலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

ராஷி கண்ணா

அடுத்ததாக சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ படமும் பொங்கலுக்கு வரவில்லை. சுந்தர்.சி கதை நாயகனாகவும், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சுந்தர்.சி-க்கு ‘அரண்மனை’ பாகங்கள் ஹிட் கொடுத்திருப்பதால், இந்த நான்காவது பாகத்தையும் பக்காவாகக் கொண்டு வர நினைக்கிறார். எனவே படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை நினைத்த அளவிற்குக் கொண்டு வர, இன்னும் சில வாரங்கள் தேவைப்படுவதால், அதனைத் திருப்திகரமாக முடித்த பின்னரே, படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

ஆக, பொங்கல் ரேஸில் இப்போதைய நிலவரப்படி `அயலான்’ மற்றும் `கேப்டன் மில்லர்’ என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.