மிக்ஜாம் புயல் சென்னையை, சென்னை மக்களை ஒருவழியாக்கிவிட்டது. இன்னும் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து சென்னை மக்கள் மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாகியிருக்கின்றன. தரைத்தளத்தில் இருக்கும் வீடு மூழ்கி, முதல் மாடியில் இருக்கும் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து பல வீட்டு உபயோகப் பொரு்ள்களை சேதப்படுத்தியிருக்கிறது.

மெத்தை, சோஃபா, கட்டில், கபோர்டு மாதிரியான வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்த ஃபர்னிச்சர்கள் முற்றிலும் பாழாகிவிட்டன. இந்நிலையில் புதிய ஃபர்னிச்சர்கள் வாங்குபவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், மரத்தினால் செய்யப்பட்ட ஃபர்னிச்சர்களை வாங்குவது சிறந்ததா, ஃபோம்களில் செய்யப்பட்ட ஃபர்னிச்சர்கள் சிறந்ததா என்கிற பல கேள்விகளுடன் முன்னணி ஃபர்னிசர் கடை உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

லைஃப் & லிவ்விங் ஃபர்னிசர்ஸ் மேலாளர் சேக் முஹம்மது

இது குறித்து நம்மிடம் பேசிய லைஃப் & லிவ்விங் ஃபர்னிசர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சேக் முஹம்மது, “இன்றைய காலங்களில் ஃபர்னிச்சர் பயன்பாடு என்பது இல்லங்களில் ஓர் அங்கமாகியிருக்கிறது. காலத்திற்கு ஏற்ப அவை அவ்வபோது மாறுதலுக்கு உட்படும். சுவருடன் இருக்கும் அலமாரி பின் இரும்பு பீரோவாக உருவெடுத்தது. பின் அது மரத்திலான கப்போர்டுகளாக மாறியது. கயிறு கட்டில் இரும்பு கட்லாகி பின் மர கட்டிலாக உருமாறி இருக்கிறது. ஃபர்னிச்சர்களை தவிர்த்து நம் வீடுகளை என்றைக்கும் முழுமைப்படுத்த முடியாது.

ஆனால் பேரிடர் காலங்களில் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலால் பெரும்பாலான ஃபர்னிச்சர்கள் வீணாகி பயனற்று போவதால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மக்கள் ஃபர்னிச்சர்களை மாற்ற வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்” என்றவர் ஃபர்னிச்சர் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னார்.

“நாம் மரத்தினால் ஆன கட்டில், மேசை போன்றவற்றை தேர்வு செய்யும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். தேக்கு, ரோஸ்வுட், மஹோகனி, படாக் போன்ற மரங்களில் செய்யப்பட்ட பொருட்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து இருக்கும். வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தாலும் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தண்ணீருக்குள் இருந்தாலும் இந்த மரத்தினாலான பொருட்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படுவது இல்லை. குறிப்பாக தேக்கு மரத்தில் இயற்கையாகவே அழுகல், பூச்சி அரிப்புகளை தடுக்கக் கூடிய ஆற்றல் இருப்பதால் இது வெள்ளம் ஏற்படும் நேரத்திலும் எந்த சேதமும் ஏற்படாது.

வீடு பாதிப்பு

ரோஸ்வுட் மற்றும் மஹோகனி போன்ற மரங்களின் உறுதியான தன்மையினால் அவற்றில் செய்யப்படும் மரப்பொருட்களுக்கு ஆயுள் அதிகம் என்கிறார்கள் மரவியாபாரிகள். ஆனால் தேக்குக்கு இணையாக ஷீஷாம் மரத்தை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். ஷீஷாம் மரமும் கவர்ச்சிகரமான பொருட்கள் செய்ய ஏதுவான மரமாக இருந்தாலும் மோசமான வானிலையை கையாளுவதில் ஷீஷாமை விட தேக்கு மரமே சிறந்தது.

நோபன், அசார்டட் போன்ற மரங்களை தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. குறிப்பாக இந்த மரங்களில் செய்யப்படும் கட்டில் நீண்ட காலம் உழைப்பதில்லை. மேலும் வெள்ள நேரங்களில் குப்பைக்கு போகும் முதல் மரப்பொருள் இதுவாக தான் இருக்கும் . எனவே விலை குறைவு என்று எதை எல்லாம் நாம் தேர்வு செய்கிறோமோ அதெல்லாம் காலம் கடந்து நிற்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிஃப்யா ஃபர்னிசர்ஸ் கடையின் உரிமையாளர் ஹீசைன் கூறுகையில், ” கட்டிலுக்கு அடுத்தப்படியாக சோஃபாக்களுக்கே முன்னுரிமை பெறுகின்றன. ஹாலிலோ வரவேற்பு அறையிலோ சோபா இல்லாவிட்டால் அந்த இடம் முழுமை பெறாது. அவற்றை தேர்வு செய்வதிலும் நாம் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயர் ரக மரம், சோஃபாவின் உள்ளே இருக்கும் குவாலிட்டியான ஃபோம், மேலே உள்ள உயர்தர ஃபேப்ரிக்கேசன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் சோஃபா நீரில் மூழ்கினாலும் அதை காய வைத்தால் போதுமானது. ஒரு வேளை நீரில் மூழ்கினாலும் மேல் உரையை மட்டும் மாற்றினால் போதுமானது. ஆனால் முழுக்க முழுக்க ஃபோமில் செய்யப்படும் கட்டில் மெத்தை தண்ணீர் பட்டாலே பாழாகி விடும். இதற்கு மாற்றாக நாரில் செய்யப்படும் மெத்தை, தலையணை, லேடக்ஸ் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் நல்லது” என்று தெரிவித்தார்

வீட்டுக்குள் வெள்ளம்

மரத்தினால் செய்யப்படும் கட்டில், பீரோ, மேசைக்கு மாற்றாக ஸ்டீல் கட்டில்கள் உழைக்கவே உழைக்காது என்கிறார்கள் இத்துறை சார்ந்த நிபுணர்கள். மரத்தினால் செய்யப்படுவதற்கு ஈடாக எதையும் சமன் செய்ய முடியாது. மேலும் பிளாஸ்டிக், ஸ்டீல் போன்றவற்றினால் செய்யப்படும் பொருட்களில் அடிக்கடி பழுது ஏற்படும். மேலும் அதற்கு அதிக அளவில் பராமரிப்பு தேவை. ஆனால் மரப்பொருட்களுக்கு அது தேவையில்லை.

மிக முக்கியமாக பார்டிக்கல் போர்டு என்ற துகள் பலகையினால் செய்யப்படும் பொருட்கள் கூடவே கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். பார்டிக்கல் போர்டு என்பது மரக்கழிவுகள் அதாவது மரத்துகள்கள், மரத்தூசி போன்ற கலவையை பயன்படுத்தி செய்யப்படுவது. இது மிக மலிவான விலையில் கிடைக்கிறது. இது எளிதில் தண்ணீரை உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளதால் இது அடிக்கடி வெள்ளத்தை சந்திக்கும் சென்னை போன்ற பகுதிக்கு ஏற்றது இல்லை. இதற்கு நீடித்து உழைக்க கூடிய தன்மையும் இல்லை.

நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது MDF (Medium Density Fibre) என்று சொல்லக்கூடிய இழைப்பலகையினால் செய்யப்பட்ட பொருட்கள். இது மரத்தின் நார் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதுவும் மலிவாக கிடைக்கிறது. இதுவும் தண்ணீர் பட்டால் உடனே வீணாகிடும். இதை கவனமுடன் கையாள வேண்டும் இல்லையெனில் எளிதாக சேதம் அடைந்து விடும். அடுத்ததாக நாம் தவிர்க்க வேண்டியது பிளைவுட். இதில் பலவகை இருந்தாலும் தேவைக்கு ஏற்ப ஈரத்தை எதிர்க்க கூடிய பிளைவுட் இருக்கிறது வேண்டுமானால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மரப்பொருள்களை கரையான் அரிக்கும் சூழலும் உண்டு. எனவே எந்த பொருளை எந்த மரத்தில் செய்ய வேண்டும் என்பதை நுகர்வோர் சரியாக தேர்தெடுத்தால் பேரிடர் காலங்களில் நமது ஃபர்னிச்சர்களை பாதுகாக்க முடியும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.