அரபிக்கடலில் நேற்று எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் கப்பல் மீது திடீரென்று டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. இந்த கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் என்ற தகவல் வெளியானதால் அதன் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல் இரானில் இருந்து நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்பகுதியில் நேற்று, 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது இரானில் இருந்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது ஜப்பானுக்கு சொந்தமான கப்பல் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அறிவித்தது.

நெதர்லாந்து இயக்கி வரும் ஜப்பானுக்கு சொந்தமான CHEM PLUTO என்ற இக்கப்பல் இந்தியக் கடலோரப் பகுதியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டது. இரானில் இருந்து டிரோன் மூலம் ஏவப்பட்ட ஒரு வழி தாக்குதல் என்று என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கப்பல் மீது தாக்குதல்

கடந்த அக்டோபர் 7 -ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களையும் கப்பல் வழித்தடங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தையும் இந்த சம்பவம் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்க கடற்படை அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இரானிய அரசாங்கமும், ஏமனில் உள்ள அதன் கூட்டணி ராணுவப்படையும் காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சித்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டுக்குப் பிறகு வணிகக் கப்பல் மீது இரான் நடத்தும் ஏழாவது தாக்குதல் என்று பென்டகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரானிய தூதுக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்த கருத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கடலில் ஒரு முக்கியமான கப்பல் பாதையில் ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கர் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான MV Chem Pluto என்ற வணிகக் கப்பலுக்கு உதவ இந்தியக் கடற்படையும் இந்திய கடலோரக் காவல்படையும் விரைந்தது. அந்த கப்பல் சவூதி அரேபியாவின் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து மங்களூருக்கு சரக்கை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் காலை 11.30 மணியளவில் தாக்கியதாக யு.கே கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், கப்பல் அதன் மின் உற்பத்தி அமைப்புகளில் சேத மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக மும்பை போஸ்ட் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் “இந்திய கடலோர காவல்படை கப்பல் விக்ரம், அதனை அழைத்துச் செல்லும். இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டு மையம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.