1991-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பெருமழையின் காரணமாக தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, பாபநாசம் சிவன் கோயில் கோபுரம் மட்டுமே வெளியே தெரிந்ததாக 32 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து நெல்லை மக்கள் சிலாகித்துப் பேசுவார்கள்.

ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, தற்போது வரை விடாமல் பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

150 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த பெருமழை எனப் பலரும் பல விதங்களில் தங்களின் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், குமரி கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் டிச., 16 முதல் டிச., 19-ம் தேதி காலை வரை மழை பொழிவு இருக்கும் என இந்தப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” கொடுத்துள்ளது.

டிச., 16-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை, 17-ம் தேதி மதியம் வரை விடாமல் பெய்தபோதுகூட, நெல்லை மக்கள் அசரவில்லை. ஆனால் அதற்குப் பிறகும் விடாமல் பெய்த மழையும், அடுத்தடுத்து வந்த வானிலை அறிவிப்புகளும், வீடுகளுக்குள் புகுந்த மழை நீரும் நெல்லை மக்களுக்கு புதிது என்பதால் அவர்களை பேரச்சத்தில் ஆழ்த்தியது.

17-ம் தேதி மாலையிலேயே நெல்லை மாநகரின் மனக்காவலம்பிள்ளை நகர், என்.ஜி.ஓ காலனி, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சேவியர் காலனி, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்துப்பூந்துறை போன்ற பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாகின. சில இடங்களில் வீடுகளின் தரைத்தளங்கள் முழுவதும் மூழ்கின. இதேபோல, நெல்லை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்களும் நிறைந்து, கரைகள் உடைந்ததால், வெள்ள நீர் புகுந்து பெரும்பாலான கிராமங்கள் தனித் தீவாகின.

இந்த நிலையில், 17-ம் தேதி மாலை நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட 30,000 கனஅடி நீரானது, நள்ளிரவில் 1 லட்சம் கன அடியாக உயர்ந்ததையடுத்து, தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கரையோரப் பகுதி மக்கள் மீட்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியிலுள்ள தருவைக்குளம் உடைந்ததால், அந்தச் சாலை துண்டிக்கப்பட்டது. இதேபோல நெல்லையிலுள்ள வடக்கு புறவழிச்சாலை பாலம் நீரில் மூழ்கியது. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் மாவட்ட எல்லையான வல்லநாடு பகுதியிலும் கடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியிலுள்ள பல்வேறு பகுதிகளில் கடும் மழை, வெள்ளம் காரணமாக சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இந்தப் பகுதிகளுக்குப் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நெல்லை அனைத்து பகுதிகளிலிருந்தும் தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிந்துப்பூந்துறை, சேவியர் காலனி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஏராளமான படகுகள் கொண்டுவரப்பட்டன. 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 84 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி அருகேயுள்ள செய்துங்கநல்லூரில் மண் அரிப்பால், தண்டவாளம் சேதமடைந்துள்ளதால், நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்குப் புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் திருவைகுண்டம் அருகே நடுவழியில் நேற்றிரவு முதல் நிற்கிறது. அதிலுள்ள பயணிகளை மீட்க இயலாத அளவுக்கு ரயிலின் முதல் படி வரை வெள்ளம் பெருகி காணப்படுகிறது. இதனால் ரயிலிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும், திருநெல்வேலி மாவட்ட எல்லையான வல்லநாடு, முறப்பநாடு, அகரம் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்தப் பகுதிகள் தனித்தீவாக மாறின. அங்கு சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் உடையார்பட்டி, பொட்டல் போன்ற பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இதில் குறிப்பாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மரத்தில் மேலெறி தப்பித்துள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் காட்சிகள் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே ரயிலில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. அவற்றை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஓய்வின்றி, வெள்ளம் பாதித்த பகுதிகளிலுள்ள மக்களை மீட்கும் பணிகளிலும், அவர்களுக்கு உணவு, உறைவிடம் ஏற்படுத்தித் தரும் பணிகளிலும் அயராது செயல்பட்டு வருகின்றனர்.

இதேபோல, இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். நகரின் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் மக்கள் உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக அலைபாய்ந்தனர். பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருந்ததால், திறந்திருந்த ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல, இன்று காலை 12 மணிக்கு மேல் தற்போது வரை செல்போன் சிக்னல் கிடைக்காமலும், இணைய இணைப்பு இன்றியும் பொதுமக்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல நெல்லையை அடுத்த நடுகல்லூர், நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் என்ற விவசாயி மழை வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். இவரோடு சேர்த்து இதுவரை மழை வெள்ளத்துக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலுள்ள மக்களுக்குத் தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மழை, வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்த கணக்கீடு செய்யும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதிகளில் விடாமல் மழை பெய்தாலும், நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமழையின்றி, மழைத் தூரல் மட்டுமே காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக மாலைக்கு மேல் மழையின்றி காணப்படுவதால் நெல்லை மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 35 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால், இரவு 10 மணிக்கு முதல் படிப்படியாக ஆற்றில் செல்லும் நீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது. இதனால், நெல்லை நகர் பகுதிகளில் உள்ள வெள்ளமும் வடிந்து விடும் என நம்பப்படுகிறது.

இருப்பினும், நாளை காலை வரை “ரெட் அலர்ட்” அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இன்று இரவும் மழை வெளுத்து வாங்கி விடுமோ என நெல்லை உட்பட தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.