நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பல இடங்கள் முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியிருக்கின்றன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழிகுடி பகுதியும் ஒன்று.

தாமிபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தின் நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்து சாலைகளெல்லாம் உடைபட்டிருக்கின்றன. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திலிருந்து யாருமே வெளியேற முடியாமல் தவித்து வந்திருக்கின்றனர். வீடுகளிலும் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. உணவுப்பொருள்களுக்குமே தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதிகளவில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதால் நிலைமை இன்னும் மோசமடைந்து வருவதால் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் செய்தியைத் தெரிவித்திருக்கின்றனர் ஆழிகுடிவாசிகள்.

அனவரதநல்லூர், வசவப்புரம் போன்ற அருகிலுள்ள கிராமத்து மக்கள் ஆழிகுடி மக்களுக்கு உதவத் தயாராக இருந்தாலும் அவர்களாலும் வெள்ளநீரைக் கடந்து ஊருக்குள் நுழைய முடியவில்லை. தங்களின் அருகே இருக்கும் கிராம மக்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்த வீடியோவும் இணையத்தில் வெளியானது. தீயணைப்புப் படையினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு அருகில் சென்ற போதும் அவர்கள் வைத்திருக்கும் படகால் அதற்கு மேல் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மக்களே தங்களின் முயற்சியில் உவரியிலிருந்து ஒரே ஒரு படகை வரவழைத்து சிரமப்பட்டு ஆழிகுடி கிராமத்திற்குள் நுழைந்திருக்கின்றனர்.

ஆழிகுடி கிராமவாசியான தினேஷ் என்பவரிடம் பேசினோம், “தாமிரபரணி தண்ணியெல்லாம் உள்ள வந்து வெளிய போற எல்லா ரோடும் ப்ளாக் ஆயிருச்சு. காலைல இருந்தே அரசாங்கம் கொடுத்த மீட்பு எண்ணுக்குத் தொடர்பு கொண்டுட்டே இருக்கோம். யாருகிட்ட இருந்தும் பதில் வரல. வாட்ஸ் அப்ல மெசேஜூம் பண்ணோம். எந்தப் பலனும் இல்ல. பக்கத்து கிராம மக்கள் சொல்லி விஷயம் தெரிஞ்சு வந்த தீயணைப்பு படையினராலும் ஒண்ணுமே பண்ண முடியல. கடைசில எங்க ஊரு டீச்சர் ஒருத்தரு தன்னோட பழக்கத்துல உவரில இருந்து ஒரு படகை வர வைச்சாரு. சாயங்காலம் 5 மணில இருந்து அந்ப்த படகுல மக்களை மீட்டுக்கிட்டு இருக்கோம்.

ஆழிகுடி

ஒரே ஒரு படகுதான் இருக்குறதால் முதல்ல குழந்தைங்களையும் பெண்களையும் மீட்டுக்கிட்டு இருக்கோம். ஆனாலும் இன்னும் நிறைய பேர் சிக்கிருக்காங்க. வெளிச்சமும் போயிருச்சு. இன்னும் எவ்வளவு பேர எங்களால மீட்க முடியும்னு தெர்ல. அரசாங்கம் இன்னும் ஒண்ணு ரெண்டு படகைக் கொடுத்தா நாங்களே எங்க மக்கள மீட்ருவோம்.

வெள்ள உதவி எண்ணுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்

வயக்காட்டுல நெல்ல இப்பதான் நட்டு வச்சிருந்தாங்க. எல்லாத்தயும் தண்ணீ அடிச்சிட்டுப் போயிருச்சு. இப்ப எங்க மக்களைக் காப்பாத்துனா போதும். நாங்க பிழைச்சுப்போம்” என்கிறார் பதைபதைப்புடன்.

நெல்லையில் உள்ள அணைகள் அத்தனையிலும் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் நிமிடத்திற்கு நிமிடம் வெள்ள நீர் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சமடைந்திருக்கின்றனர்.

81485 39914 – பாதிக்கப்பட்ட மக்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு உதவிகளைக் கேட்கலாம் என அரசு அறிவித்திருக்கிறது. ஆழிகுடி மக்களும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டிருக்கின்றனர். நாமும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எதிர்தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. தவித்து நிற்கும் ஆழிகுடி மக்களுக்கு உரிய உதவிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.