வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

எதிர்பாராமல் அவன் காதில் விழுந்த அந்த செய்தி அவன் மனதை உலுக்கியது .

‘யார்! துரைசாமி சாரா? ‘என்று திருப்பிக் கேட்டான். அதிர்ச்சியும் வேதனையும் தாக்க அவன் விவரம் சொன்ன அந்த நபரை வெறித்துப் பார்த்தான்.பேருந்து நிலையத்தில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தவர் அவனைத் திரும்பிப் பார்த்து தலையசைத்தார்.

அவன் உணர்வுகளை பொருட்படுத்தாமல் மேலே மேலே பேசிக்கொண்டே போனார் அவர்.சில பேருக்கு அடுத்தவர்களை பேசுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. ஏதோ தானேகண்டுபிடித்து காவல் துறையில் ஒப்படைத்தமாதிரி அவர் தொடர்ந்தார்.

Representational image

“இவரால எத்தனை பசங்க சீரழிஞ்சிருக்காங்க தெரியுமா? கடைசியிலே கையும் களவுமாக மாட்டிக்கிட்டாரு.போதைப் பொருள் விற்கிறதுன்னா சும்மாவா? ஆசிரியர் என்கிற போர்வையில் மறைந்து கொண்டு எத்தனை அநியாயம் பண்ணியிருக்கிறார் பாருங்கள்!”

தற்செயலாக பார்த்த அறிமுகமே இல்லாத ஒருநபர் இப்படி ஒரு வெடிகுண்டை இறங்குவார் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.

அவரும் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டார்.அடுத்தாற் போல் யாரிடம் போய் அளந்து கொட்டப் போகிறாரோ?

ராம்அப்படியேதிகைத்துப்போய்நின்றான்.

துரைசாமி சாரின் நினைவில் அவன்மனம் கலங்கிப் போனான்.

அவன் அவரிடம் பல வருடங்கள் பழகிய படித்த மாணவன்.

அந்தப்பள்ளியில் படித்த எல்லோருக்குமே அவரை மிகவும் பிடிக்கும்.பாடங்களை நன்றாக சொல்லித்தருவார் என்பது மட்டுமில்லாமல் மாணவர்களை மிகவும் அன்புடன் நடத்துவார்

பல ஏழை மாணவர்களுக்கு உதவியும் செய்திருக்கிறார்.அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.

புத்தகம் வாங்க முடியாதவர்களுக்கு எல்லாம் லைப்ரரி மற்றும் ஆசிரியர் கைப்புத்தகம் கொடுத்து உதவியிருக்கிறார்.

இன்னும் எத்தனையோ அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.எளிய மாணவர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

அவரைப் போய் தப்புத்தப்பாக பேசுபவர்களையும் அதற்கு துணை போகும் இந்த கேடு கெட்ட சமுதாயத்தையும் நினைக்க மனது கலங்கியது. வந்த வேலையை மறந்து விட்டு மனது அவரைப் பற்றியே நினைத்து அலை மோதியது. எங்கோ தவறு நடந்திருக்கிறது.

அவன் தன்னுடன் படித்த அவரைப்பற்றி அறிந்த சில மாணவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினான்.எல்லோருமே இன்றைக்கு நல்ல பதவியில் இருப்பவர்கள். அவனைப் போலவே அவர்களும் திகைத்துப் போனார்கள்.

“நம்ம சாரா ? நல்லதை தவிர எதுவுமே செய்ய தெரியாத அவரா!”

“நாம் ஏதாவது செய்யவேண்டும்! “,ஆனால் என்ன செய்வது!

குழம்பித் தவித்து வெகு நேரம் பல விதமாக பேசித் தீர்த்தார்கள்.

இறுதியாகஅவர்கள் எல்லோரும் சேர்ந்து யோசித்து ஒரு முடிவு எடுத்தார்கள்.

அவனும் மாணிக்கமும் சேர்ந்து காவல் நிலையத்துக்குப்போய்பார்த்தார்கள்.

மதிப்பிற்குரிய அவர்களது ஆசிரியரை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் பார்த்து உறைந்தே போனார்கள்.

Representational image

எப்படி பள்ளி நிர்வாகம் இதற்கு சம்மதித்தது என்று தெரியவில்லை. கல்விப் பணியை சேவையாக செய்த இவரையே சுலபமாக கை காட்டி விட்டிருக்கிறார்களே! கல்விஸ்தாபனங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றன!

துரைசாமி சார் சோர்வாக இருந்தாரே தவிர கலங்காமல் காணப்பட்டார்.

அவரைக் கைது செய்த அந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தார்கள்.

“நாங்க என்னங்க பண்ணமுடியும்! அவரைப் பற்றி பள்ளியில் நிறைய பேர் சொல்கிறார்களே!”

“அப்படியா ! யாரெல்லாம் சொன்னார்கள்?”

“நிறைய மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோருமே தான்.! “

“ஸோ, நீங்க அவரை கையும் களவுமாக பிடிக்கவில்லை.யாரோ உங்களை தூண்டி விட்டிருக்கிறார்கள்.”

“சார், பார்த்து பேசுங்க!”

“என்ன சார் , பார்த்து பேசுறது! நானே ஒரு லாயர் தான்.”

அவருக்கும் போதை மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது .ஒரு சிலரைப் போல புகழ் அதிகாரம் பதவி போதை கூட அவருக்கு கிடையாது.

நல்ல பழக்கங்களை பண்புகளை எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்.” கொதிப்புடன் அவன் பேச பேச அவர் முகம் இருண்டது.

திடீரென்று இருவர் வந்து இப்படி பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது .கொஞ்சம் மிரண்டாலும் சமாளித்துக் கொண்டார்.அவர்களுடைய கேள்விக்கணைகளுக்கு பதில் கொடுக்க தயாரானார்.

“அவரை விசாரித்து முடித்தாகி விட்டதா? இல்லை , அதுவும் கண்துடைப்பு தானா!”

“என்ன சார் மேலே மேலே பேசிக்கிட்டே போறீங்க! “

“பேசறது மட்டுமில்லை சார் ! நாங்கள் செயலிலும் இறங்கப் போகிறோம்.

ஒரு நல்ல ஆசிரியரை கல்வி கற்றுக் கொடுக்கும் சமுதாயப் பிரதிநிதியை கொஞ்சமும் யோசிக்காமல் அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள்.”

“பெரிய முதலைகளை காப்பாத்த சின்ன மீன்களை பிடிச்சு போட்டிருக்கீங்க!

அவர் சின்ன மீன் இல்லை ! அதை வெகு விரைவில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்!”

“தீயதை பேசாதே! தீயதை கேட்காதே! தீயதை பார்க்காதே! என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்.

Representational image

இன்றைக்கு உலகம் நல்லதை பார்க்காதே! நல்லதை கேட்காதே !நல்லதை சொல்லாதே! என்றுதானே சொல்லித்தருகிறது!

ஒரு திரைப்படத்தில் வரமாதிரி சந்தேகப்படுகிறவர்களை தீக்குளிக்க சொல்வது அந்த காலம்.

சந்தேகப்படுகிறவர்களை தூக்கி தீயிலே போடுறது இந்த காலம்”, அவன் வெறுப்புடன் சொன்னான்.

துரைசாமி சாருடன் தனியாக பேசும் போது அவர் சொன்னார்.

“முன்னெல்லாம் பசங்க படிக்க வரும்போது அப்பா அம்மா வந்து பார்ப்பாங்க.என் பையன் நல்லா படிக்கணும் . நீங்க தான் சார் பொறுப்பு அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம படிக்கலைன்னாலும் அடுத்த தலைமுறை நல்லா இருக்கணும்னு சின்சியரா நினைச்சாங்க.நாங்களும் பொறுப்பாக பார்த்துக் கொண்டோம்.பசங்களும் அடிச்சாலும் கண்டிச்சாலும் நமக்கு நல்லதுக்கு தான் சொல்றாங்க அப்படின்னு எடுத்துக்கிட்டாங்க.

அடுத்த தலைமுறை வந்தது . கொஞ்சம் படிச்சவங்களா அப்பா அம்மா இருந்தாங்க.

என் பையனை கண்டிச்சீங்களாமேன்னு கேட்டு வருவாங்க .

தப்பு என்று தெரிந்தால் அங்கேயே வைத்து கண்டிப்பார்கள்.அதனால பசங்களுக்கும் ஒரு பயம் இருந்தது. முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் இருந்தது.

இப்போ அப்படியில்லை .எல்லாமே மாறி விட்டது.பசங்களும் சரி அப்பா அம்மாவும் சரி தங்களை எதுவுமே சொல்லக்கூடாது என்று சொல்கிறார்கள்.தப்பு என்று தெரிந்தாலும் சரி என்று வாதாடுகிறார்கள்.குரலை உயர்த்துகிறார்கள்.அடாவடியாக பேசுகிறார்கள்.”

“இப்போ என்ன சார் பிரச்சினை!”

ராம் கேட்ட போது அவர் மெதுவாக சொன்னார்.

“ஸ்கூலுக்குள்ளேயே போதை மருந்து வியாபாரம் நடக்கிறது.சின்ன பிள்ளைகள் தெரிந்தும் தெரியாமலும் படுகுழியில் விழுகிறார்கள் “.

“அதை தடுக்கப் போய் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள் ! சரிதானா! “

‘ஆமாம்’ என்று தலையசைத்தார் அவர்.

‘தப்புன்னு நம்ம சொல்றதை விசாரிக்கப் போகிறார்கள் என்று நினைத்து முறையிட்டால்

நம்மையே அந்தக் குழிக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைக்கவே இல்லை.

Representational image

சார், நாங்க ராஜேந்திரனை வரச் சொல்லி இருக்கிறோம் . இப்போது வந்துவிடுவான்.”

அவர்கள் நினைத்த மாதிரி அல்லது எதிர்பார்த்தமாதிரி அந்த இன்ஸ்பெக்டர் அரண்டு போனார்.

எதையோ செய்யப்போய் எதிலோ மாட்டிக் கொண்டதை நினைத்து கலங்க ஆரம்பித்தார்.

ஏதோ ஒரு ஆசிரியரைப்பிடித்து போட்டு விட்டால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைத்தது விசுவரூபம் எடுத்து அவரையே வளைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ராஜேந்திரன் வந்தால் அவரைப் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்.கண்டிப்புக்கு மிகவும் பெயர் போனவர். சிலபேரது கட்டாயத்துக்கு பணிந்து தான் செய்த காரியம் தனக்கே வினையாக வருகிறதே என்று கலங்கிப் போனார்.

தனக்கு வந்தால் மட்டும் ரத்தம்,மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா!உலகத்தில் பல பேர் இப்படித்தானே இருக்கிறார்கள்.

“ராஜேந்திரன் சாரை உங்களுக்கு எப்படி தெரியும்?”

மாணிக்கம் மெல்ல சிரித்தான்.

“ராஜேந்திரனும் இவருடைய வகுப்பில் படித்த மாணவன் தான்”.

‘தொலைந்தேன் ‘ மனதுக்குள் முனகியவர் நேராக விஷயத்துக்கு வந்தார்.

“இதோ பாருங்க ! சந்தேகத்தின் பேரில் தான் இவரைப் பிடித்தேன்.இப்போ நீங்க சொல்றதை பார்த்தா இவர் பண்ணியிருக்கமாட்டார் அப்படின்னு தெரியுது.

அவரை விடுதலை பண்ணிவிட்டுடறேன்.நீங்க கூட்டிட்டு போங்க!”

‘நல்லவேளையாக எஃப் ஐ ஆர் கூட போடலை.”

‘அடடே, சுலபமா விடுதலை கொடுத்திட்டீங்க!.உங்களுக்கு சாட்சி சொன்னவங்க பற்றி யோசிக்கவே இல்லை!”

அவர் திணறினார்.

“பரவாயில்லை சார் ! நீங்க எல்லாம் சொன்னதை கேட்டப்புறம் இவர் மேல தப்பே இல்லை என்று தோன்றுகிறது.”

“அப்போ யார் மேல தப்புன்னு கண்டுபிடிக்க வேண்டாமா!

அசால்ட்டா ஒரு வாத்தியாரைப் பிடிச்சு மாட்டி விட்டிருக்கீங்க.பின்னால யார் இருக்காங்க அப்படின்னு தெரியவேண்டாமா?”

அவர் மிரண்டார்.

“ஒரு பள்ளிக்கூடத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிஞ்சுப்போம். யாரைக் காப்பாத்த இந்த வேலை அப்படின்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?”

“சமுதாயத்தை சீரழிக்கிற அதிலும் இளைய சமுதாயத்தையே குறி வைத்து அடிக்கிற இந்த கூட்டத்தை தண்டிக்க வேண்டாமா!”

அவர் திணறினார்.

வெளியே வந்த துரைசாமி சாரைப் பார்த்து கைகூப்பினார்.

“சார் ! நீங்க சொல்லுங்க ! உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம் ! சட்டுப் புட்டுன்னு கூட்டிட்டு கிளம்புங்க”.

Representational image

அப்படியெல்லாம் கிளம்பமுடியாது” . பதில் சொன்ன மாணிக்கம் பின்னாலே ஒரு மாணவர் படையே வந்துகிட்டு இருக்கு என்றும் அறிவித்தான்.

“இப்போதைய நிலையில் மிக எளிதாக தகவல் தெரிவித்து விடலாம் இல்லையா?

நீங்கள் யாரைக் காப்பாற்ற இப்படி செய்தீர்கள் என்று எல்லோருக்கும் தெரியவேண்டாமா? எங்கள் பள்ளியின் கட்டமைப்பு சீர்குலைவதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போம் என்று நினைத்தீர்களா? சாது மிரண்டால் என்ன ஆகும் தெரியுமில்லையா!

வருங்கால மாணவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் ஒருகேடு கெட்ட சமுதாயத்தை காப்பாற்ற நினைக்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா? “

அவன் பொரிந்து தள்ள அந்த இன்ஸ்பெக்டர் குறுகிப் போனார்.

நெகிழ்ந்து போன துரைசாமி தன் மாணவர்களை பூரிப்புடன் பார்த்தார். அங்கிருந்தவர்கள் மீது படிந்து மீண்ட பார்வையில் ஒரு வெற்றிக்களிப்பு தெரிந்தது.

அடுத்த போராட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருந்த அவர்களது கரங்களை பிடித்து குலுக்கினார் அவர்.

“சின்னதாக நான் கொடுத்த வெளிச்சம் இன்றைக்கு எனக்கே வழிகாட்டியிருக்கிறது.

உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி”.

“சார்! நீங்க ஸ்கூலுக்கு போங்க ! பின்னாலேயே நாங்கள் வருகிறோம் .”

தீரத்துடனும் துணிச்சலுடனும் பள்ளியை நோக்கி நடை போட்டது அந்த மாணவப்படை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.