இந்தியாவில் பெண்கள் தங்களின் வீட்டைத் தாண்டி வெளியே காலடி எடுத்துவைத்தற்குப் பின்னால், நீண்ட நெடிய போராட்டங்களும், உரிமைக் குரல்களும், வலிகளும் நிறைந்திருக்கின்றன. ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் சரிசமமாக அவர்களுக்கும் கிடைக்கும்போதுதான், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பெண்களும் தங்களை நிரூபிக்க முடியும். அதற்காகவே, பெண்களுக்கென கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான உரிமைகள் வழங்கப்படுகின்றன.

மாதவிடாய்

ஆனாலும், பெண்கள் பல வலிகளைத் தாண்டிதான் இன்றைக்கு முன்னேறிவருகிறார்கள். இப்போதுதான், இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலிகளை உணரத்தொடங்கியிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய மகப்பேறு கால விடுமுறையை அரசே கொண்டுவந்திருக்கிறது. அதன் அடுத்தகட்டமாகத்தான், ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பை இன்று சில தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துவருகின்றன.

அதை அரசும் கொண்டுவரவேண்டுமென்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் உரிமைக்குரல்களாகவும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்களாகவும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய சூழலில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அவர்களின் வாழ்க்கையில் ஓர் இயற்கையான பகுதி. மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருக்கிறது என்பதற்காக, பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்னைகளை முன்மொழியக் கூடாது” எனப் பேசியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்குப் பலர் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.

ஸ்மிருதி இரானி

இந்த நிலையில் தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் கவிதா, “மாதவிடாய் குறித்து ராஜ்ய சபாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய கருத்துகளால் மனமுடைந்தேன். ஒரு பெண்ணாக, இது போன்ற அறியாமையைப் பார்க்கத் திகைப்பாக இருக்கிறது. மாதவிடாய் என்பது தேர்வு செய்வதல்ல, அது ஓர் உயிரியல் எதார்த்தம்.

கவிதா

ஊதியத்துடன்கூடிய விடுப்பை மறுப்பது எண்ணற்ற பெண்கள் தாங்கும் உண்மையான வலியைப் புறக்கணிக்கிறது. ஒரு பெண்ணாக, பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கும், போராட்டங்களுக்குப் பச்சாதாபம் இல்லாததைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. கொள்கை உருவாக்கத்துக்கும், யதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பச்சாதாபம் மற்றும் பகுத்தறிவுடன் இணைக்க வேண்டிய நேரம் இது” என்று தனது X சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.