Doctor Vikatan: என் மகனுக்கு வயது 17. அவனுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் பிரியாணி வேண்டும். சைவமோ, அசைவமோ… ஏதோ ஒரு பிரியாணி இருந்தால் மட்டுமே சாப்பிடுவான். இப்படி அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா…. முட்டை பிரியாணியில் எத்தனை முட்டைகள் இருக்கலாம்?

 பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா.

ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா

சைவத்திலிருந்தே தொடங்குவோம். கூடியவரையில் வீட்டிலேயே பிரியாணி சமைத்துக் கொடுக்கப் பாருங்கள். கடைகளில் வாங்க வேண்டாம். வெஜிடபுள் பிரியாணி என்றால் அதில் 60 முதல் 70 சதவிகிதம்  காய்கறிகள் சேர்த்துச் செய்வதுதான் சரியானது. அதைத்தான் ஊட்டச்சத்து ஆலோசகர்கள் அறிவுறுத்துவோம்.  பிரியாணி செய்யப் பயன்படுத்தும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

அசைவ பிரியாணியைப் பொறுத்தவரை பலரும் சிக்கனோ, மட்டனோ இல்லாத குஸ்காவையே விரும்புகிறார்கள். குஸ்காவுடன் சிக்கன் 65 மாதிரியான சைடிஷ்  வைத்துச் சாப்பிடுவார்கள். அசைவ பிரியாணி தயாரிக்கும்போது ஒரு கப் பிரியாணிக்கு 150 கிராம் முதல் 200 கிராம் அளவுக்காவது சிக்கன் அல்லது மீன் சேர்க்க வேண்டும். மட்டன் பிரியாணி என்றால் 150 கிராம் மட்டன் இருக்கலாம்.

பிரியாணி

குஸ்கா சாப்பிடுவதைக் கூடியவரையில் தவிர்ப்பது நல்லது. அதில் இருப்பது வெறும் சாதம் மட்டுமே… புரதம் அறவே கிடையாது என்பதால் அதைச் சாப்பிடுவதால் எடை அதிகரிப்புதான் நடக்குமே தவிர, ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் உதவாது. 

பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக்கூடாது என நினைப்பவர்கள், பிரியாணி சாப்பிடுவதற்கு முன் ஒரு கப் சூப் குடிக்கலாம் அல்லது தந்தூரி சிக்கனோ, சிக்கன் டிக்காவோ எடுத்துக்கொள்ளலாம். அசைவ பிரியாணி சாப்பிடும்போது காய்கறிகள் சாப்பிட வாய்ப்பில்லை  என்பதால் பிரியாணியோடு சேர்த்து வெள்ளரிக்காய் தயிர் பச்சடியோ, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் மாதிரி மிக்ஸ்டு வெஜிடபுள் தயிர் பச்சடியோ எடுத்துக்கொள்ளலாம்.

பிரியாணி

பச்சடி பிடிக்காதவர்கள் பிரியாணியோடு முட்டை அல்லது காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் நாம் சாப்பிடும் பிரியாணியின் அளவு குறையும். நிறைய காய்கறிகள் சேர்த்த ஆம்லெட்கூட எடுத்துக்கொள்ளலாம். முட்டை பிரியாணி பிரியர்கள் என்றால் அந்த பிரியாணியில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இருந்தால் போதுமானது.

பிரியாணி சாப்பிடும்போது கூடவே பிரெட் அல்வா போன்ற ஸ்வீட் சாப்பிடும் வழக்கமும் இப்போது பலருக்கும் இருக்கிறது. கூடியவரையில் அதைத் தவிர்த்துவிடலாம். ஒரு கப்  சைவ பிரியாணியில் 200 முதல் 250 கலோரிகள் இருக்கும் என்றால் அசைவ பிரியாணியில் அது 300 முதல் 400 கலோரிகள் இருக்கும். வெஜிடபுள் பிரியாணியில் காய்கறிகள் சேர்ப்பதன் மூலமும், அசைவ பிரியாணியில் அசைவ பொருள்கள் சேர்ப்பதன் மூலமும் கலோரி அளவை ஓரளவு குறைக்கலாம். இந்த விஷயங்களை உங்கள் மகனுக்குப் புரியவைத்து, அதற்கேற்ப உணவுத்திட்டத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.