கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து துறை அமைச்சர் பொன்முடி விழாவைப் புறக்கணித்து விட்டார். விழாவில் பேசிய மும்பை எச்பிஎன்ஐ மற்றும் நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் யூ.காமாட்சி முதலி, ”இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தொழில், கல்வி, பொருளாதாரம், மின்சாரம், பாதுகாப்பு போன்ற நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

பெண்களின் முன்னேற்றத்துக்கு கல்வி ஒன்றே ஒரே வழி. தற்போது அவர்கள் உயர் கல்வியை அதிகம் படிக்கின்றனர். கிராமங்களில் பெண்கள் உயர் படிப்பில் சேருவதற்கு போதிய பொருளாதாரமின்றி, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேருவதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம். ஆனாலும், வரலாற்று ரீதியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல், முன்னேற்றத்தில் தடை இருக்கிறது. இளைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றலாம்” என்றார்.

பின்னர் ஆளுநர் முதுநிலை, பிஎச்டி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேசவில்லை. ஆனால் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருடன் தனியே கலந்துரையாடினார். “ஆழமாக படிக்க வேண்டும். அதுதான் மனதில் நிற்கும். இரவில் அதிகம் விழித்திருப்பதை தவிர்த்து, அதிகாலையில் படிக்க வேண்டும். அதிகம் மொபைலில் மூழ்கியிருக்க கூடாது. அப்துல் கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் துாங்கவிடாத ஒரு கனவை காண வேண்டும்.

அமைச்சர் பொன்முடி – ஆளுநர் ரவி

அது பெரிதாகவும், துாங்கவிடாமல் துரத்தவும் வேண்டும். அப்போதுதான் அதை உங்களால் அடைய முடியும். நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்து நடந்து சென்றுதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியை புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை. அதை அனைவரும் படிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு முன்பு ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் பலவற்றில் திராவிடம் குறித்தும், திமுக குறித்தும் பேசியது சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில் கூட திருச்சியில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் திராவிட இயக்கம் குறித்து தனது கருத்தை கூறி மீண்டும் சர்ச்சை பட்டாசை பற்றவைத்திருந்தார், ஆளுநர். ஆனால் இந்த முறை ஆளுநர் பேசாததற்கு என்னதான் காரணம் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் கேட்டோம், “வழக்கமாக புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு நல்லது என்பது உள்ளிட்ட விஷயங்களை பேசுவார்.

ப்ரியன்

இந்தமுறை சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. முதல்வர் தேர்தல் முடியும் வரை அவர் இருப்பது தான் நல்லது என தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம் என அண்ணாமலையும் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் பாஜகவுக்கும் கவர்னருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. பாஜக கூறியதைவிட ஆளுநர் அதிகமாகவே பேசிவிட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே மேலிடம் சர்சைக்குரிய கருத்துக்களை பேச வேண்டாம் என கூறியிருக்கலாம். அதனால் அடக்கி வாசித்திருக்கிறார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.