காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்க மிமிக்ரி, காமெடி, சென்டிமென்ட் கலந்த தன் பேச்சின் மூலம் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் தாமு.

சமீபகாலங்களாக இவரது மோட்டிவேசன் பேச்சால் உணர்ச்சிவசப்பட்டு காவலர்கள் முதல் மாணவர்கள் வரை கண்ணீர்விட்டு கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு தரப்பினர் இதைப் பாராட்டினாலும் மற்றொரு தரப்பினர் அவரைக் கடுமையாக விமர்சித்தே வருகின்றனர்.

`எதுவும் அறியாத குழந்தைகளைத் தேவையில்லாத குற்றவுணர்ச்சிக்குத் தள்ளுகிறார். இதனால் அவர்கள் அதீத மனஅழுத்தத்துக்குள்ளாகின்றனர். இது முற்றிலும் தவறான போக்கு. இதன் மூலம் அவர் சாதிக்க விரும்புவது என்ன? பெற்றோர்களை, ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குழந்தைகளை இது மாதிரி குற்றவுணர்ச்சியில் தள்ளித்தான் அதைச் செய்ய வேண்டுமா?’ என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து நடிகர் தாமுவிடமே கேட்டோம்…

நடிகர் தாமு

“கடந்த 12 வருஷமா மாணவர்களைச் சந்தித்து தன்னம்பிக்கை ஊட்டிக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் என் நிகழ்ச்சியை யாருமே விமர்சித்தது கிடையாது. பள்ளிகளுக்கு நான் வெறும் மோட்டிவேட்டரா மட்டும் போகல. ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தூதுவரா போயிட்டிருக்கேன். ஆசிரியர்கள், பெற்றோர்களின் அற்புதத்தை, மகத்துவத்தை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறேன். பெற்றோர் பிள்ளைங்களுக்கு நல்லதுதான் நினைப்பாங்க, நல்லதுதான் சொல்வாங்க. ஆனா, பிள்ளைங்க பெத்தவங்கப் பேச்சை கேக்கிறதில்லை. முன்னேற்றும் ஆசிரியர்களையும் உதாசீனப்படுத்திடுறாங்க.

இதெல்லாம், தப்புன்னு நான் மாணவர்களை உணர வைக்கிறேன். அவங்களும் உணர்ந்து புதுசா பிறக்குறாங்க. குழந்தைங்க பிறக்கும்போது, அழத்தானே செய்வாங்க? அப்படித்தான், மாணவர்களும் தங்கள் தவற்றை உணர்ந்து புதுசா பிறக்கும்போது அழுகறாங்க.

இன்னும் சொல்லப்போனா, பெற்றோர் இல்லாம நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கிறதில்ல. ஆசிரியர்களும் பெற்றோரும் இருந்தா மட்டும்தான் பேசுறேன். ‘உங்கப் பேச்சைக் கேட்டதுலருந்து, என் பிள்ளைங்க நல்லா படிக்கிறாங்க. ஆளே மாறிட்டாங்க’ன்னு பல பெற்றோர்கள் மனநிறைவா சொல்றாங்க.

என் பேச்சுல ஏதாவது குற்றம் இருந்தா, அவங்களே எப்படி என்னை ஆதரிப்பாங்க? ஏதாவது தப்பு இருந்தா காவல்துறையே என்னை நிகழ்ச்சி நடத்தக் கூப்பிடுமா? போதைப் பொருள்களை எதிர்த்து நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுங்க தாமுன்னு அரசுதான் சொல்லுமா?

‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார் வள்ளுவர். மாணவர்கள் மனசுல மாசு வெச்சுக்கிட்டு எப்படிக் கல்வி கற்பாங்க? அவங்க மனசுல இருக்க அழுக்கையெல்லாம் கழுவி எடுக்கும் நல்ல விஷயத்தை நான் பண்ணிக்கிட்டிருக்கேன். மாணவர்களுக்குள்ள இருக்கும் குற்றவுணர்ச்சியை மைனஸ் பண்றேன். அப்பக்ச் செய்றதால மாணவர்கள் நல்ல இந்தியரா வெளில வருவாங்க. நான் இல்ல… இந்த விஷயத்தை யார் செஞ்சாலும் பாராட்டுவேன். என்னை நெகட்டிவா விமர்சிக்கிறவங்க இதைப் பண்ணட்டும். நான் ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டு சினிமாவுக்கே போயிடுறேன். யாருமே இதைக் கையில எடுக்காததாலதானே நான் எடுத்தேன்? எப்படி இது தப்பாகும்?

நடிகர் தாமு

உண்மையைச் சொல்லணும்னா, நான் செய்யும் நல்ல விஷயத்தைத் திசை திருப்புவது ஊடகங்கள்தான். ஏன்னா, நானா போயி ‘நீங்க அழுங்க’ன்னு சொல்றது கிடையாது. என் பேச்சைக் கேட்டு அவங்களே அழுவுறாங்க. அழுறதை மட்டும்தான் ஊடகங்கள் வெளில காட்டுது. ரெண்டு மணிநேரம் மாணவர்களைச் சிரிக்கவும் வைக்கிறேன். விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அதையெல்லாம் காட்டுறதில்ல. விமர்சிக்கறவங்களும் அழுவுறதை மட்டும் பார்த்துட்டு எதுவும் தெரியாம விமர்சிச்சுடுறாங்க. முழு நிகழ்ச்சியைப் பார்க்கிறதில்ல.

அப்படி முழுசா பார்த்திருந்தா ‘ஒரு காமெடி நடிகர், இப்படி ஆக்கபூர்வமா பண்ணிட்டிருக்காரே’ன்னு என்னைப் பாராட்டியிருப்பாங்க. விமர்சிப்பவங்களோட பிள்ளைங்க என் நிகழ்ச்சியில உட்கார்ந்தாலும் அழுவாங்க. ஏன்… விமர்சிப்பவங்களே நிகழ்ச்சிக்கு வந்தாலும் அழுவாங்க. சிரிக்கவும் செய்வாங்க. அதனால, என் நிகழ்ச்சியை முழுசா பார்த்துட்டுப் பேசணும்.

அப்படியும் சிலர் உள்நோக்கம் கொண்டும் விமர்சிக்கலாம். வாழ்க்கையில் கிங் ஆகணும்னா ரெண்டு கிங்கை ஓரங்கட்டணும். ஒண்ணு ஸ்மோக்கிங் இன்னொன்னு டிரிங்கிங். மாணவர்கள் இது ரெண்டுல எதையாவது ஒண்ணைத் தொட்டிருந்தாலும் ‘நம்ம உடம்புக்கு நாம துரோகம் பண்ணிட்டோமே’ன்னு அழுவாங்க. இதைத் தப்புன்னு சொல்றாங்கன்னா அவங்க குடிகாரங்களா இருப்பாங்க. இல்லைன்னா புகைப் பழக்கத்துக்கு அடிமையானவங்களா இருப்பாங்க.

தாமு

மாணவர்கள் அழுவுறதால குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டு நல்லா படிப்பாங்க. நல்ல மார்க் எடுத்து வளர்ச்சியை நோக்கி மட்டும் கவனத்தை செலுத்துவாங்க. பெற்றோரை மதிப்பதோடு வீட்டை விட்டும் ஓடிப்போகமாட்டாங்க. தேவையில்லாம லவ்வுலல்லாம் போயி மாட்டிக்கமாட்டாங்க. அவங்களோட பயணம் வளர்ச்சி நோக்கி மட்டுமே இருக்கும். எனக்கு மாணவர்களின் முன்னேற்றம்தான் முக்கியம். விமர்சிக்கறவங்க விமர்சிக்கட்டும். அதுபற்றில்லாம் நான் கவலப்படுறதில்ல!” என்கிறார் கூலாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.