வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நீரிழிவுக்கும் எடைக் குறைப்பிற்கும் நான் ஆரம்பித்த முயற்சிகளுக்குக் கிடைத்த பலன் பற்றிச் சொல்வதாகக் கூறியிருந்தேன்.

ஆம்.. இருந்தது. ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக அவரது உடல் எடை சீராகக் குறைந்து சீக்கிரமே டாக்டர்கள் சொன்ன அளவுக்கு வந்தது கண்டு எனக்கு இது மாதிரி மேலும் முயற்சிக்க ஆர்வமும் அவருக்கு நம்பிக்கையும் வந்தது. அப்போதிருந்து இதோ இன்று வரையில் அவரது எடை அதன் பிறகு ஏறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த நாளில் சுகர் டெஸ்ட் செய்வதற்கு இப்ப மாதிரி எல்லாம் வசதி இல்லை. வீட்டின் பின்பக்கம் ஒரு டப்பாவில் சோதனைக் கூடத்தில் உள்ளது போல சிறுநீரைச் சோதனை செய்ய ஒரு டெஸ்ட் டியூப் சூடு பண்ணத் தேவையான விளக்கு மாதிரி அமைப்பு அதற்கென்று உரிய கெமிகல் திரவம் ( பெயர் தெரியல..நான் கெமிஸ்ட்ரியில் ரொம்ப வீக். அவர் அதில் உயர்நிலைப் படிப்பு) எல்லாம் வைத்திருப்பார்கள். மாமனார் மாமியாருக்கு டெஸ்ட் செய்கையில் அந்த நிற மாற்றத்தைப் பார்க்க நாங்கள் எல்லோரும் கூடி நிற்போம்.

Diabetes

ஆனால் இப்ப வசதிகள் பெருகி விட்டன. சத்தம் போடாமல் கைக்கு அடங்கிய கிட் வைத்து நிமிஷத்தில் இரத்தச் சர்க்கரை அளவை செக் செய்து கொள்ள முடிகிறது. முதலில் டெஸ்ட் எடுப்பதை முறைப் படுத்திக் கொண்டோம். மாதம் ஒருமுறை லேபுக்குச் சென்று செக் செய்து கொள்வதை அப்போதிருந்தே ஆரம்பித்து விட்டோம். அதற்கு அவசியம் முதலில் எனக்கு இருந்தது என நான் நினைத்தேன். டெஸ்ட் ரிசல்ட் என்னை உற்சாகமூட்டவும் ஜாக்கிரதையாக இருக்கவும் வழி காட்டும் என நம்பினேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சராசரி நீரிழிவு நிலை அறியும் சோதனையும் செய்து கொள்வார்.

அவ்வப்போது மருத்துவரிடம் சென்று வருவோம். லேப் என்றதும் ஒரு அனுபவம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு திருமணத்துக்காக மறுநாள் அதிகாலை சென்னை செல்ல வேண்டி இருந்தது. அந்த மாதம் அவருக்கு வெளியூர்ப் பயணங் களினால் பரிசோதனை செய்து கொள்வது விட்டுப் போயிருந்தது.. எதற்கும் பார்த்து விடலாம் என்று சாப்பிட்ட நேரத்தைக் கணக்குப் பண்ணி ஒரு லேபில் டெஸ்ட் செய்து கொள்ள ரிசல்ட் அதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகக் காட்டியதும் இருவரும் அதிர்ந்து விட்டோம்.

நான் உண்மையில் ரொம்பவே தளர்ந்து போய் விட்டேன். பயணம் மேற்கொள்ளவும் பயம். வழக்கமாகக் காண்பிக்கும் டாக்டரிடம் உடனே செல்ல அவர் மீண்டும் ஒருமுறை ரேண்டம் டெஸ்ட் செய்யச் சொல்ல அது எப்பவும் போல வந்தது. ஒன்றும் இல்லை.. இரண்டு எஸ்.மோஹன் பெயரில் இருந்த டெஸ்ட் ரிசல்ட்டில் வேறு ஒருவருடையதை மாற்றிக் கொடுத்து விட்டார்கள் அங்கு. நாங்களும் அவசரத்தில் கவனிக்கவில்லை. இப்படியும் சந்தர்ப்பங்கள் வரலாம். சளைக்காமல் மீண்டும் ஒருமுறை கன்ஃபர்ம் செய்து உறுதி செய்து கொள்ளுவதும் அவசியம் என்று சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன்.

representational image

மறுநாள் நாங்கள் சென்ற திருமணத்திலும் இன்னொரு அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டேன். எங்கள் குடும்பம் எண்ணிக்கையிலும் அன்பிலும் நிறைந்தது என்று கூறி இருக்கிறேன் அல்லவா. அடிக்கடி திருமணம் பிறந்தநாள் சீமந்தம் நிச்சயதார்த்தம் என்று ஏதாவது ஒரு நிகழ்வு இருந்து கொண்டே இருக்கும். உறவினர்களைச் சந்திக்கும் ஆவல் ரொம்பவே இருக்கும். மண்டபம் சென்றதும் ஆளுக்கு ஒருபுறம் சென்று விடுவோம்.

அந்தத் திருமணத்திலும் அதே மாதிரியே.. சாப்பிடும் நேரம் என் செட்டுடன் மாடிக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் இலையில் இருந்த அசோகா அல்வாவை முழுசாக மாத்திரை போல சுவை கூடப் பார்க்காமல் அவசரம் அவசரமாக அவர் விழுங்கி தண்ணீர் குடித்ததைப் பார்த்ததும் எனக்குக் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது… தஞ்சாவூர்க்காரர்கள்…. அசோகா அல்வாவை ரசித்து ருசித்துச் செய்து சாப்பிடுவார்கள்… விடுவார்களா… சுற்றி இருப்பவர்கள் சிலாகித்து மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி உண்கையில் பார்த்துக் கொண்டிருப்பது சாத்தியமா..

எல்லோரும் மனிதர்கள் தானே.. அந்த நிமிடத்தில் இருந்து விசேஷங்களில் உணவு அருந்தும் நேரம் இருவரும் சேர்ந்தே அமர்வது எனத் தீர்மானித்துக் கொண்டேன். அப்படி இப்படி ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு வைத்தாலும் அளவு கூடி விடக் கூடாதே என்றும் அந்தக் கொஞ்சத்தை ருசி அறிந்தாவது சாப்பிடட்டும் என்றும் தான். இந்த விதி மீறல் நடக்கும் என்பதால் தானே வீட்டில் அந்த மாதிரி எல்லாம் சமைக்க யோசிக்க வேண்டி இருக்கிறது இல்லையா..

இன்னும் ஒரு வழக்கம் மேற்கொண்டேன். அலுவலகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வின் போது ஸ்வீட் காரம் கொடுப்பார்கள் அல்லவா.. முடிந்த வரை அதை முழுதாக வீட்டுக்கு எடுத்து வந்து எல்லோரும் ஆளுக்குச் சிறிது எனப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தான் அது. அதில் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்குத் தானே அதிகம் கொடுப்போம்… இதன் பிறகு அவரும் அதே மாதிரி கொண்டு வர ஆரம்பித்தார். அப்படியே வெளியில் இனிப்பு ஏதேனும் சாப்பிட்டிருந்தால் கூட என்னிடம் சொல்வதும் இயல்பாகி விட்டது.

நெல்லை அல்வா

என் பெரிய மகன் ரொம்பச் சின்ன வயதில் இருந்தே நானே ஆச்சரியப்படுகிற மாதிரி இனிப்பு வகைகளில் அவ்வளவு ஆர்வம் இல்லாதிருந்தான் . காரம் சார்ந்த பலகாரங்களே அவன் விருப்பமாக இருந்தது. அதுபோக அவன் படு விஷமம். பொறுமையே இருக்காது. ஒவ்வொரு முறை இனிப்பு எது உண்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும் என்று சொல்வோம். பழைய கால முறைப்படி கட்டின வீடு என்பதால் பக்கம் பக்கமாக வாஷ் பேசின் டாய்லெட் எல்லாம் இருக்காது. பின்பக்கம் தான் சென்று வர வேண்டும் ஆதலால் அதற்குக் கூடப் பொறுமை இல்லாமல் ஸ்வீட் வேண்டாம் எனக்கு என்று சொல்லி விடுவான். .

என் அப்பா அல்வாவிலேயே ஒரு கை சீனி கலந்து சாப்பிடுவார். ( கடைசி வரை நீரிழிவு தலை காட்டவில்லையே… அம்மாவுக்கும் அக்காவுக்கும் மட்டும் அந்த வரம் வாய்க்கவில்லை) . சிறியவன் அதைப் போல் நாட்டத்துடன் இருந்து வளர வளர நன்மை கருதித் தவிர்க்க ஆரம்பித்து விட்டான். இப்போது நாற்பதைத் தாண்டி விட்ட இருவரும் இன்று வரை தப்பித்து ஆனால் தகுந்த இடைவெளிகளில் நீரிழிவுக்கு உண்டான சோதனை மட்டும் செய்து கொள்கிறார்கள். அன்று அவர்களுக்கு அளித்த உணவையே இன்று அவர்களும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் புரட்டுவோம் இந்த இனிய போராட்டத்தின் வேறு பக்கங்களை…

-மீனாக்ஷி மோஹன்

ஹைதராபாத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.