வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நான் சென்ற முறை குறிப்பிட்டது போல் “எல்லா வகையும் சமைப்போம்.. ஆனால் நம்ம வழியில் சமைப்போம்” என்பதே குறிக்கோளாக மாறியது எனக்கு.

அப்பவே சொல்ல மறந்து விட்டேன். மொத்தச் சமையலில் ஒரு நாளைக்குப் பயன் படுத்தும் எண்ணெயின் அதிக பட்ச அளவைத் தீர்மானித்துக் கொண்டேன். அவற்றில் சாம்பார் புளிக் குழம்புக்கு நல்லெண்ணெய் காய்கறி தாளிக்க கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் ரசத்துக்கு நெய் என அனைத்தையும் இதற்குள் முடிந்தவரை அடக்கி எல்லாவற்றிலும் சிறிதளவு பயன்படுத்திக் கொண்டேன்.

அடுத்து கண் முன் நின்ற சாலஞ் கைக்கு லஞ்ச். தயிர் சாதம் தான் அதுவரை எங்கள் எல்லோருக்குமே சரிப்பட்டு வந்திருந்தது.

Representational Image

அவரவர் டப்பாவில் விளிம்பு குறையாமல் அளவான புளிப்புடன் தயிர் சாதம் மற்றும் ஏதாவது தொட்டுக் கொள்ளத் துணைக்கு.. திருச்சி மலைக்கோட்டை மதியத்துக்கு மேல் ஊருக்குப் பகிர்ந்து கொண்டு தன் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் அந்த அனல் வீசும் மத்தியான வேளை அது அமிர்தம் அன்று…

ஆனால் என்ன செய்வது….

இந்த நாளில் அரிசிக்கு பதில் துருவிய முட்டைக்கோஸ் காலிபிளவர் போன்ற காய்கறிகளைப் பயன் படுத்துவதை நான் அந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டேன். காலப் போக்கில் என் கலந்த சாதங்களில் காய்கறி அல்லது கீரைக்கு நடுவே அவல் அல்லது கொஞ்சம் சாதம் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் டீடெயில் ஆகப் பார்ப்போம்.

அவற்றில் அரிசிக்கு பதில் ஆரோக்கியம் மிகுந்த கைக்குத்தல் போன்ற அவல் வகையில் சிறிதளவு கலப்பது ஒருமுறை.

சாதம் எனில் கட்டாயம் பலமுறை களைந்து மினிமம் அரை மணி நேரமாவது ஊறவைத்த அரிசியில் இரண்டு அல்லது அதற்கும் மேல் அரிசியின் தன்மைக்கு தகுந்தபடி கொஞ்சம் சேர்த்துத் தண்ணீர் விட்டு சாதம் சமைத்தால் பூப் போலவும் உதிரியாகவும் இருக்கும். கண்டிப்பாக நாம் சேர்க்கும் எண்ணெய் பாதி அளவு குறையும். ஏனெனில் நீங்கள் சேர்க்கும் அதிகப்படி எண்ணெய் சாதத்தில் அடியில் உட்கார்ந்து கொள்வதை நீங்களே பார்க்க முடியும். கஞ்சி வடித்து விட்டால் இன்னும் நல்லதே.

இதில் எலுமிச்சை சாதம் எனில் ஒரு கட்டு புதினாக் கீரையுடன் ஓரிரு பச்சை மிளகாய் காரத்தேவைக்கு சேர்த்து விழுதாக அரைக்கவும். நல்லெண்ணெய் வெந்தயத் தூள் சேர்க்காமல் வாசனை அற்ற எண்ணெய் அல்லது சிறிது நெய்யில் தாளித்து பச்சைப் பட்டாணி சீசனில் நிறைய அதில் சேர்த்து தாளித்த எண்ணெயில் வதக்கி அரைத்த புதினா விழுதையும் சேர்த்துப் பிரட்டி எலுமிச்சைச் சாறு உப்பு போன்றவற்றைச் சேர்த்து பின் அதில் கொஞ்சம் சாதம் அல்லது அவல் சேர்க்கவும்.

சத்து நிறைந்தும் பட்டாணியின் செரிமானத்துக்குப் பொதினாவும் இருக்கும்.

Representational Image

இன்னொரு ஆப்ஷன் மூன்றில் இரண்டு பங்குக்கு நிறைய பீன்ஸ் காரட் முட்டைக் கோஸ் காலிஃபிளவர் தக்காளி கத்தரி போன்ற காய்கறிகளைப் பொடிதாக நறுக்கி நான் முன்பு சொன்ன குறைந்த எண்ணெயில் வதக்கும் முறையில் வதக்கி உங்கள் முறைப்படி எலுமிச்சை சாதம் செய்யவும்.

தேங்காய் சாதம் எனில் முட்டைகோஸ் காலிஃப்ளவர் பீன்ஸ் பட்டாணி தட்டாங்காய் பிஞ்சு அவரை போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி வதக்கி துருவிய தேங்காய் கொஞ்சம் சேர்த்து சிறிது சாதத்தை அல்லது அவலைக் கலந்து விடலாம்.

இன்னும் காய்கறிகள் வெந்த பருப்பு எலுமிச்சை கலந்து தால் செய்து அதில் சிறிது ஊற வைத்த அவலைப் பிழிந்து கலந்து விடலாம்.

காலையிலும் மாலையிலும் சூடாக சமைத்து உண்ணும் போது மதியம் பெரிதாக தேவைப் படாது. ரிஃப்ரெஷ் செய்து கொள்ளும் அளவுக்கு லைட் ஆக இருந்தாலே போதுமானது.

விருப்பப் படுகிறவர்களுக்கு இருக்கவே இருக்கு நம் காய்கறி சாம்பாரும் காயும் மெத்தென்ற தோசை அல்லது இட்லி கொஞ்சமும்.

தோசை இட்லி என்றதும் ஞாபகம் வருகிறது. என் ஃப்ரிட்ஜில் எப்பவும் வெந்தயம் தேமே என்று முளைத்துக் கொண்டு கிடக்கும். வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் நீரிழிவு உள்ளவர்களுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் உகந்தது அல்லவா.. சுத்தம் செய்த வெந்தயத்தை நன்கு ஊறவைத்து பொன்னிறமான அந்தத் தண்ணீரை வாரம் ஆக கப்பில் எடுத்துக் கொண்டு அதன் இதம் வயிற்றுக்குள் இறங்குவதை உணர்ந்து மெதுவாக ரசியுங்கள். குளிர்ச்சியாக எடுப்பது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். இப்ப தண்ணீரை வடித்த கசப்பு குறைந்த வெந்தயத்தை கொஞ்சம் உயரமான டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். முளைத்துக் கொண்டு கிடக்கும் அதை சோளம் ராகி போன்ற முழு தானியங்கள் மற்றும் உளுந்து ஊற வைத்து இட்லி அல்லது தோசை மாவு செய்கையில் கொஞ்சம் சேர்த்து அரைக்க பஞ்சு போன்ற பண்டம் ரெடி…

Representational Image

இது மாதிரி மாவு அரைக்கும் போது ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்  தருகிறேன்.
முழு நார்ச்சத்து நிரம்பிய தானியங்கள் என்பதால் வெகு சீக்கிரம் புளித்துப் பொங்கி விடும் .. கவனம் வேண்டும்.
இவற்றுடன்  தானியத்துக்கு மூன்றுக்கு ஒரு பாகம் அரிசி சேர்த்து ஊற வைத்தால் மசிவது கொஞ்சம் சுலபமாக இருக்கும்….
சோளம் போன்ற சில கெட்டியான தானியங்களுக்கு உளுந்து சிறிது அதிகம் தேவைப்படும்.

இவற்றை மிக்ஸியில் பக்குவமாக  அரைத்தாலே  போதுமானது.
அவ்வப்போது அரைத்துப் பயன் படுத்திக் கொள்ளவும்.
இப்ப எவ்வளவோ வாய்ப்பும் வழியும் உள்ளது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் லஞ்ச்சிற்கு  துருவி லேசாக வதக்கிய காய்களை மட்டும்  தனியாக எடுத்துக் கொண்டு  சாப்பிடும் போது ஃப்ரெஷ் தயிர் கலந்து  சாப்பிடுகிறார்.

 
சப்பாத்தி அந்த நாளில் அதிகம் லஞ்சுக்கு  எடுத்துச் செல்வதைத் தவிர்ப்போம். இப்பதான் அதுவும் பழகி விட்டதே.
 குறைந்த எண்ணெயில் கரம்  மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம்  முட்டைகோஸ் காலிபிளவர் பீன்ஸ் போன்ற காய்களை விருப்பம் போல் சேர்த்து சிறிது வீட்டில் செய்த பனீர் சேர்த்து  வதக்கி  சப்பாத்தி துண்டுகள் கலந்து பிரட்டி  எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் சேர்ப்பதால் சாஃப்ட் ஆகவும் இருக்கும்……. சரி….சும்மா சும்மா இதை இப்படிச் செய்தேன் அதை அப்படிச் சமைத்தேன் என்று சொல்கிறேன் அல்லவா..அதற்குப் பலன் இருந்ததா என்றும் சொல்ல வேண்டுமே..
இதோ.. அடுத்துச் சொல்கிறேன்.

-மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.