மும்பையில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நேற்று ,முன்தினம் காலையில் தொடங்கி இரவு வரை நடந்தது. அன்று முழுவதும் மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் பல அடுக்குப் பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்டனர். உறியடிக்கும் கோவிந்தாக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அறிவித்திருந்தனர். மாநில அரசு உறியடியில் ஈடுபடும் கோவிந்தாக்களுக்குக் காப்பீடு செய்திருந்தது. ஓர் அரசியல் தலைவர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிக்குள் வேறு ஓர் அரசியல் கட்சித் தலைவர் நுழைந்து உறியடிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பல அடுக்கு பிரமிடு

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சொந்த ஊரான தானே தெம்பி நாக்கா பகுதியில் துணை முதல்வர் அஜித்பவார் ஆதரவாளர்கள் உறியடிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதேபோன்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா செல்வாக்குடன் இருக்கும் மும்பை ஒர்லி ஜம்போரி மைதானத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவாளர்கள் உறியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதோடு பட்னாவிஸ் பேனர், ஒர்லி முழுவதும் தென்பட்டது. தானே வர்த்தக நகரில் அதிகபட்சமாக 9 அடுக்குப் பிரமிடு அமைத்து கோவிந்தாக்கள் உறியடியில் ஈடுபட்டனர். பா.ஜ.க. தரப்பில் மும்பை முழுக்க 400 இடங்களில் உறியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

போரிவலி தேவிபாடா என்ற இடத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.பிரகாஷ் சுர்வே தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உறியடியில் கலந்து கொண்டு தயிர்பானை உடைத்தவர்களுக்கு ரூ.55.55 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டது. இதில் மாரத்தி நாட்டுபுறப் பாடல் நடனக் கலைஞர் கவுதமி பாட்டீல் புனேயில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனால் கூட்டம் அலைமோதியது.

மும்பை பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான ஆசிஷ் ஷெலார் பாந்த்ராவில் உறியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கோவிந்தாக்களுக்கு ரூ.51.51 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தார். மும்பை காட்கோபர் பகுதியில் பா.ஜ.க.எம்.எல்.ஏ.ராம் கதம் ஏற்பாடு செய்த உறியடியில் பங்கேற்ற கோவிந்தாக்களுக்கு ரூ.25 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

ஜெய் ஜவான் மண்டல் இந்த ஆண்டு 10 அடுக்குப் மிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்டது. உறியடியில் ஈடுபட்டுக் காயம் அடைபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்க மாநகராட்சி நிர்வாகம் மருத்துவமனைகளில் 125 படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தது. அரசியல் தலைவர்களும் லட்சக்கணக்கில் பரிசுகளை அறிவித்து இருந்ததால் கோவிந்தாக்கள் மும்பை, தானே நகரங்களுக்குச் சென்று உறியடியில் ஈடுபட்டுப் பரிசுகளைத் தட்டிச்சென்றனர்.

பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்ட 195 கோவிந்தாக்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண் உட்பட 18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மும்பையில் தமிழ் அமைப்புகள் வசாய், பாண்டூப், முலுண்ட், நெரூல், மாட்டுங்கா, தாராவி, தகிசர் பகுதியில் கிருஷ்ண ஜ0யந்தியைக் கொண்டாடி மகிழ்ந்தன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.