மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி 10 நாள்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கி 28-ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம். அந்தத் தினத்தை ‘ஆனந்த சதுர்த்தி’ என்று சொல்வதுண்டு.

இந்த ஆண்டு, 28-ம் தேதி ஆனந்த சதுர்த்தியன்று மிலாடி நபியும் வருகிறது. மிலாடி நபியன்று முஸ்லிம்கள் பெரிய அளவில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலம் இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் வழியாகச் செல்லும். சமீபத்தில் ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் பேரணி நடத்தியதால் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது.

மிலாடி நபி கொண்டாட்டம்

இதைக் கருத்தில் கொண்டு மும்பையில் இரண்டு ஊர்வலமும் ஒரே நாளில் நடந்தால் எதாவது பிரச்னை வந்துவிடும் என்பதற்காக ஊர்வலத்தை ஒரு நாள் தள்ளி வைப்பது குறித்து முஸ்லிம் அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினர். பைகுலாவில் உள்ள கிளாபத் ஹவுசில் கூடி முஸ்லிம் அமைப்புகள் இப்பிரச்னை குறித்து விவாதித்தனர். மெளலானா மொயின் அஸ்ரப் கத்ரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிலாடி நபி ஊர்வலத்தை 28-ம் தேதிக்குப் பதில் 29-ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மெளலானா மொயின் அஸ்ரப், “அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்காக மிலாடி நபிப் பேரணியை ஒரு நாள் தள்ளிவைப்பதில் எந்த விதப் பிரச்னையும் இல்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையைத் தவிர்க்க எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சமூக நல்லிணத்தை கவனத்தில் கொண்டு மிலாடி நபி ஊர்வலத்தை 29-ம் தேதிக்குத் தள்ளி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் சத்ய நாராயண் கூறுகையில், “பேரணி தள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறித்து எங்களுக்குத் தகவல் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர்களது முடிவை வரவேற்கிறோம். இம்முடிவு பொதுமக்களுக்கான அசெளகரியத்தைக் குறைக்கும்” என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நசீம் கான், சமாஜ்வாடி எம்.எல்.ஏ.ரியாஸ் ஷேக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நசீம் சித்திக் மற்றும் மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.