சென்னை உலக சினிமா திரை விழா- விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்கில் செப்-1,2,3 ஆகிய நாட்களில் நடந்து வருகிறது.

பல்வேறு மொழி மாற்று சினிமா திரைப்படங்கள் இதில் திரையிடப்படுகிறது. சமூகத்தின் மனப்பான்மையைப் பெருமளவு பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததுதான் சினிமாக்கள். அவை சமூகத்தைத் தாண்டி உலக அளவில் இருக்கும் கலாசார வேறுபாடுகளைத் திரையின் வழி சங்கமிக்கச் செய்யும்போது உலக சினிமாக்கள் என்ற பெயரில் வடிவெடுக்கின்றது. உலக சினிமா திருவிழாவாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரி திரையரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது சென்னை உலக சினிமா திரை விழா.

உலக சினிமா திரை விழா

உலக சினிமா மேடைகளுக்கு சென்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல தமிழ் சினிமாக்களுடன் சிங்களம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய பன்னாட்டு மொழி திரைப்படங்களும் மலையாளம், பெங்காலி முதலிய மொழி படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி முதல் வேல்முருகன் பெரியவன் இயக்கிய அடவி (சைலன்ட் ஃபிலிம்) வரை பல திரைப்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

‘இன்ஷா அல்லா’ திரைப்படத்தின் இயக்குநரும் விழாவின் ஒருங்கிணைப்பாளருமான உலக சினிமா பாஸ்கரிடம் பேசிய போது, “இந்த விழா இன்று பிறந்த குழந்தை, இப்போதுதான் தவழ ஆரம்பித்திருக்கிறோம். சென்னையில் பன்னாட்டு திரைப்பட விழா 20 ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வருடம் தோறும் கோவா, கேரளா, பூனே, பெங்களூர், சென்னை, முதலிய திரைப்பட விழாக்களைப் பார்த்து வருவது என்னுடைய வழக்கம். இந்த ஐந்து திரைப்பட விழாக்களின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அது போலவே ஒரு திரைப்பட விழாவை நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இந்த வருடம் நிறைவேறியிருக்கிறது.

பாஸ்கர்

இது ஒரு உலக சினிமா விழா. பெயருக்கு ஏற்ப உலக சினிமா தரத்திலிருக்கும் படங்களை எங்கள் நடுவர் குழு தேர்ந்தெடுத்து படங்களுக்கு பரிசும் அளிக்கவிருக்கிறோம். முக்கியமாகக் குறிப்பிட்டால் இன்டிபென்டன்ட் ஃபிலிம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், சுயாதீனத் திரைப்படம், முனைசாராத் திரைப்படம் என்று சொல்லப்படும் அவ்வகை திரைப்படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து அதனை இங்கு காட்சி படுத்துகிறோம். கேரளா திரைப்பட திருவிழாவில் வெளியான ‘லெப்ட் ஓவர்’ என்ற திரைப்படம் வெறும் 12 ரூபாய் மட்டுமே வைத்து எடுக்கப்பட்டது.

அவ்விழாவில் பெரிதாகப் பேசப்பட்ட அதனை எங்கள் விழாவில் நிறைவு விழா திரைப்படமாக அறிவித்திருக்கிறோம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ‘கர்ப்பரா’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விக்னேஷ் குமுலையுடைய பயிற்சி பட்டறை ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘கார்கி’ போன்ற நேரடி ஒளிப்பதிவு முறை கொண்டப் படங்களை ஒளிப்பதிவு செய்த ராகவ், சிங்க் சவுண்ட் (sync sound) பற்றிய ஒரு பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறார்.

உலக சினிமா திரை விழா

தொடர்ச்சியாக இதுபோல உலக சினிமா திருவிழா எங்களால் நடத்தப்படும். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். மேலும் சென்னை சினிமா விழா அறிவிக்கப்பட்டபோது கலைஞர் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட இருந்ததால் அவர்களுடன் இணைந்து நாங்களும் இவ்விழாவை நடத்த முடிவு செய்தோம்” என்று கூறினார்.

மாற்று சினிமாவின் மீதும் உலக சினிமாவின் மீதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தளமாக இதுபோன்ற திரைவிழாக்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.