அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலிருந்து, தனது சுற்றுப்பயணத்தை நாளை(செப்டம்பர் 3-ம்) தேதி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக, காஞ்சிபுரம் அருகே களியனூரில் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட பந்தலிலும், காஞ்சிபுரம் நகரிலும் அ.தி.மு.க கொடி, சின்னத்தைப் பயன்படுத்தியே பன்னீரின் சுற்றுப்பயணத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், “இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க கட்சிக் கொடியையும் பன்னீர் பயன்படுத்தினால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காஞ்சிபுரம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்திருக்கிறார். இந்தப் பரபரப்புகளுக்கு இடையேதான், நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார் பன்னீர். இந்தச் சந்திப்பின் பின்னணி, பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, பன்னீர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

ஓ.பி.எஸ் காஞ்சிபுரம் மாநாடு ஏற்பாடுகள்

அவர்கள் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தை சமீபத்தில் பார்த்தார் ஓ.பி.எஸ். படம் தனக்குப் பிடித்துப்போனதால், அதற்காக வாழ்த்துச் சொல்ல ரஜினியை தொடர்பு கொண்டார். ‘வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை வந்தவுடன் நேரில் பார்க்கலாம்’ என ரஜினி தரப்பிலிருந்து பதில் வந்தது. ரஜினி சென்னை வந்தப்பிறகு, அவருடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதி காலை 8 மணிக்கு, தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லாமல், தனியாக ஒரு காரில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்ற ஓ.பி.எஸ்., கிட்டத்தட்ட ஒருமணிநேரம் ரஜினியுடன் பேசினார். இந்தச் சந்திப்பில், ஆன்மீகம், உடல்நிலை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் என பல விஷயங்கள் பேசப்பட்டன.

ஓ.பி.எஸ்-ன் மனைவி விஜயலட்சுமி மறைந்து, செப்டம்பர் 1-ம் தேதியுடன் இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அவரின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக, தான் காசிக்குச் சென்றபோது பார்த்த, உணர்ந்த பல விஷயங்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டார் ஓ.பி.எஸ். நெடுநேரம் ஆன்மீகம் பேசிக் கொண்டிருந்தவர்கள், அரசியலுக்குள் நுழைந்தார்கள். அ.தி.மு.க-விற்குள், எடப்பாடி தரப்பால் தான் ஓரங்கட்டதையும், மத்திய பா.ஜ.க அரசு தன்னைக் கைவிட்டதையும் வருத்தத்துடன் ரஜினியிடம் பேசினார். ‘தொண்டர்கள் யாரும் எடப்பாடியை ஏத்துக்கல. மாவட்ட நிர்வாகிகளை விலைக்கு வாங்கி, தன்னுடைய ஆதரவாளர்களாக மாத்தி வெச்சிருக்கார். கட்சியே அழிஞ்சிரும் போலயிருக்கு. அதனாலதான், கட்சியை மீட்டெடுப்பதற்காக, மாவட்டம் வாரியாகச் சுற்றுப்பயணம் போகப் போறேன். காஞ்சிபுரத்திலேயிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பிக்குறேன். உங்க ஆதரவைக் கொடுங்க’ என ரஜினியிடம் நேரடியாகவே கேட்டார் ஓ.பி.எஸ்.

ரஜினிகாந்த்

சற்று நிதானித்து, ‘உங்க மனசுக்கு எந்தக் கெடுதலும் நடக்காது. உங்க நல்ல நோக்கம் நிச்சயமாக நிறைவேறும்’ என வாழ்த்தினார் ரஜினி. ‘தன்னுடைய சுற்றுப்பயணம் வெற்றிப்பெற ரஜினி வாய்ஸ் கொடுப்பார்’ என்பதை எதிர்பார்த்தார் ஓ.பி.எஸ். அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்காமல், நழுவிவிட்டார் ரஜினி. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்தும் இருவரும் கலந்துரையாடினார்கள். இமாலயத்தில், பாபாஜியின் குகையில் பெற்ற பிரசாதங்களை ரஜினி அளிக்கவும், அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டு கிளம்பினார் ஓ.பி.எஸ். ரஜினி எங்களுக்காக வாய்ஸ் கொடுக்கவில்லை என்றாலும், சுற்றுப்பயணத்திற்கு முதல்நாள் அவருடனான சந்திப்பு நிகழ்ந்திருப்பது, நிச்சயம் எங்களையெல்லாம் உற்சாகப்படுத்தியிருக்கிறது” என்றனர் விரிவாக.

சுற்றுப்பயணத்திற்கு ஆதரவு, பாபாஜி பிரசாதம் என பல விஷயங்களை பன்னீர் ஆதரவாளர்கள் பேசினாலும், அதைத்தாண்டியும் ஒரு விஷயம் இந்தச் சந்திப்பு பின்னணியில் பேசப்படுகிறது. நம்மிடம் பேசிய பன்னீர் அணியின் சீனியர் தலைவர் ஒருவர், “ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அவர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அளித்திருக்கிறது. ஏற்கெனவே, அரசியல் சுழலில் சிக்கியிருக்கும் ஓ.பி.எஸ்., இந்த வழக்கு விசாரணையால் நொந்துப் போயிருக்கிறார். கோயம்பேடு கட்டட விவகாரத்தை தோண்டியெடுத்து, அவருக்கு மேலும் சிக்கலை வரவழைக்க காய் நகர்த்தல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. தன் மீது பிடி இறுகுவதற்கு மயிலாப்பூர் பிரமுகரும் ஒரு காரணமென கருதுகிறார் ஓ.பி.எஸ்.

ரஜினி – ஓ,பி.எஸ்

சமீபத்தில், அடையாறிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓ.பி.எஸ் தலைமையில் சீனியர் நிர்வாகிகள் சந்தித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். அப்போது, ‘அந்தாளாளத்தான் நாம ரோட்டுக்கு வந்துட்டோம். அவரை நீங்க நம்பியிருக்கக்கூடாது’ என மயிலாப்பூர் பிரமுகரைக் கடுமையாக விமர்சித்து, பலரும் ஓ.பி.எஸ்-யிடம் கோபப்பட்டனர். மயிலாப்பூர் பிரமுகர் மீது தனக்கும் வருத்தங்கள் இருப்பதால், ஓ.பி.எஸும் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். இந்தத் தகவல் மயிலாப்பூர் பிரமுகருக்கு எட்டியபிறகுதான், ஓ.பி.எஸ் மீது பிடி இறுக ஆரம்பித்தது. முன்புபோல, டெல்லி பா.ஜ.க மேலிடத்திடம், ஒரு செய்தியை கொண்டுச் செல்லும் ‘சேனல்’கள் ஓ.பி.எஸ்-யிடம் இல்லை. அதனால்தான், ரஜினியைப் பிடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தான் சந்திக்கும் சிக்கல்களிலிருந்து விடுபட, ரஜினி மூலமாக டெல்லியை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். முயற்சி பலனளிக்குமா என்பது தெரியவில்லை” என்றார்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து, இதுவரை பன்னீர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே, அதைக் கடத்திச் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. “நாளை சுற்றுப்பயணத்தை வைத்துக்கொண்டு, இன்று அவர் ரஜினியைச் சந்தித்திருப்பதை, வெறும் மரியாதை நிமித்தமாகவே மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பன்னீருக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… சிக்கல்களிலிருந்து விடுபட உதவுவாரா… விரைவில் தெரிந்துவிடும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.