நிலவின் சரித்திரத்தில் இந்தியாவின் பெயர் அழுத்தமாக ஆகஸ்ட் 23-ம் தேதி எழுதப்பட்டுவிட்டது. சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றி பெற்றுள்ளது.

1,750 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் தன் நான்கு கால்களையும் அழுத்தமாகப் பதித்து நிலவின் பரப்பில் இறங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து நான்கு மணி நேரம் கழித்து, அதன் வயிற்றிலிருந்து பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ரோவர் வாகனம் வெளியில் வந்தது. 26 கிலோ எடையுள்ள இந்த ரோவர், ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் தூரம் என்ற வேகத்தில் நகர்ந்து சென்று நிலவில் தன் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டது. சந்திரயான் – 3 திட்டத்துக்காக இந்தியா செலவிட்டிருக்கும் தொகை, 613 கோடி ரூபாய். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் உழைப்பு.

விக்ரம், பிரக்யான்

இஸ்ரோ அமைப்பில் ஒரு பெரிய குழுவே இதற்காக இரவு பகலாக வேலை பார்த்தது. ஆனால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் ஆயுள்காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இப்போது பலரும் எழுப்பும் கேள்விகள் இரண்டு. இதற்காகவா இத்தனை கோடிகள் செலவழிக்க வேண்டும்? ஏன் இவற்றின் ஆயுள்காலம் 14 நாட்கள்?

இதற்கு விடை தேட, நிலவின் சீதோஷ்ண நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். பூமி தன்னைத் தானே 24 மணி நேரங்களுக்கு ஒருமுறை சுற்றிக்கொள்கிறது என்பது நாம் அறிந்ததே! இதையே நம் கணக்கில் ஒரு நாள் என்கிறோம். நிலா தன்னைத் தானே சுற்றிக்கொள்ள நம் கணக்கின்படி 29.5 நாள் ஆகிறது. அதில் சுமார் பாதி அளவான 14 நாட்கள் என்பது நிலவின் ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது.

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கியுள்ளது. அங்கு நிலவுக் கணக்கின்படி ஒரு நாள் பகல் இருக்கும், ஒரு நாள் முழுக்க இரவு இருக்கும். விக்ரம் லேண்டர் போய் இறங்கிய ஆகஸ்ட் 23-ம் தேதி அங்கு பகல் தொடங்கியது. அடுத்த 14 நாட்களும் அங்கு வெளிச்சம் இருக்கும். சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி தம் செயல்பாட்டுக்குப் பயன்படுத்தும் விதமாக விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, சூரிய வெளிச்சம் இருக்கும் 14 நாட்களும் இவை தொடர்ந்து செயல்பட முடியும்.

பிரக்யான் ரோவர்

அதன்பிறகு 14 நாட்கள் அந்தப்பகுதி இருளில் மூழ்கிவிடும். சூரிய சக்தி பேனல்கள் மின்சாரத்தை உருவாக்காது. எனவே, இந்த இரண்டுமே செயலிழந்துவிடும். அந்த இரவு நேரத்தில் -233 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை தாறுமாறாகக் குறைந்துவிடும். தொடர்ந்து 14 நாட்கள் இந்தச் சூழலை இவை தாக்குப் பிடிக்குமா என்பது தெரியாது. உறையவைக்கும் இந்தச் சூழலைத் தாங்கி அவை பத்திரமாக ஜீவித்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஒருவேளை அந்த 14 நாள்கள் நீளமான இரவு முடிந்து விக்ரமும் பிரக்யானும் மீண்டும் வெயில் வரும்போது சூரியசக்தி கிடைத்து உயிர்பெற்றால் ஆச்சரியம்தான். அப்படி நடந்தால் மேலும் 14 நாட்கள் அவை ஆராய்ச்சியைத் தொடர முடியும். இதற்கான சாத்தியங்களும் இருப்பதால்தான், ”இன்னொரு நிலவு நாள் வரையில் அவை ஆராய்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளன” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

அப்படி நடந்தால், 14 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு 14 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 14 நாட்கள் அவை ஆராய்ச்சி செய்யும்.

நிலவின் தென் துருவத்துடன் ஒப்பிடும்போது அதன் மையப்பகுதியில் சூரிய வெளிச்சம் நீண்ட நேரம் இருக்கும். ஆனால், அங்குமே கூட மற்ற நாடுகளின் ரோவர்கள் அதிக நாட்கள் தாக்குப் பிடித்தது கிடையாது. அதிகபட்சமாக அமெரிக்கா அனுப்பிய ரோவர் ஒன்று 40 கி.மீ தூரம் வரை பயணம் செய்தது. அதன்பிறகு தொடர்பறுந்து தொலைந்துவிட்டது.

விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படம் (இடது)

இங்கிருந்து பார்ப்பதற்கு அழகிய வெளிச்சப் பந்து போலத் தெரியும் நிலா, உண்மையில் கடினமான பாறைகளும் பள்ளங்களும் நிறைந்த மிக மோசமான தரைப்பகுதியைக் கொண்டது. ரோவர் நிலை தடுமாறி ஒரு பள்ளத்தில் விழுந்தாலும் ஆயுள் முடிந்தது. இப்படிப்பட்ட சவாலை, நிலவின் மிக மோசமான தென் துருவத்தில் எதிர்கொண்டிருக்கிறது பிரக்யான் ரோவர்.
இவ்வளவு சவாலான தென் துருவத்துக்கு நாம் ஏன் போக வேண்டும்? ஏனெனில், அதுதான் இதுவரை யாராலும் ஆராயப்படாத பகுதி. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை சந்திரயான் – 1 விண்கலம் இந்தப் பகுதியில்தான் உணர்ந்தது. இப்போது பிரக்யான் ரோவரும் அங்கிருக்கும் மண் மற்றும் பாறைகள், அவற்றின் வேதியியல் தன்மை, வெப்பநிலை, அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்களின் அடர்த்தி என்று பலவற்றை ஆராய்கிறது.எதிர்கால நிலவுப் பயணங்களுக்கும், இன்னும் தொலைதூர கிரகங்களின் மர்மங்களுக்கு விடை தேடும் ஆராய்ச்சிகளுக்கும், விண்கலங்களை பூமிக்கு அப்பால் கொண்டு சென்று நிலைநிறுத்தும் திறனை தீர்க்கமாகப் பெறுவதற்கும் இந்த ஆராய்ச்சிகள் அவசியம்.

உண்மையில் இதை இந்தியா மிகக் குறைந்த செலவில் சாத்தியமாக்கியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.