மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடிக்கு, “புரட்சித் தமிழர்” என்ற பட்டத்தை வழங்கினார்கள், சர்வ சமய பெரியோர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, “புரட்சித் தமிழர்” பட்டம் மேடையில் வழங்கப்பட்டது என்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதிமுக மாநாட்டின் புகைப்பட கண்காட்சி

மறுபுறம் இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எழும்பூரில் இருக்கும் தனியார் ஹோட்டலில் ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய புகழேந்தி, “ஒய்.எம்.சி.ஏ-விலிருந்து வெளியில் வந்ததும் ஒரு நண்பர் என்னைப் பிடித்துக்கொண்டார். அவர், ‘உங்க அரசியலில் சண்டை பண்ணிக்கோங்க.. எங்ககிட்ட ஏன் சண்டை பண்றீங்க’ என்று கேட்டார். நான், ‘நாங்க என்னங்க செய்றோம்’ என்றேன். அதற்கு அவர், ‘புரட்சித் தமிழன் (எடப்பாடி பழனிசாமி) என்று எப்படிச் சொல்லலாம்’ என்றார். அதற்கு நான், ‘நாங்கள் சொல்லவில்லை.

மதுரையிலிருந்து தகரம்தான் சொல்லியது. நாங்கள் எங்கள் தலைவரை தங்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். தகரத்துக்கும், தங்கத்துக்கு வித்தியாசத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்’ என்றேன். இவ்வாறு என்னிடம் பேசியவர், ‘சத்யராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். அவர், ‘புரட்சித் தமிழன் என்பது நாங்கள் சத்யராஜுக்கு வைத்த பெயர்.

சத்யராஜ்

அதை எப்படி அவர்கள் உரிமை கொண்டாட முடியும்’ என்றார். அதற்கு நான், ‘சத்யராஜைக் கறுப்புச் சட்டையோட போய் விவாதம் பண்ணச் சொல்லுங்க.. அப்போதான் சரியாக இருக்கும்’ எனச் சொல்லிவிட்டு வந்தேன்” என்றார். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “புரட்சி தலைவி என்று பட்டம் கொடுத்ததற்கு ஒரு வரலாறு இருக்கிறது. விரமங்கையாக இருந்து புரட்சி செய்தார்.

இந்திய நாட்டில் இருக்கும் முதல்வர்கள் அவரை வந்து வணங்கி விட்டு சென்றார்கள். இவருக்கு புரட்சி தமிழராம். தமிழ் என்று சரியாக சொல்லிவிட்டால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். தமிழு என்பார். அப்படிப்பட்டவருக்கு புரட்சி தமிழன் பட்டம். என்ன புரட்சி செய்தார். தமிழ் மண்ணுக்காக பிரபாகரன் வீர மரணம் அடைந்தார். அவன் புரட்சி தமிழன். நீ என்ன புரட்சி தமிழன். கொலை செய்து விட்டு காட்டிலே ஒளிந்திருந்தாய். நீ புரட்சி தமிழனா?” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

வைத்திலிங்கம்

இதற்கிடையில் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையூர் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகள், “எடப்பாடி பழனிசாமிக்கு நாங்களாக முன்வந்து புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை சூட்டவில்லை. ஆர்.பி உதயகுமாரின் ஆதரவாளரான நெல்லை பாலு என்பவரின் ஏற்பாட்டில் பட்டத்தை வழங்க அழைத்துச் செல்லப்பட்டோம். இது கட்சி நிகழ்வு நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

கிறிஸ்தவத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரும், இஸ்லாமியத்தை சேர்ந்த ஒரு ஹாஜியாரும் வருவதாக சொன்னதால்தான் நானும் வந்தேன். ஏதோ புரட்சி என்று பட்டம் சொன்னார்கள். அங்கு நேரில் வந்து தான் புரட்சித்தமிழன் என்கிற பட்டம் எனக்கு தெரியும். பட்டத்திற்கு ஏற்றவரா என்று நான் கூற முடியாது. ஏனென்றால் இது நான் வழங்கவில்லை. பொதுமக்களாக சேர்ந்து வழங்க விருப்பப்பட்டு அதற்கு என் மூலம் வழங்கினார்கள். மற்ற மத குருமார்களுடன் சேர்ந்து இந்த பட்டத்தை வழங்கி விட்டு ஒரு பகவத்கீதையும் வழங்கிவிட்டு நான் வந்து விட்டேன். இதுதான் நடந்தது” என்றார்.

பெங்களூரு புகழேந்தி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓபிஎஸ் அணியை சேர்ந்த சுப்புரத்தினம், “இது முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் வேலை. பரபரப்புக்காக செய்திருக்கிறார்கள். முதலில் சம்மந்தப்பட்ட சாமியார் மறுத்திருக்கிறார். பிறகு சமாதானம் செய்திருக்கிறார்கள். பட்டத்தை சாமியார்கள் வழங்கவில்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல். தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்ற மனநிலையில் விளக்கம் அளித்திருக்கிறார், மடாதிபதி. இந்த அறியாமையை நினைத்தால் சிரிப்பதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

திருமாவளவனுக்கு எழுச்சி தமிழர், சீமானுக்கு செந்தமிழன் என்று அழைத்துக்கொள்கிறார். புரட்சி என்பதை ஒரு இடத்தில் இருந்தும் தமிழன் என்பதை ஒரு இடத்தில் இருந்தும் எடுத்து ஒட்டி, வெட்டி இணைந்திருக்கிறார்கள். வலிய சென்று பட்டத்தை சூட்டிக்கொள்வது சரிதானா?. பட்டங்களை நமக்கு நாமே சூடிக்கொள்ள முடியாது. நமக்கு நாமே கழுத்தில் மாலையை எடுத்துக்கொள்ள முடியாது. பிறர் நம்மை பாராட்டி போட வேண்டும். நாமே ஒரு மாலையை வாங்கி கொடுத்து, போட வந்தவன் தடுக்கி கீழே விழுந்தது போன்ற நிலை இருக்கிறது” என்றார்.

கோவை சத்யன்

இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் விளக்கம் கேட்டோம், “எடப்பாடிக்கு கோடான கோடி தொண்டர்களும், மக்களும் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைத்திலிங்கம் பெயரை சொல்வதற்கு கூட ஒருவர் இல்லை. வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். பட்டத்தை அவர் ஏற்றுக்கொண்டால் என்ன?. இல்லை என்றால் என்ன? கேவலமாக தனி நபர் விமர்சனம் வைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. ஒரே இயக்கத்தில் 50 ஆண்டுகள் இருந்து, மக்கள் மனதில் வெற்றி பெற்று இந்த இடத்திற்கு எடப்பாடி வந்திருக்கிறார். யாரால் அந்த உயரத்தை எட்ட முடியவில்லையோ அவர்கள் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.