பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது ஸ்பெயின். மொத்த உலகமும் அவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்க, ஓராண்டு காலமாய் அந்த அணியைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூதம் பற்றிய விவாதமும் இப்போது கிளம்பியிருக்கிறது.

கடந்த 12 மாதங்களாக ஸ்பெயின் வீராங்கனைகளுக்கும் அந்த அணியின் பயிற்சியாளருக்கும் ஃபெடரேஷனுக்கும் இடையிலான பிரச்னை மீண்டும் இப்போது உலக அரங்கில் பேசப்பட்டுவருகிறது.

2023 ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. ஒன்பதாவது உலகக் கோப்பை தொடரான இதில் மொத்தம் 32 அணிகள் பங்கெடுத்தன. சிறப்பாகச் செயல்பட்ட ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பெரும் எதிர்பார்ப்போடு நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என வென்று சாம்பியன் ஆனது.

FIFA Women’s World Cup 2023

ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டி ஸ்பெயினுக்கு அவ்வளவு எளிதாக இருந்து விடவில்லை. ஒரு கோல் பின்தங்கிய இங்கிலாந்து, இரண்டாவது பாதியில் தொடர்ந்து அட்டாக் செய்துகொண்டே இருந்தது. இருந்தாலும் அதைச் சமாளித்து வெற்றியை வசப்படுத்தியது ஸ்பெயின். ஸ்பெயினின் ராணி லெடிஸியா தன் மகள் இன்ஃபான்டா சோஃபியாவோடு இந்த வரலாற்றை நேரில் கண்டுகளித்தார். ராஜ குடும்பம் முதற்கொண்டு ஒட்டுமொத்த தேசமும் தங்கள் அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியில் நிழலில் பல பிரச்னைகள் மறைந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது எழத் தொடங்கியிருக்கிறது.

ஸ்பெயின் அணி தங்கள் சிறப்பான செயல்பாட்டுக்காகவும் வெற்றிக்காகவும் மட்டும் கொண்டாடப்படவில்லை. அவர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற சூழ்நிலையுமே அவர்களை இன்னும் அதிகமாகக் கொண்டாட வைத்திருக்கிறது. ஏனெனில் ஸ்பெயினின் 12 சூப்பர் ஸ்டார் வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அப்படியிருந்தும் உலகின் மிகச் சிறந்த அணிகளை வீழ்த்தி வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது ஸ்பெயின். ஆனால், ஏன் அந்த 12 வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பையில் ஆடவில்லை?! அதுதான் இப்போது பேசப்படவேண்டியது. ஓர் ஆண்டுக்கு முன்பு அதிகம் பேசப்பட்டதும் கூட!

கடந்த ஆண்டு பெண்கள் யூரோ தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இத்தொடரின் காலிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது ஸ்பெயின். அதன்பிறகு அந்த அணியைச் சேர்ந்த 15 வீராங்கனைகள் ஒரு போராட்டத்தைத் தொடங்கிவைத்தனர். அதற்குக் காரணம் பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டா.

ஜார்ஜ் வில்டா

ஸ்பெயினைச் சேர்ந்தவரான வில்டா, கடந்த 2015ம் ஆண்டு ஸ்பெயின் பெண்கள் அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார். அதற்கு முன் அதன் அண்டர் 17, அண்டர் 19 அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்தார் அவர். வில்டா பயிற்சியாளர் ஆன பின் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பயிற்சி நேரங்கள், முறைகள், போட்டிகளுக்கான பயணம் உட்படப் பல விஷயங்களை வீராங்கனைகளின் விருப்பத்துக்கு மாறாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதைவிட பெரிய பிரச்னையாக, வீராங்கனைகள் தங்கள் ஹோட்டல் அறைகளை நள்ளிரவு வரை மூடக்கூடாது என்ற விதியையும் பிறப்பித்திருக்கிறார் வில்டா. இதுபோன்ற பல விஷயங்கள் வீராங்கனைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த, அவர்கள் பலமுறை பயிற்சியாளரை மாற்றச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

அந்த யூரோ காலிறுதியில் ஸ்பெயின் அணி தோற்ற பிறகு அணியின் கேப்டன் ஐரீன் பெரடஸ், சில வீராங்கனைகளோடு சேர்ந்து ஸ்பெயின் கால்பந்து அசோசியேஷன் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸுடன் வீடியோ கான்ஃபரஸ் மூலம் பேசியிருக்கிறார்கள். அதில் வில்டாவை மாற்றச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஸ்பெயின் கால்பந்து அசோஷியேஷனில் (RFEF) பெண்கள் அணியை அணுகும் முறை மாற்றப்படவேண்டும் என்றும் முன்மொழிந்திருக்கிறார் பெரடஸ். ஆனால் அதற்கும் அசோசியேஷன் செவிசாய்க்காமல் போக, சில நாள்கள் கழித்து அந்த 15 வீராங்கனைகள் அசோசியேஷனுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்டா

அந்த மெயிலில் வீராங்கனைகள் தாங்கள் எமோஷனலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அது தங்கள் உடல் நலத்தையும் பாதிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், இந்த வீராங்கனைகளின் திறனை நல்ல முறையில் வெளிக்கொண்டுவரக்கூடிய சரியான திட்டமிடல் அவசியம் என்றும், ஸ்பெயின் அசோஷியேஷன் அதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். அப்படியில்லாத பட்சத்தில் தங்களைத் தேசிய அணிக்குத் தேர்வு செய்வது பற்றி பரிசீலிக்கவேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்தச் செய்தி ஸ்பெயின் கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீரர்களுக்கும் பயிற்சியாளருக்குமான பிரச்னை நிச்சயம் பூதாகரமாக வெடிக்கும் என்றும், பயிற்சியாளர் வில்டா மாற்றப்படலாம் என்றும் கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அசோசியேஷன் பயிற்சியாளருக்கு சாதகமாகவே நின்றது.

ஸ்பெயின் கால்பந்து அசோசியேஷனுக்கு மெயில் அனுப்பிய வீராங்கனைகள் பட்டியல்:

அய்டானா போன்மாட்டி, மரியானோ கால்டென்டி, ஓனா பாட்லே, பாட்ரி குயாரோ, மாபி லியோன், சாண்ட்ரா பனோஸ், கிளாடியா பினா, லோலா கயார்டோ, ஐனோயா மரோஸா, நெரியா, எய்ஸாகிரே, அமயுர் சரீகி, லூசியா கார்சியா, லெய்லா ஔஹாபி, லையா அலெக்சாண்ட்ரி, ஆண்ட்ரியா பெரீரா

ஜார்ஜ் வில்டா

இந்த 15 வீராங்கனைகள் மட்டுமல்ல, இன்னும் சில வீராங்கனைகளும் கூட பயிற்சியாளர் குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவே செய்திருக்கின்றனர். குறிப்பாக 2 முறை பாலன் டி ஓர் விருது வென்ற அலெக்சியா புதேயாஸ், ஜெனிஃபர் ஹெர்மோஸோ, கேப்டன் பெரடஸ் ஆகியோர் கூட வீராங்கனைகள் பக்கம் நின்றிருக்கின்றனர்.

வீராங்கனைகளின் பிரச்னைகளுக்குச் செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அசோசியேஷன், அவர்களுக்கு எதிராக நின்றது. அந்த 15 பேரும் பயிற்சியாளரிடமும் அசோசியேஷனிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் தேசிய அணிக்கு ஆட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. யூரோ கோப்பைக்கும் உலகக் கோப்பைக்கும் இடையே நடந்த போட்டிகளில் அந்த வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அதேசமயம் அந்த வீராங்கனைகள் சிலரோடு அசோசியேஷன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தொடங்கியது. அதனால் உலகக் கோப்பைக்கான அணியில் அந்த 15 பேரில் எட்டு பேர் உலகக் கோப்பை அணிக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அய்டானா போன்மாட்டி, மரியானோ கால்டென்டி, ஓனா பாட்லே மூவர் மட்டுமே உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றனர்.

ஆனால் உலகக் கோப்பை தொடங்கியதும் எதுவும் மாறிவிடவில்லை. வீராங்கனைகளுக்கும் பயிற்சியாளர்களுக்குமான விரிசல் அப்படியேதான் இருந்திருக்கிறது. நெதர்லாந்து அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியின்போது அது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தப் போட்டியில் சப்ஸ்டிட்யூட் செய்யப்பட்ட அலெக்சியா புதேயாஸிற்கு கைகொடுத்திருக்கிறார் பயிற்சியாளர் ஒருவர். ஆனால் அவருக்குக் கை கொடுக்காத புதேயாஸ், இன்னொரு பயிற்சியாளரையும் புறக்கணித்திருக்கிறார்.

போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்ற பிறகும் கூட பல வீராங்கனைகள் பயிற்சியாளரோடு இணைந்து வெற்றியைக் கொண்டாடவில்லை. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களின் வழியாக மீண்டும் விமர்சனங்களைக் கிளப்பின. காலிறுதியின்போது மட்டுமல்லாமல், இறுதிப் போட்டிக்குப் பிறகும் கூட கோப்பைக் கொண்டாட்டத்தின்போது இதேதான் நிகழ்ந்திருக்கிறது. அதனால் இப்போது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பிரச்னை பேசுபொருளாகியிருக்கிறது.

முக்கிய வீராங்கனைகள் பலர் இல்லாதபோதும் கோப்பை வென்றிருக்கும் ஸ்பெயின் அணியின் திறனைப் பலரும் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வெற்றி வீராங்கனைகளின் பிரச்னையை அதன் நிழலில் மறைத்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஓர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் நிச்சயம் அந்த அசோசியேஷன் பயிற்சியாளரைத் தலையில் வைத்துக் கொண்டாடப்போகிறது. அப்படியிருக்கையில் வீராங்கனைகளின் பிரச்னைக்கு அவர்கள் எங்கே செவிசாய்க்கப் போகிறார்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.