கடந்த 2021-ம் ஆண்டு, திமுக ஆட்சியில்,  காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை  ஆரஞ்ச் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டது மாசு கட்டுப்பாட்டு வாரியம். இரண்டு ஆண்டுகள் கடந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ஆராய நிபுணர் குழு அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், திடீரென ‘காயர் தொழிலைக் காப்பாற்ற வேண்டும்’ என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அதிமுக முறையிட்டுள்ளது.  இப்படி இரு கட்சிகளும் காயர் தொழிலைக் காக்கப் போராடுவதாகச் சூளுரைக்கின்றனர். ஆனால், இந்தத் திடீர் நகர்வின் பின்னணி என்ன?

தென்னை நார் கட்டி-காயர் தொழில்

இந்தியாவில் ’காயர்’ தொழில்

உலகளவில் தென்னை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதில் இரண்டாவது அதிகமாக ஏற்றுமதி செய்யும் மாநிலம் தமிழ்நாடு.
கிட்டத்தட்ட 4,618 யூனிட்கள் (மேலும் 4,000 யூனிட்கள்  பதிவு செய்யப்படாதவை)  இங்கு இயங்கி வருகின்றன.  இதில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 68% உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலம், தென்னை நார், நார் துகள் (காயர் பித்), கயிறு என 70-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு, 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவதுடன், இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.4,500 கோடிக்கு ஏற்றுமதியும், உள்ளூரில் 3,500 கோடி வரையில் வர்த்தகமும் நடக்கிறது. இப்படியான வர்த்தகம் நடக்கும் இந்தத் தொழிலில், கடந்த 2021-ம் ஆண்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தென்னை நார்-காயர் தொழில்

இதில், ’திறந்தவெளியில் காயர் பித்தை ரசாயனம் கொண்டு பிரித்தெடுப்பதால் நிலம் மாசடைகிறது’ எனக் கூறி நான்கு தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு என நினைத்ததாலோ என்னவோ, ஓட்டுமொத்த தொழிற்சாலைகளும் மாசு ஏற்படுத்துகிறது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொழிலை ஆரஞச் பட்டியலுக்கு மாற்றியது. மேலும், தொழிற்சாலைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதில், ”விவசாய நிலங்கள், திறந்த வெளியிலுள்ள நிலங்கள், நீர் நிலைகள் அருகில் தென்னை நார், பித், தயாரிப்பில் வெளியேறும் கழிவுநீர் நிலத்தடிக்குள் செல்லாத வகையில் தளத்துடன் அமைப்பது,  வெளியேறும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது, கான்கிரீட் தளத்தில் மட்டுமே காயர் உலர வைப்பது” போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது காயர் தொழிலில் ஈடுபடுவோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

இதனால், தொடர்ந்து தென்னை தொழில் சார்ந்த சங்கங்கள் அரசிடம் முறையிடவே, இதை ஆராய குழு அமைப்பதாக சொல்லியிருக்கிறது. ஒருபக்கம் திமுக குழு அமைத்த  ஒரு வாரத்திலேயே அதிமுகவைச் சேர்ந்த எம்.பி தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின்  கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல், செயலாளர் செல்லதுரை ஆகியோ நிர்மலா சீதாரமனை சந்தித்து ஒரு மனுவை அளித்துள்ளனர்.
அதில், ”மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியின் தலைமையில் குழுவை அமைத்து தென்னை நார் ஏற்றுமதி செய்யும் தொழிலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்“ எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன்

இது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, “அதிமுகவின் 10 ஆண்டுகளில்  5,000 கோடி மதிப்பிலான காயர் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. தேங்காய் போன்ற பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வெள்ளைப் பிரிவிலிருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு மாற்றினர். இதனால் தொழில் மொத்தமாக படுத்துவிட்டது. ஆனால், இந்த சூழலிலும் கூட திமுக அரசு வசூல் வேட்டை நடத்தியது.

துரை

பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள 1,500 தொழிற்சாலைகளுக்கு,  ரூ.2 லட்சம் என மொத்தமாக, 30 கோடி வரை திமுக வசூலித்திருக்கிறது.  அதற்காகப் பிரத்யேக ‘ஏஜென்சி’ அமைத்து தமிழகத்தில் உள்ள பல தொழிற்சாலைகளிலும் வசூல் நடந்திருக்கிறது.  இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தப்பின், அது நிறுத்தப்பட்டது. திமுக குழு அமைத்தப்பின் நாங்கள் மத்திய அமைச்சரை சந்திக்கவில்லை.  கடந்த ஆண்டு குழு அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நாங்கள் தான் வைத்தோம். அதை இந்த ஆண்டுதான் திமுக அறிவித்துள்ளது.  நாங்கள் கொடுத்த அழுத்ததால்தான் திமுக அரசு குழுவையே அமைத்தது. தென்னை மற்றும் காயர் சம்மந்தமான தொழிலைக் காப்பாற்ற பாடுபட்டது அதிமுக தான். இதில் திமுக தொழிலை வஞ்சிக்க மட்டுமே செய்தது. இப்போதும் கூட நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் குழு அமைப்பதாக நாடகம் போடுகின்றனர். இது முற்றிலும் தேர்தல் லாபத்துக்கானது மட்டும்தான்” என்றார்.  

இது குறித்து நம்மிடம் பேசிய தென்னை நார் மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் துரை, “தென்னை மட்டையில் இருந்து காயர் பித் பிரித்து எடுப்பதற்கு 90 சதவீதத்தினர் தண்ணீரைப்  பயன்டுத்துகின்றனர். 4 சதவீதத்தினர் மட்டும்தான் ரசாயன முறையில் பித்தைப் பிரித்தெடுக்கின்றனர்.  4%  தொழிற்சாலை செய்வதை அடிப்படையாக வைத்து, ஒட்டுமொத்தமாக தென்னை சார்ந்த தொழிலை ஆரஞ்ச் பட்டியலுக்கு மாற்றியது சரியல்ல. இது குறித்து முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதன்பின் இதை ஆய்வு குழு அமைப்பதாக அறிவிப்பு வெளியானது” என்றார்.

தென்னை-காயர் தொழில்

இது குறித்து நம்மிடம் பேசிய தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர், “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உடனடியாக ஆரஞ்ச் பட்டியல் மாற்றத்தால், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், அதை மிகக் குறுகிய காலத்தில் அமைப்பது சிரமம். அப்போது தான் ஆளுங்கட்சி, தற்போது மூலப்பொருள்கள் இருக்கும்வரை உற்பத்தி மேற்கொள்ளுங்கள், கட்டமைப்பு வசதி இல்லாமல் போனாலும், நாங்கள் கொள்கிறோம் என்றனர். ஆனால் அதன் பெயரில் பெரும் வசூல் நடந்தது. எல்லாம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்து குழு அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதை முன்கூட்டிய செய்திருக்கலாம். அரசின் இந்தக் காலதாமதத்திற்கு காரணம் அந்த வசூல் வேட்டைதான். குழு அமைப்பதால் எங்களுக்கு நல்லது நடந்தால் சரி” என்றார் விரக்தியுடன்.

மெய்யநாதன்

இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்,  “ குழுவில் இடம்பெறுவோர் யார் என்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும். வெறும் 269 தொழிற்சாலைகள் மட்டும் தான் பித் பிரித்தெடுக்க ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றன. அந்தத் தொழிற்சாலைகள் மட்டும்தான் ஆரஞ்ச் பட்டியலில் இருக்கும். இப்போதும் தென்னை மற்றும் காயர் பித் தொழில் வெள்ளை பட்டியலில் தான் இருக்கிறது. தண்ணீரைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தேவையில்லை. சிறு குறு தொழிற்சாலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் திமுக அரசு ஏற்படுத்தாது.” என்றார். 

அதிமுக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “வெறும் குற்றச்சாட்டை வேண்டுமானால் முன்வைக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தென்னை சார்ந்த அமைப்புகள் என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் அப்படி எந்த புகாரும் கொடுக்கவில்லை. அது முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை. இரண்டாண்டுகள் எழுந்த கோரிக்கை அடிப்படையில் தொழில்புரிவோர் நலனுக்காக இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறுவது அபத்தமானது” என்றார்.

அதிமுக – திமுக

இரண்டு ஆண்டுகள் கடந்து குழு அமைக்கிறது திமுக. இதில் எழுந்த சர்ச்சையை கடந்து இந்தக் குழு அமைப்பதால் திமுக-வுக்கு அரசியல் லாபம் என்னும் நிலை உருவாகிவிடக் கூடாது என்பதால் திடீரென அதிமுக மத்திய அமைச்சர் சந்தித்திருக்கிறது. இந்த இரு கட்சிகளின் அரசியல் நோக்கத்தால் பாதிக்கப்படுவது தென்னை தொழில் செய்பவர்கள்தான். இந்தக் குழப்பத்தால் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களும் தயக்கத்தில் இருக்கின்றனர் என்பது தான் வேதனை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.