இயக்குநரும், நடிகருமான சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களையும் இயக்கி உள்ளார். அவருக்கு ஷாஜிதா என்கிற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

கல்லீரல் பிரச்னை காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் ஒரு மாதம் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிலிருந்து சற்று நலமாகிவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மரணம் அடைந்தார்.

சித்திக் மரணம்

மேடை நாடகம் மூலம் கலை உலகில் அடியெடுத்து வைத்தார் சித்திக். பின்னர் கொச்சி கலாபவனில் மிமிக்ரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் நட்பான லால் உடன் இணைந்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பக் காலத்தில் இயக்குநர் பாசிலுக்கு உதவி இயக்குநராக சினிமா உலகில் இயங்கினார் சித்திக். சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘பப்பன் பிரியப்பெட்ட பப்பன்’ என்ற படத்தில் லாலுடன் இணைந்து முதன் முதலாகத் திரைக்கதை எழுதினார் சித்திக்.

மோகன்லால் நடித்த ‘நாடோடி காற்று’ என்ற படத்திற்குத் திரைக்கதை எழுதித்தான் லாலும், சித்திக்கும் மலையாளத்தில் பிரபலமானார்கள். சித்திக்கும் லாலும் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கிய ‘இன் ஹரிஹர் நகறும்’ என்ற படம் ஹிட்டானதைத் தொடர்ந்து இருவரும் முக்கிய இடத்தைப் பிடித்தனர். 1989-ல் வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சித்திக், தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தைத் தமிழில் விஜய், சூர்யா, வடிவேலுவை வைத்து இயக்கி ரசிகர்களைச் சிரிக்கவைத்து வெற்றிபெற்றார். தமிழில் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’, பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களையும் இயக்கினார்.

சித்திக்

இயக்குநர் சித்திக்கின் உடல் இன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை கடவந்தறா ராஜீவ்காந்தி இண்டோர் ஸ்டேடியத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் காக்கநாடு பள்ளிக்கரையில் உள்ள வீட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றல் ஜும் ஆ மஜித்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பலரும் இயக்குநர் சித்திக்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோகன்லால் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “எனது பிரியப்பட்ட சித்திக்கின் மரணத்தை நம்ப முடியவில்லை. கதைகளை இயல்பாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை சிக்கல்களைக் கதாபாத்திரங்கள் மூலம் ஆழமாகவும் வெளிப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்குப் பிரியமானவராக மாறியவர் சித்திக். திடீரென நம்மைவிட்டுப் பிரிந்ததால் ஏற்பட்டுள்ள வருத்தத்தை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. புதுமையான கருத்துகள், உச்சம் தொடும் அவரின் இயக்கம் காரணமாக அவரின் ஒவ்வொரு படத்துக்காகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.

மோகன்லால்

சித்திக் நம்மை நிறையச் சிரிக்கவைத்தார். கண்களை ஈரமாக்கினார், எதிர்பார்ப்புகளை விட்டுவிடக்கூடாது என நினைவுபடுத்தினார். உயரங்களை எட்டிப்பிடிப்பதற்காகத் தனது சொந்த வாழ்க்கை மூலம் நமக்கு வழிகாட்டினார். பேச்சு, நடவடிக்கைகளில் அன்பை வெளிப்படுத்துபவர். யாருடனும் கோபம் கொள்ளாமல், ஆடம்பரம் இல்லாமல் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். அவர் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படமான ‘நோக்கெத்தா தூரத்துக் கண்ணும் நட்டு’ படம் தொடங்கி இறுதி படமான ‘பிக் பிரதர்’ வரை அவர் படைப்புகளில் நடிப்பதற்கு எனக்குப் பாக்கியம் கிடைத்தது. சினிமாவிலும், நிஜ வாழ்க்கையில் எனக்கு பிக் பிரதராக இருந்தார் சித்திக். வேதனையுடன் அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.