பள்ளிப் படிப்பை முடித்ததும் குடும்பச் சூழல், வறுமை போன்ற காரணங்களால் பலரால், குறிப்பாக பெண்களால் கல்வியைத் தொடர முடியாத நிலை இன்றளவும் உள்ளது. அத்தகைய சூழலில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Government ITI) மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள்‌ மட்டுமே பயிலும் அரசு தொழில்துறை நிலையங்களும் உள்ளன. இவற்றில் தொழில் முறையிலான கல்வி கற்பிக்கப்பட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கித் தரப்படுகிறது. இந்தப் படிப்பு முற்றிலும் இலவசம் என்பதோடு இன்னும் பல்வேறு சலுகைகளும் உள்ளன.

பிரேம் குமார்

இலவசமாக பயிற்றுவிக்கப்படும் இந்த தொழில்துறை படிப்புகள் பற்றி, மதுரை புதூரில் இயங்கி வரும் அரசு பெண்கள் தொழில்பயிற்சி நிலையத்தின் பயிற்சி அலுவலர் பிரேம்குமாரிடம் கேட்டோம்…

“மதுரையில் இயங்கி வரும் பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆறு வகையான தொழில்துறை படிப்புகள் உள்ளன. இதில் ஓராண்டு படிப்புகள் மற்றும் இரு வருட படிப்புகள் உள்ளன. அழகுக்கலை (cosmetology), தையல் கலை (sewing technology), கணினி சம்பந்தமான இரு படிப்புகள் என, நான்கு படிப்புகள் ஓராண்டுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றனா. குறிப்பாக அரசு தொழில்பயிற்சி நிலையங்களை பொறுத்தவரை, அழகுக்கலை படிப்பு, தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, Electronic mechanics மற்றும் Technician medical assistance என்ற இரு படிப்புகளும் இரண்டு ஆண்டுகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. தேர்வுக் கட்டணம் போன்ற எந்த செலவும் கிடையாது. அவர்கள் படிப்பதற்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

மாணவிகளுக்கு உபகார சம்பளமாக மாதத்துக்கு 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர புதுமைப்பெண் திட்டம் என, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி கற்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் போக்குவரத்து சிக்கல்களை குறைப்பதற்கு இலவச பேருந்து பாஸ் வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது. கிராமப்புற மாணவிகள் இங்கேயே தங்கி பயில்வதற்கு ஹாஸ்டல் வசதியும் உள்ளது. ஹாஸ்டல் மற்றும் உணவும் முற்றிலும் இலவசமே.

அழகுக்கலை பயிற்சி

இந்த தொழில்துறை படிப்புகளைப் பயில பெண்களுக்கு எந்தவித வயது வரம்பும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. பள்ளிப்படிப்பில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இரண்டு ஆண்டு தொழில்துறை படிப்புகளைப் பயிலும்போது, அவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்.

அவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற மொழிப்பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதினால் போதும். இதேபோல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள் இரண்டு ஆண்டு தொழில்துறை படிப்பை பயிலும் போது ,மொழிப்பாடத் தேர்வை மட்டும் எழுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும்.

இங்கு பயின்று முடித்ததும் நாங்களே வேலைவாய்ப்பிலும் உதவி புரிவோம். இதுவரை 90% மாணவிகள் படித்து முடித்ததும் பணியில் சேர்ந்துள்ளனர். இங்கு பயின்ற கல்வியை வைத்து, தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தும் பெண்களும் உள்ளனர். அழகுக்கலை, தையல் கலை போன்ற பல படிப்புகள் இன்று பல பெண்களுக்கு சுயதொழில் தொடங்கி வெற்றி காணும் திடத்தைக் கொடுத்துள்ளன.

அரசு சார்பிலான தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் உள்ளன. அங்கு வெவ்வேறு வகையான தொழில்துறை படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

women

பெண்களுக்காக பிரத்யேகமாக இயங்கும் தொழில்துறை நிலையங்கள் தவிர்த்து, இரு பாலருக்குமான பொதுவான தொழில்துறை நிலையங்களும் உள்ளன. தற்போது மதுரையில் இயங்கி வரும் இந்த பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில், 280 மாணவிகள் பயின்று வருகின்றனர். இவ்வளவு சலுகைகளுடன் இவை இயங்கி வந்தாலும், இதுபற்றிய விவரங்களைப் பலர் அறிவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த நிலையங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகம் வேண்டும். அப்போது தான் இன்னும் நிறைய பேர் இதன் மூலம் பலன் பெறலாம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.