அண்ணாமலையின் நடைப்பயணம், ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராமிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்…

“அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பாரா, மாட்டாரா?”

“அண்ணாமலை தலைவராக இருந்தால் தி.மு.க மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும். அவர் இல்லையென்றால் பா.ஜ.க ஓரளவுக்கு மூச்சுவிடலாம். ஹனி ட்ராப் செய்வது ஒன்றுதான் அவருக்குத் தெரிந்த வேலை. அவ்வளவு மலிவான அரசியல் செய்யும் நபர் வேண்டுமா இல்லையா என்பதை டெல்லிதான் முடிவுசெய்ய வேண்டும்.”

“ஆனால் அண்ணாமலை வந்தபிறகுதான் கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது என பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே?”

“அவர் கட்சியை எங்கே வளர்த்தார்… `ஆடு, மாடு வளர்த்திருக்கிறேன்’ என்றுதான் அவரே சொல்கிறார். மக்களை ஒன்றும் வளர்க்கவில்லை. சரவணன், மாணிக்கம், அருணாசலம் போன்றவர்களை ஓட வைத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரால் பா.ஜ.க ஒரு இஞ்ச்கூட வளரவில்லை. ஆருத்ரா, குட்வின் ஜுவல்லர்ஸ் டீலிங்தான் அண்ணாமலை சாதித்தது.”

ஹரீஷ், அண்ணாமலை

“அண்ணாமலைக்கும் ஆருத்ராவுக்கும் என்ன சம்பந்தம்?”

“ஹரீசுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம்… ஹரீசுக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம்… ஹரீஷுக்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் தெரியும். ஆர்.கே.சுரேஷ் ஏன் தலைமறைவாக இருக்கிறார்… தவறு இல்லையென்றால் வந்து ஆஜராகச் சொல்ல வேண்டியதுதானே… ஏன் அண்ணாமலை அதைச் செய்யவில்லை?”

“சரி, பா.ஜ.க-வில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று சொல்கிறீர்கள், அவ்வளவு மோசமான கட்சியா பா.ஜ.க?”

“நான் சொன்னது நூற்றுக்கு 100 சதவிகிதம் உண்மை. இரவு நேரங்களில் மட்டும் மொபைல் போனை எடுத்துவிடக் கூடாது என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவரே என்னிடம் சொன்னார். எதேச்சையாக போன் எடுத்துவிட்டால் கூட வீடியோ கால் வருகிறது, அதை ரெக்கார்டு செய்துவிடுகிறார்கள், நாங்கள் உஷாராகி விடுவோம் என்றார். ஆக, அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.”

காயத்ரி ரகுராம்

“பா.ஜ.க-வினர்தான் வீடியோ கால் செய்து ரெக்கார்டு செய்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?”

“யார் செய்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இரவு நேரங்களில் தெரியாத எண்களிலிருந்து வீடியோ கால் வந்தால், எடுக்கக் கூடாது. ஹனி ட்ராப்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பதுதான் என்னுடைய அறிவுறுத்தல். ஆண்களுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன்.”

“சரி, பா.ஜ.க-வில் இருந்தவரை தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். இப்போது ஏன் குறைந்துவிட்டது?”

“மதுரையில் மிக அற்புதமான நூலகத்தைத் திறந்திருக்கிறார்கள். அது வரவேற்கப்பட வேண்டியது. அதை எப்படி நான் விமர்சிக்க முடியும்… தவறு செய்யும்போது கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். செந்தில் பாலாஜியை நான் ஆதரிக்கவில்லையே?”

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

“ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என அண்ணாமலை கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீங்கள் அண்ணாமலை பக்கமா… ஆளுநர் பக்கமா?”

“ஆளுநர் அரசியல் பேசுகிறாரோ இல்லையோ, அண்ணாமலை தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால் அண்ணாமலைதான் முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.”

“அப்படியானால் ஆளுநர் அரசியல் பேசலாம் என்கிறீர்களா?”

“ஆளுநர் நடுநிலை வகிக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. அவர் பா.ஜ.க உறுப்பினர் அல்ல. அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும். அரசுக்குப் பரிந்துரைகள் வைக்கலாமே தவிர, கருத்துகள் வைக்கக் கூடாது. கருத்துகளை முன்வைப்பதால்தான் பிரச்னை எழுகிறது.”

ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழ்நாடு சனாதன மண் என்கிறார் ஆளுநர், சமூக நீதி மண் என்கிறார் முதல்வர்… உங்களுக்கு எப்படி?”

“ `தமிழ் மண்’ என்றுதான் நான் பார்க்கிறேன். சமூகநீதியை ஓரளவு கடைப்பிடிக்கிறோம். ஆனால் அது 100% முழுமை பெறவில்லை. நான் அதிகம் பயணம் செய்திருக்கிறேன், தமிழ்நாடுதான் மிகுந்த அமைதியான மாநிலம். சாதி வேறுபாடுகள் கொஞ்சம் இருந்தாலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்ற மத பாகுபாடு இங்கு இல்லை. எல்லோரும் சமத்துவமாக இருக்கிறோம்.”

“அப்படியானால் சனாதன மண் இல்லை என்கிறீர்களா?”

“தமிழ்நாட்டில் அதிகமானோர் கல்வி கற்றிருக்கிறோம் என்பதால் நியாயமுள்ள மண்ணாக இருக்கிறது. திருக்குறளும் அதற்கு முக்கியக் காரணம். ஏராளமான அறிவுரைகள் நமக்கு திருக்குறளிலிருந்து கிடைத்திருக்கின்றன.”

திருக்குறள்

“பா.ஜ.க-வில் இருந்தவரை திராவிடத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். வெளியேறிய பிறகு திராவிடம் குறித்து படிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்கிறீர்கள். திராவிடம் குறித்து இப்போது உங்கள் புரிதல் என்ன?”

“திராவிடம் என்பது தவறான வார்த்தை இல்லை. திராவிடத்தில் நாம் இருக்கிறோம். திராவிட அரசியலிலிருந்துதான் வருகிறோம். திராவிடத்தை நோக்கித்தான் எப்போதும் பயணித்திருக்கிறோம். தேசிய கீதத்திலேயே கலந்துவிட்ட சொல் அது. எனவே திராவிடத்தைப் புரிந்துகொள்வதில் தவறு இல்லை!”

“அண்ணாமலையே நடைப்பயணத்தை அறிவித்துவிட்டார். நீங்கள் சொன்ன நடைப்பயணம் எப்போது நடக்கப்போகிறது?”

“அண்ணாமலை பெண்களைத் தொடர்ச்சியாக தரக்குறைவாகப் பேசிக்கொண்டுத்தான் இருக்கிறார். ஜோதிமணி, துர்கா ஸ்டாலின் என பலரை அவதூறாகப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வில் புகார் கொடுக்கும் பெண்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக நடைப்பயணம் செல்வேன் அல்லது போராட்டம் நடத்துவேன்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.