‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ், MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

கடந்த அத்தியாயத்தில், பச்சிளங்குழந்தைகளில் ஏற்படும் ரத்தச் சர்க்கரை குறைவின் (Hypoglycemia) அறிகுறிகள் குறித்து விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுகிறதென்பதை விரிவாகக் காண்போம்.

ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுவதற்கான காரணங்கள்:

குறைந்த அளவு குளுக்கோஸ் உற்பத்தி/ குளுக்கோஸ் சேமிப்பு:

கர்ப்பகாலத்தில், சிசுவின் ஆற்றல் (energy) தேவையில், 60%-70%, குளுக்கோஸால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்திலிருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவிற்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்குத் தடைப்படுவதால், தனது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை பராமரிக்க, தனது கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்பகாலத்திற்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் (Small for Gestational Age/SGA) குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆய்வுகள் மூலம் 50% மேலான குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் SGA பச்சிளங்குழந்தைகளில் ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுவதை அறிய முடிகிறது.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

அதிகளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி:

நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள் (Neonatal sepsis), தாழ்வெப்பநிலை (Hypothermia), பிறக்கும்போது மூச்சுத் திணறல் (Birth Asphyxia), ரத்த ஓட்டக் குறைவு (Shock) மற்றும் சுவாசக் கோளாறு (Respiratory Distress) உடைய பச்சிளங்குழந்தைகளில், அதிகளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து, 22 gm/dL-க்கு மேலிருந்தால் அதனை பாலிசைத்தீமியா (Polycythemia) என்போம். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிகளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அட்ரீனல் பற்றாக்குறை (Adrenal insufficiency), ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு (Congenital hypopituitarism), குளுக்ககான் (Glucagon) குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லாச் சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங்குழந்தைகளில் ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

இன்சுலின் மிகை ரத்தச் சர்க்கரை குறைபாடு (Hyperinsulinemic Hypoglycemia):

பச்சிளங்குழந்தைகளில் இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்தச் சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம். பின்வரும் பச்சிளங்குழந்தைகளில் இன்சுலின் மிகை ரத்தச் சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது…

நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளில் (Infant of Diabetic Mothers/ IDMs), இன்சுலின் மிகை ரத்தச் சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48% பேருக்கு ரத்தச் சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிறவி இன்சுலின் மிகை (Congenital hyperinsulinism): கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்தச் சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இன்சுலின் உற்பத்தி செய்யும் Nesidioblastosis, Islet cell adenoma முதலிய கட்டிகளிலும், இன்சுலின் மிகையால் ரத்தச் சர்க்கரை குறைபாடு ஏற்படுகிறது.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பிறக்கும்போது மூச்சுத்திணறல் (Birth Asphyxia), Beckwith-Wiedemann Syndrome என்னும் மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளில், இன்சுலின் மிகைப்படும் அபாயம் உள்ளது.

அடுத்த அத்தியாயத்தில், அறிகுறியுடன் கூடிய ரத்தச்சர்க்கரை குறைவு மற்றும் அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

பராமரிப்போம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.