வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

பெரும்வாரியான மக்கள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய குடிகளுமே பிரிட்டிஷார் மேல் கோவமாகத்தான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுரண்டப்பட்ட வளங்கள், அடிமைப்படுத்தப்பட்ட நாட்கள், கல்வி அடையாளம் இழந்தது என கொஞ்ச நஞ்சமா நாம் பட்ட பாடுகள். சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட இன்னல்கள் தான் எத்தனை? வளங்களை, தாதுக்களை தம் ஊர்களுக்கு எடுத்துச்செல்ல மேம்படுத்தப்பட்ட சாலைகள், ரயில்வே என கொண்டுவந்த கொஞ்ச நஞ்ச திட்டங்களும் ஆங்கிலேயருக்கு லாபம் தரும் வகையில் சுயநலமிக்கவை தான். அப்படியென்றால் அனைத்து ஆங்கிலேயர்களும் கல் நெஞ்சக்காரர்கள் தானா?

இல்லை என உரக்கக் கூறுகிறது எழுத்தாளர் அ. வெண்ணிலா வின் ‘நீரதிகாரம்’ தொடர்.

முல்லைப்பெரியாறு அணை

சர் ஜான் பென்னி குயிக். முல்லைப்பெரியாறு அணையின் தந்தை எனலாம். அணை கட்டுவதற்கான முழு முதற் காரணகர்த்தா. அவர் இன்றி இந்த அணை இல்லை. அவர் இன்றி தென் மாவட்டங்களில் நன்செய் நிலங்களில் நீர் பாய்ந்திருக்காது. அதனால் தான் பொங்கல் நன்பண்டிகை தினத்தில் அவரை கடவுள் போல் கும்பிடும் வழக்கம் நம் தென்னாட்டவரிடம் இருக்கிறது. ஏன் சமீபத்தில் நமது மாநில அரசு அவரது பேத்தியை தேனிக்கு அழைத்து பொங்கல் கொண்டாடி பெருமை சேர்த்தது.

ஒரு சேதிபோல் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் பென்னி என்ற அளவில் தான் எனக்கு தெரியும். ஆனால் இந்த அணை கட்ட அவர் என்ன என்ன இன்னல்களை எதிர்கொண்டார் என்பதை தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு எடுத்துக்கூறும் ஒரு மாபெரும் சரித்திர சாட்சி தான் எழுத்தாளர் வெண்ணிலா அவர்களின் ‘நீரதிகாரம்’.

அணை ஏன் கட்டப்பட வேண்டும். மதுரையில் நிலவிய தாதுவருடப் பஞ்சத்தில் ஆரம்பிக்கிறது தொடர். சொமாலியா பஞ்சத்தை விட பெரும் பஞ்சமாக மதுரையில் கொடுமை கூத்தாடியது என்பதை மனம் நம்ப மறுக்கிறது. கணவன் மனைவி குழந்தைகள் உற்றார் என கண்முன்னே பசியால் கொடும் சாவுகள் ஏற்பட்டன.

முல்லைப்பெரியாறு அணை

பிணங்களை அடக்கம் செய்ய அல்லது அகற்றக் கூட திராணியில்லாது மக்கள் பசியால் வாடினர். பஞ்சம் என்று கேள்வி மட்டும் தான் பட்டிருப்போம். ஆனால் அந்த பஞ்சம் எவ்வளவு கொடுமையானது என்று விவரித்திருக்கும் பாங்கு, அதை படித்தபின் நம்மை ஒரு பருக்கை கூட கீழே சிந்தவிடாது.

அதுவே அந்த விவரிப்பின் வெற்றி. எழுத்தாளரின் லட்சியம். அது இங்கு நிறைவேறியிருக்கிறது. அந்த பஞ்சத்தின் காரணமாக மக்கள் திருடர்களாக மாறியது, வழிப்பறி செய்தது, கஞ்சித்தொட்டிக்காக கையேந்தி நின்றது என பல நிகழ்வுகள் டாகுமெண்டரி போல் அல்லாது ஓரொரு கதை மாந்தர்கள் மூலமாக நமக்கு கடத்தப்படுகின்றன. இந்த கொடுமையை கண்ட பிரிட்டிஷார் இப்பிணியை போக்குவதற்காக பேரியாற்றின் ஒரு பெரும்பகுதி கடலில் வீணாகாமல் தடுப்பதற்கு மற்றும் மடை மாற்றி மதுரை நோக்கி வைகையாய் பாய்வதற்கு அணை கட்ட முன்னெடுக்கின்றனர்.

Representational Image

அணை கட்ட வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்லவே. முதலில் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்க வேண்டும். பின்பு அணை கட்டும் இடத்தை கையகப்படுத்த வேண்டும். ஒப்புதலும் உடனே கிடைக்கவில்லை. பல ராயல் என்ஜினீயர்கள் கையில் தூக்கி பின் கிடப்பில் போடப்பட்ட கோப்பை மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சித்து ராணியிடம் இருந்து ஒப்புதல் வாங்குகிறார் பென்னி. சர் பென்னி குயிக்கின் அளப்பரிய காதல் அதாவது அணை கட்டுவதின் மீதான காதல் பிரமிக்கவைக்கிறது.

பல முறை நிராகரிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய இந்த பேரியாற்று அணை திட்டத்தை எப்படியும் செயல் படுத்தி விட வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி அவர் மீது நமக்கு மாளா அன்பை விதைக்கிறது. பென்னி குயிக்கின் ஆரம்பம் மட்டுமின்றி அவரது தந்தை காலம் முதல் இந்த நாவல் கிளை பரப்பி விவரிக்கிறது. அடிஸ்கும்பே முதல் அவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியது வரை அங்குலம் அங்குலமாக உரையாடல் நடக்கிறது. பிரிட்டிஷாரின் வாழ்க்கை முறை, பென்னி குயிக்கின் மனைவி, அவரது குழந்தைகள் அவர் ஓய்வெடுக்கும் பங்களா என அதகளப்படுத்திருக்கிறார் கதாசிரியர்.

Representational Image

நிலம் கையகப்படுத்த மூலம் திருநாள், சுவாதி திருநாள் என திருவாங்கூர் மகாராஜாவிடம் சமாதானப்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட ப்ரயத்தனங்கள், திவான் அய்யங்கார் மற்றும் மதராஸ் ப்ரெசிடென்ஸி மத்தியில் போக்குவரத்து என அத்தனை வரலாறுகள். கூடவே நாம் பெரிதும் தெரிந்திராத கண்ணகி கோவில் அதன் வழிபாடு என ஒரு ஆவணமே இந்த தொடரில் அடங்கியிருக்கிறது.

அணை கட்டுவதற்கு முந்தைய ஏற்பாடுகளை ‘Preliminary investigation for a dam’ என்று சொல்லுவார்கள். ஒரு தேர்ந்தெடுத்த சிவில் என்ஜினியர் எத்துணை சிரத்தை எடுத்து அந்த முதல் விசாரணையை செய்வார்களோ அதுபோன்றதொரு நுட்பமான ஆராய்ச்சியுடன் இந்த தொடரை அணுகியிருக்கும் வெண்ணிலா அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படுத்துகிறார். அவ்வளவு minute detailing.

சரி அணை கட்டுவதென்றால் ஆட்கள் வேண்டுமே. அட்டை, கொடிய மிருகம், மாறுபட்ட சீதோஷண நிலை என பல தொந்தரவுகளுக்கு மத்தியில் தேனி கம்பம் என்று மலையடிவாரத்திலிருந்து ஆட்களை கொணர்ந்து அவர்களை மேற்பார்வையிடும் கங்காணிகள், யானை மனிதன் எதிர்கொள்ளல், வெள்ளம், மேல்மலை காய்ச்சல், உணவு உறைவிடம் என தினப்படி அரங்கேறும் நிகழ்வுகள் என காட்சிகள் கண்முன்னே திரை போல் விரிகின்றன. கிடைக்கும் சந்தடி சாக்கிலெல்லாம் மதமாற்றம் செய்யத்துடிக்கும் பாதிரியார்களை, மதம் மாறும் மக்களின் பிரதான காரணமாகிய வர்ணாசிரம பேதம், பஞ்சம் என அவற்றையும் நுட்பமாக விரவியிருப்பது தொடரின் பன்முகத்தன்மையை மெருகூட்டுகிறது.

நீரதிகாரம்

எழுத்தாளர் ஒரு கோழியை கூட சிறு கதாபாத்திரமாக அந்த சூழ்நிலையை விவரிப்பதற்காக உபயகோபாடுத்திய பாங்கு ரசிக்கவைக்கிறது. உதாரணமாக அவரது எழுத்துக்களில், “இறகு விலக்கிப் பார்த்துக்கொண்டிருந்த கோழிக்குஞ்சின் சிறுவிழி நின்று அசைந்தது’ மற்றும் ஒரு பெரும் சரித்திர நிகழ்வுக்காக அடித்தளம் போடும் மெஷினின் இரைச்சலை பொருட்படுத்தாமல் கோழி தன்னியல்பில் இயங்குகிறது என்பதை ‘ஜங்க்ஷனின் பரந்த வயலில் குஞ்சுகள் பின் தொடர, காட்டிலிருந்து இடம்பெயர்ந்த ஆனையூர்க்கோழி சத்தங்களைப் பொருட்படுத்தாமல் மண்ணைக் கீறி இரை தேடியபடி முன்னேறிக்கொண்டிருந்தது’ போன்ற சொற்தொடர்கள் கடுங்கோடையில் பெய்யும் மழையைப்போல இறுக்கமாக நாவல் செல்லும் சூழ்நிலையில் மனதை லகுவாகின்றன.

அரசுக்காக குருதி சிந்தி உழைத்த திவான் ஒரு கட்டத்தில் அவப்பெயர் பெறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது அவரை குறுகிக் கொன்று கொண்டிருக்கிறது. சில நாட்கள் கழித்து ரெஸிடண்ட் ஹெனிங்க்டனிடம் இருந்து வரும் கடிதம் மூலம் அவர் அவப்பெயர் நீங்கியது என்பதை திவான் உணர்கிறார். மீளாத்துயில் கொள்கிறார். ஒரு கதாபாதிரம் தானே என்று கொள்ளாமல் அதற்கும் தக்க மரியாதை அளித்து ‘sent off with all honours’ என்பார்களே அதுபோன்ற ஒரு பிரியாவிடையளிக்கிறார். ஒரு வகையில் திவான் குற்றமற்றவர் என்பது நமக்கும் சற்று மகிழ்ச்சியைத் தருகிறது. 

நீரதிகாரம்

பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் கஞ்சியைப் பார்ப்பதே அரிது. அதிலும் மேல்மலையில் வேலைக்குச் சென்றவர்கள் ஆறணா மற்றும் ரூபாய் போன்றவற்றை முதன் முதலாக அவர்கள் பார்க்கும் காட்சி, நடுநிசியில் எழுந்து அதை கண்ணில் ஒற்றிக்கொள்வது, அதை கடவுள் போல பாவித்து விழுந்து கும்பிடுவது என விவரிக்கும் அந்த ஒரு பத்தி போதும் அந்த பஞ்ச காலத்தை நம் கண்முன்னே நிறுத்த.

ராணுவ பணியில் அமர்த்தப்பட்ட ராயல் இஞ்சினியர்கள் எவ்வாறும் பொதுப்பணித்துறைக்கு வந்தார்கள், உள்ளூர் ஜனம் எதற்காக ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று ஹெனிங்க்டன் மற்றும் பென்னி பேசிக்கொள்ளும் சம்பாஷகனைகள், டேம் கட்டுமானத்தில் spillage என்று சொல்லப்படும் உபரி நீர் செல்வதற்கான வாய்க்கால், பென்னி அவர்களின் கிரிக்கெட் பிரயாசை மற்றும் அதில் விற்பன்னராக இருந்தது, மேல்மலையில் வேலை செய்வதற்காக டர்பைனை கப்பலில் ஏற்றி வர யோசிக்கும் யுக்தி என தொடரின் ஏகப்பட்ட சிரத்தையான ஆராய்ச்சிகள் மற்றும் ஆச்சர்யங்கள். ஒவ்வொரு வாரமும் வரலாற்று ஆவணங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கிளைக்கதைகளில் வெண்ணிலா அவர்கள் என்றுமே ஸ்பெஷலிஸ்ட் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிரூபித்துளார். யார் எதிர்பார்த்தார்கள்? தாது வருடப்பஞ்சத்தை இரண்டு அத்தியாயங்களில் கண் முன்னே கொண்டு வருவார் என்று. யார் எதிர்பார்த்தார்கள்? ஒரு கிராமமே திருட்டுக்கு செல்லும் கதை நீராதிகாரத்தில் முளைக்கும் என்று. யார் எதிர்பார்த்தார்கள்? கண்ணகி கோவில் அதை கும்பிடும் காணிகள் அவரது வாழ்வியல் முறைகள் கோட வர்மாவுக்கு உதவிய கதைகள் இங்கு கிடைக்கும் என்று. ஒரு நாள் பெய்யும் மழையை சிலாகித்து மூன்று பக்கங்கள் சுவாரஸ்யமான விவரணை தந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Representational Image

ஆறு எந்த வழியில் பாய்கிறது? எத்தனை நிலங்களை பயிர் செய்ய உதவுகிறது? கம்பம் ஜமீன், சுருளியாறு, பாளையம்பரவு அணை, உத்தமுத்து அணை, ரயத்து என நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தரவுகள் அதற்கு பின் இருக்கும் அயராத உழைப்பு அளப்பரிய வியப்பையளிக்கிறது.

எவ்வளவு சிரமத்திற்கு இடையில் பிரிட்டிஷார் டேம் கட்டுமானத்தை நிறைவு செய்திருக்கின்றனர் என்பதற்கு ஒரு அத்தாட்சி பாருங்கள். டெய்லர் என்ற பொதுப்பணித்துறை இன்ஜினியர் பென்னியுடன் வேலை செய்கிறார். மேல்மலையின் மேலேயே தங்கியிருக்கும் அவருக்கு இங்கிலாந்தில் இருக்கும் தன் குடும்பத்தின் ஞாபகம் வருகிறது. அங்கு சென்றால் வேலை தடைபடும் என்ற காரணத்திற்காக அவர்களை இங்கு அழைக்கிறார். அவர்கள் கப்பல் ஏறி இங்கு வந்து கொண்டிருக்கும் வேளையில் இவர் மலை மேலிருந்து கீழே ஒரு மெஷினில் விழுந்து கோர விபத்தில் இறக்கிறார். கப்பல் இறங்கி வரும் டெய்லரின் பெண்ணுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று பென்னி கலங்கும் காட்சி நம்மை உலுக்குகிறது.

நீரதிகாரம்

ஓவியர் ஷ்யாம் Shyam Sankar பற்றி சொல்லியே ஆகவேண்டும். இவரது கைவண்ணத்தில் தான் கோடவர்மா, பென்னி, மேல்மலை, டேம் கட்டுமானங்கள், பஞ்சம், மாயன் என ஒவ்வொருவரும் நம் கண்முன்னே விரிகின்றனர். ஆரம்பதில் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பின்புதான் தெரிகிறது ஒவ்வொரு தொடருக்கும் ‘நீரதிகாரம்’ என்று தலைப்பு கொடுக்கும்பொழுது அந்த வாரம் எழுத்தாளர் என்ன சொல்லாடியிருக்கிறரோ அதை ஒரு hint ஆக தருவித்திருக்கிறார் தலைமை வடிவைப்பாளர் திரு Karuppiah Pandian sir அவர்கள் மற்றும் சரவணன் குழு. Brilliant மற்றும் interesting. இந்த நாவலின் ஒரே ஒரு பக்கத்திற்காக வரலாற்றின் பல பக்கங்களை புரட்டி குறிப்பு எடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

நாவலின் ஸ்திரத்தை மேம்படுத்த மேலும் அதற்குரிய ஆவணங்களை கண்டறிய எழுத்தாளர் பென்னி வாழ்ந்த இடத்துக்கே நேரடியாகச் சென்றிருக்கிறார். பென்னி மேல் பிரியம் கொள்வது தாங்கள் மட்டும் இல்லை. தங்கள் மூலம் நாங்களும் அவரின் பால் மாளாத அன்பு கொள்கிறோம்.

தொடர் நூறாவது அத்தியாயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இரண்டு வருடங்கள் நீரதிகாரம் மற்றும் பென்னியுடன் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதே பேருவகையாக இருக்கிறது.

‘மழை பாரபட்சமில்லாமல் எல்லோரையும் நனைத்தது’ என்ற ஒரு வரி இந்த சமுதாயம் மொத்தத்துக்கும் ஆனது.

அணை கட்டி முடிக்கப்படும் அந்தத் தருணத்திற்காக பென்னி மட்டும் இல்லை. நாங்களும் காத்திருக்கிறோம்.

வாழ்த்துக்களும் நன்றியும் மேடம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.