கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி, தொடர்ந்து எட்டு நாள்கள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படதாகச் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினரும் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்து முக்கிய டைரி ஒன்று சிக்கியதாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் இருந்த செந்தில் பாலாஜியை கைதுசெய்தனர். ஆனால், அவருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பதினைந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் இரண்டு நாள்கள், கரூரில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு, இன்றும் மூன்றாவது கட்டமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர்.

வருமான வரித்துறை சோதனை

கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சக்தி மெஸ், கொங்கு மெஸ் உரிமையாளரான சுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான ராயனூரில் அமைந்துள்ள அவரது வீடு, சின்ன ஆண்டாங்கோயில் பகுதியிலுள்ள ரமேஷ்பாபு என்பவருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், அதிபன் ஃபைனான்ஸ் மற்றும் குறிஞ்சி ஃபைனான்ஸ் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிகாரிகள் தற்போது சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அசோக்குமார் வீடு, கான்ட்ராக்டர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இப்படி, அடுத்தடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் பல கட்டமாக வருமான வரித்துறை சோதனை நடப்பதால், ‘அடுத்து யார் வீட்டில் சோதனை நடக்கும்?’ என்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.