பெரம்பலூர் மாவட்டம் பொன்மனம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. பட்டியலினத்தை சேர்ந்த இளைஞரான இவர் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவியில் பிஸியோதெரபிஸ்டாக பணி புரிகிறார். மாற்றுச் சாதியை சேர்ந்த ஒரு சில மருத்துவர்களால், பிரபு சாதி ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது பிரபுவுக்கு நாற்காலி கூட கொடுக்காத கொடுமை அரங்கேறியிருக்கிறது என்கிறார்கள். இதனால் பிரபு தரையில் அமர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்.

பிசியோதெரபி பிரபு

சாதி ரீதியிலான அழுத்தங்களுக்கு தொடர்ந்து ஆளாக்கபடுவதால் கடும் மன உளைச்சலில் தவிப்பதாக புலம்பும் பிரபு, தனக்கு நடக்கும் கொடுமைக்கு நீதி கேட்டு அதற்கான முன்னெடுப்பு களையும் செய்து வருகிறார். முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்து தன் துயரத்துக்கான தீர்வு கிடைக்குமா என போராடிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து பிரபுவிடம் பேசினோம், “அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2016-ல் குழந்தைகள் நலப்பிரிவில் பிஸியோதெரபிஸ்டாக தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்தேன். பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்த நான் என் வேலையை தக்க வைத்து கொள்வதற்காக கடுமையாக உழைத்தேன். எல்லாம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் குழந்தைகள் நலப்பிரிவில் டாக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தன் மாமியாருக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும் என அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

ஒரு நாள்தானே என நான் சென்று விட்டு வந்தப் பிறகு தினமும் போக வேண்டும் என்றார். `சார், 35 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. அது தவிர இங்கு என்னை தவிர வேறு யாரும் பணியில் இல்லை சிகிச்சைக்கு வருகிற மக்கள் பாதிக்கப்படுவாங்க. என்னால் முடியாதுனு’ சொல்லிட்டேன். அப்போதே, `நீ என்ன டாக்டர் மாதிரி பேசுறனு’ கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். பிறகு என்னை பற்றி பொறுப்பு சி.எம்.ஓ கண்மணிக்கிட்ட தொடர்ந்து புகார் சொன்னார். என்னை வேலையை விட்டு நீக்க சொல்லி அவருக்கு அழுத்தம் கொடுத்தார்.

பிஸியோதெரபிஸ்டாக ஒருவர் மட்டும் இருப்பதால் அவர் முடியாதுனு சொல்லிட்டார். பின்னர் 2020-ல் எனக்கு இரண்டு மாதம் சம்பளம் போடவில்லை. முறைப்படி கடிதம் எழுதிக்கொடுத்தும் சம்பளம் கேட்டேன். `நீ எல்லோரை பத்தியும் புகார் அனுப்புகிறாய். உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா… சம்பளம் போடுகிறோம்’ என்றனர். நானும் அப்பாவை அழைத்துச் சென்று கடிதம் கொடுத்தேன்.

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரபு

அப்பா முன்னாலேயே கடிதத்தை சில டாக்டர்கள் சேர்ந்து கிழித்து போட, மனசு உடைந்து விட்டார். அந்த மன உளைச்சலிலேயே இருந்தவர் கொஞ்ச நாளில் இறந்து விட்டார். இதையடுத்து என் பெயருக்கு கீழ் பச்சை இங்கில் கோடு போட்டு என்னை வேலையை விட்டு அனுப்பிவிட்டனர். நான், எழுத்துபூர்வமாக எழுதி கொடுக்க சொல்லி கேட்டேன் தரவில்லை. நான் பொறந்த சாதி தான் அவர்களுக்கு பிரச்னை அதனால் என்னை நாயை விட கேவலமாக நடத்துறாங்கனு எனக்கு தெரிஞ்சது.

நீதி கேட்டு சுகாதார துணை இணை இயக்குநர், முதல்வர் தனிப்பிரிவு, பிரதமர் அலுவலகம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம் என மனு அனுப்பினேன். இதை விசாரித்த இணை இயக்குநர் இவ்வளவு அநியாயம் நடந்திருக்கேனு கேட்டு கலங்கியதுடன் எனக்கு வேலை தரவும், நிறுத்தப்பட்ட மாதங்களுக்கும் சேர்த்து சம்பளம் போடவும் உத்தரவிட்டார். அதன் பிறகு பணிக்கு சேர்ந்த எனக்கு இதுவரை நிர்வாகம் சம்பளம் மற்றும் எனக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் எதையும் தரவில்லை.

குழந்தைக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் பிரபு

எனக்கு சுமார் ரூ.3 லட்சம் வரவேண்டியிருக்கிறது. நீ எங்க போய் கதவை தட்டினாலும் கடைசியாக இங்கு தான் வர வேண்டும் என நிர்வாகத்தில் சொல்கின்றனர். ஏற்கெனவே மன உளைச்சலில் தவிக்கும் எனக்கு தற்போது புதிதாக இடம் ஒதுக்கியிருக்கின்றனர். அதில் உட்கார்வதற்கு நாற்காலி, டேபிள் கூட கொடுக்கவில்லை. நானும் தரையில் அமர்ந்து சிகிச்சைக்கு வரும் குழந்தைகளையும் தரையில் வைத்து தான் சிகிச்சை கொடுக்கிறேன். மாற்றுச் சாதியை சேர்ந்த சில டாக்டர்கள் தான் இது போன்ற என் துயரத்திற்கு காரணம்” என கலங்கியபடி தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “பிரபு ஒழுங்காக வேலைக்கு வரததால் பணி குறித்த சான்றிதழை நான் தரவில்லை. அதனால் சி.எம்.ஓ அவருக்கு சம்பளத்தை நிறுத்தினார். இது தொடர்பாக அவர் சாதி ரீதியாக கொடுத்த புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேல் தான் தவறிருக்கிறது என்பதும் தெரிந்த பிறகும் அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டனர். ஆனாலும் பிரபு பழையபடி தேவையில்லாததை பேசி வருகிறார்” என்றார்.

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரபு

இது குறித்து ஆர்.எம்.ஓ குழந்தைவேலுவிடம் பேசினோம், “இது நான் இங்கு பணிக்கு வருவதற்கு முன்பு நடந்த சம்பவம் அதைப்பற்றி எனக்கு தெரியாது. தரையில் அமரவைக்கப்பட்டிருப்பது குறித்து உடனே விசாரிக்கிறேன்” என்றார்.

டீன் முத்துகிருஷ்ணனிடம் பேசினோம், “இது குறித்தப் புகாரில் உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி அவருக்கு சேர வேண்டிய சம்பளம் மற்றும் பலன்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுவிட்டது. அனைத்தையும் புதிய கட்டடத்துக்கு மாற்றி வருவதால் பொருள்களை எடுத்து வைக்கின்ற பணி நடக்கிறது அதனால் நாற்காலி இல்லாமல் இருந்திருக்கும் உடனே என்னவென்று கவனிக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.