மும்பை வந்தாரை வாழவைக்கும். வெறும் 15 ரூபாய் இருந்தால் ஒரு வடாபாவ் சாப்பிட்டு ஒரு நேர சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம். அப்படி வந்த எத்தனையோ பேர் ஒரு நேர வடாபாவ் மட்டும் சாப்பிட்டு மும்பையில் பெரிய மனிதர்களாகி இருக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியம் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு 1989 -ம் ஆண்டு பிழைப்பு தேடி மும்பை வந்து தனது கடின உழைப்பால் இன்றைக்கு சூப்பர் மார்க்கெட், காஃபி ஷாப் என்று தொழிலில் முன்னேறி இருக்கிறார்.

ஸ்ரீவைகுண்டம்

அவரை சந்தித்து பேசியபோது ராமசுப்பிரமணியம் கூறுகையில், “எனது சொந்த ஊர் திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மேலபுதுக்குடி ஆகும். 1989 -ம் ஆண்டு மும்பை வந்து எனது மாமாவுடன் சேர்ந்து செம்பூரில் ரயில் நிலையத்திற்கு அருகில் காய்கறி வியாபாரம் செய்தேன். எனது மாமாவிடம் இருந்து காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து ஒவ்வொரு தெருவாக சென்று வியாபாரம் செய்து வந்தேன்.

அதில் அதிகபட்சம் தினமும் 300 ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது எனது மாமா ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கடையை வாங்கி அதில் வியாபாரத்தை தொடங்கினார். நானும் அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்தேன். காய்கறி வியாபாரத்தில் நாங்கள் எதையாவது புதுமையாக புகுத்தவேண்டும் என்று முடிவு செய்தோம்.

மும்பை போன்ற நகரங்களில் வேலைக்கு சென்று விட்டு வரும் மக்கள் காய்கறிகளை வாங்கி வெட்டிக்கொண்டிருக்க சிரமப்படுவார்கள் என்று கருதி நாங்களே சாம்பார், பிரியாணி, கூட்டு என அனைத்திற்கும் தேவையான அனைத்து வகையான காய்கறிகளையும் தனித்தனியாக வெட்டி பாக்கெட் போட்டு வைத்து வியாபாரம் செய்தோம்.

மற்றவர்கள் காய்கறிகளை அப்படியே கிலோ கணக்கில் விற்பனை செய்து வந்தனர். நாங்கள் அதிலிருந்து மாறுபட்டு காய்கறிகளை வெட்டி பாக்கெட் போட்டு விற்பனை செய்தோம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இவ்வாறு கொடுப்பதால் அளவுக்கு அதிகமாக காய்கறிகள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. காய்கறியோடு சூப்பர் மார்க்கெட் தொழிலையும் சேர்த்து கூட்டுத்தொழிலாக நடத்தினோம்.

காய்கறிகளை மும்பை முழுக்க சூப்பர் மார்க்கெட்களிலும் சப்ளை செய்து வந்தோம். குடும்பம் பெரிதானவுடன் ஒவ்வொருவரும் தனித்தனியாக வியாபாரம் செய்வது என்று முடிவு செய்தோம். இதையடுத்து எனது மாமாவின் கடையில் எனக்கு சேர வேண்டிய பங்கை வாங்கிக்கொண்டு தனியாக வந்தேன். 2011 -ம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு செம்பூர் திலக் நகரில் முக்கியமான ஒரு இடத்தில் கடையை விலைக்கு வாங்கி அதில் ஆர்.எஸ்.மணி சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் ஆரம்பித்தேன். இன்றைக்கு கடையில் ஒரு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் இருந்து இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி போன்ற பொருட்களை மும்பைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். அடுத்த ஆண்டிலிருந்து இதே சூப்பர் மார்க்கெட்டை மேலும் பல இடங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

சூப்பர் மார்க்கெட் மட்டுமல்லாது இப்போது ஆர்.எஸ்.மணி கபே என்ற பெயரில் ஸ்நாக்ஸ் கடையை மும்பையில் தொடங்கி நடத்தி வருகிறோம். முதல் கபே 2020 -ம் ஆண்டு தொடங்கினோம். இப்போது மும்பை முழுக்க நான்கு கிளைகள் இருக்கிறது. 5வது கிளையை கோரேகாவில் தொடங்க வேலைகள் நடந்து வருகிறது. ஷாப்பிங் மால்கள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த கபேயை மும்பை முழுக்க திறக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது ஆர்.எஸ்.மணி கபே காஃபிக்கு மிகவும் பிரபலமாகும்.

மும்பையில் அதிகமாக கர்நாடகா ருசியில்தான் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவு பொருட்கள் விற்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்களின் உதவியோடு உணவு பொருட்கள் தமிழக சுவையில் வழங்கி வருவதால் எங்களது கபே-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. வரும் காலங்களில் சூப்பர் மார்க்கெட் மற்றும் கபேயை பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகிறது. இரண்டிலும் சேர்த்து தற்போது ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.