நான் சென்ற வருடம் என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் முழுக்க என்னை வேதனைப்படுத்திய உருவகேலி இப்போது அலுவலகத்திலும் தொடர்கிறது. முன் எப்போதையும் விட, இப்போது இது என்னை அதிகமாகக் காயப்படுத்துகிறது. கலவரப்படுத்துகிறது. காரணம்… இந்த அலுவலகத்தில் நான் ஒருவரை ஒருதலையாகக் காதலிக்கிறேன்.

Body Shaming

நான் குட்டையாக, மிகவும் ஒல்லியாக இருப்பேன். மாநிறம். போதாகுறைக்கு, என் கண்கள் மிகவும் பெரிதாக இருக்கும். எந்தளவுக்கு என்றால், கோயில்களில் காவல் தெய்வங்களின் கண்களை பார்க்கும்போதெல்லாம் என் உறவினர்கள், ஊர்க்காரர்கள், தோழிகள் எல்லாம், ‘உன் கண்ணு மாதிரி இருக்கு’ என்று சொல்லிக் கேலி செய்யும் அளவுக்குப் பெரிய கண்கள். இப்படியாக, உயரம் பற்றிய கேலி, உடல் எடை பற்றிய கேலி, கண்கள் பற்றிய கேலி என வகைவகையாக என்னை உருவகேலி செய்வதற்கு ஏற்ப படைக்கப்பட்டுள்ள ஜீவன் நான்.

பள்ளி, கல்லூரியில் நண்பர்கள், தோழிகள் எல்லோரும் என்னை கேலி செய்து கேலி செய்து வெம்பிப்போனதால், அலுவலகத்தில் தோழமையே இல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உரிமையாகப் பழகுகிறவர்கள்தானே உருவகேலியும் செய்கிறார்கள், எனவே நாம் தனித்தே இருப்போம். அந்த இடைவெளி நம்மை யாரும் கேலி செய்யும் துணிவைக் கொடுக்காது என்று நினைத்தேன். ஆனாலும், எனக்கு அதிக பழக்கமில்லாதவர்கள் கூட, மீட்டிங், லன்ச் அவுட், கெட் டுகெதர் உள்ளிட்ட அலுவலக சந்தர்ப்பங்களில் என்னை கேலி செய்யத்தான் செய்கிறார்கள். அதை அவர்கள் தங்களின் நகைச்சுவை உணர்வாக நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவரின் மனம் புண்படுமே என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. நேரடியாகப் பேசுபவர்கள் ஒரு பக்கம் என்றால்… எனக்குப் பின்னால் என்னை கேலி செய்பவர்களும் உள்ளனர்.

Body Shaming

இந்நிலையில், அலுவலகத்தில் ஒரு சீனியர் மீது எனக்குக் காதல் வந்தது. எட்டு மாதங்களாக அவரை நான் ஒருதலையாகக் காதலிக்கிறேன். நான் அவரை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து என் வேண்டுதல் எல்லாம் ஒன்றுதான்… அலுவலகத்தில் என்னை உருவ கேலி செய்யும் நபர்களுடன் ஒருபோதும் அவரும் சேர்ந்து அப்படி என் மனம் நோகும்படியான சொற்கள் எதையும் சொல்லிவிடக் கூடாது. என்றேனும் ஒருநாள் அவரும் என் உருவத்தை பற்றி எதுவும் கேலியாகப் பேசிவிடக்கூடாது.

இது ஒரு பக்கம் இருக்க, அவர் முன்னிலையில் யாராவது என்னை கேலி பேசிவிடுவார்களோ என்ற எண்ணம், இப்போதெல்லாம் எனக்கு மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. இதை நினைத்து நினைத்தே தாழ்வுமனப்பான்மை என்னை ஆட்கொள்கிறது.

Body Shaming

ஒருவேளை, நான் அவரிடமே நேரடியாகச் சென்று, நான் அவரை ஒருதலையாகக் காதலிப்பதையும், என் உருவகேலி பிரச்னை பற்றியும் கூறிவிடலாமென்று தோணுகிறது. ஆனால், ஒருவேளை அவரிடம் நான் என் காதலை சொன்ன பின்னர், அதை அவர் நிராகரித்தால், அதற்கான பிற காரணங்கள் அவரிடம் இருந்தாலும்கூட, என் உருவத்தாலேயே அவர் என்னை நிராகரித்ததாக என் மனம் நினைக்கும். அது என்னை மேலும் சுக்குநூறாக உடைக்கும்.

என் பிரச்னைக்கு என்ன தீர்வு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.