திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்திருக்கும் உதயேந்திரம் பகுதியைச்சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன், வயது 45. இவர், நேற்று காலை மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால்வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி ஓட்டுநர் கார்த்திகேயன்

பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்களே தலையில் ஏடாகூடமாக தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றி யிருக்கிறார்கள். அப்போதும் தையல் போடப்பட்ட தலைப் பகுதியிலிருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை. அவருக்கு தலையில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், அதிருப்தியடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபுரம் மலைக்கோடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனியார் மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அதிர்ச்சிக் காத்திருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் ‘இரும்பு நட்டு’ இருப்பதைக் கண்டு மருத்துவர்களும், கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இருப்பு நட்டு அகற்றப்பட்டது.

இரும்பு நட்டு பாய்ந்திருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்

தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கோபமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் கேள்வி எழுப்பினர். அப்போதும் அவர்கள் உரிய பதில் அளிக்காமல், அலட்சியப்படுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் விரிவான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் அரசு மருத்துவமனை தரப்பில்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.