சர்வதேச அரங்கில் பல பதக்கங்களை வென்று இந்தியாவின் மூவர்ணக்கொடியை உயரே பறக்கவிட்ட மல்யுத்த வீராங்கனைகளை, இந்திய அரசே போராட்டக் களத்திலிருந்து அடித்து வெளியேற்றிய சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

பிரிஜ் பூஷண்

பா.ஜ.க எம்.பி-யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லி நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மல்யுத்த வீராங்கனைகள். ஒலிம்பிக், காமென்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட பல மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ் பூஷணை கைது செய்யக் கோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு எதிராக ஒரு சிறுமி உள்பட ஏழு வீராங்கனைகள் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியிருக்கிறது. அதில், பிரிஜ் பூஷண்மீது அவர்கள் சுமத்தியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்!

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பிரிஜ் பூஷண்மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக அவரின் தந்தை கொடுத்த புகாரில், `புகைப்படம் எடுக்கும்போது, என் மகளின் தோள்பட்டையை அழுத்திப் பிடித்துக்கொண்டார். பின்னர், மார்பின்மீது கைகளை வைத்திருக்கிறார். `என்னிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள்’ எனச் சொல்லியும் தொடர்ந்து என் மகளுக்குத் தொல்லை கொடுத்தார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்ற 6 வீராங்கனைகள் கொடுத்த புகாரிலிருந்து – இரவு உணவுக்காக உணவகம் ஒன்றிருக்குச் சென்றிருந்த ஒரு வீராங்கனையை, தனியாக தன் டேபிளுக்கு வருமாறு அழைத்த பூஷண், பக்கத்தில் அமர வைத்து மார்பு, வயிற்றுப் பகுதிகளில் கைவைத்திருக்கிறார். மற்றொரு வீராங்கனை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கே வந்த பூஷண், வீராங்கனையின் டி-ஷர்ட்டை தூக்கிவிட்டு வயிற்றிலும் மார்பிலும் கைவைத்து, மூச்சு சீராக இருக்கிறதா எனப் பரிசோதித்ததாகச் சொல்லியிருக்கிறார். பின்னர், அதே வீராங்கனையைத் தனது அலுவலக அறைக்கும் அழைத்திருக்கிறார் பூஷண். தன் சகோதரரோடு வீராங்கனை அங்கு செல்ல, சகோதரரை வெளியில் இருக்குமாறு சொல்லியிருக்கின்றனர். அலுவலக அறைக்குள் வீராங்கனையைப் பலவந்தப்படுத்தி, அவரை பாலுறவு வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியிருக்கிறார் பிரிஜ் பூஷண்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் – மல்யுத்த வீராங்கனை, வீரர்

குழு புகைப்படம் எடுக்கும்போது இன்னொரு வீராங்கனையின் பின் பக்கத்தில் கைவைத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த வீராங்கனை அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றிருக்கிறார். அவரை நகர விடாமல் தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்திப் பிடித்திருக்கிறார். இப்படியாகப் புகாரளித்த ஏழு வீராங்கனைகளிடமும் அவர்களது அனுமதியில்லாமல் அத்துமீறி கைவைத்துக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். `ஊட்டச்சத்து மாத்திரைகள், உணவு, பயிற்சி என அனைத்தும் சிறப்பாகக் கிடைக்க எனது படுக்க அறைக்கு வா’ எனப் பல வீராங்கனைகளுக்கு பிரிஷ் பூஷண் அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தன் வழிக்கு வர மறுப்பவர்களிடம், `இனி வரும் டோர்னமென்ட்களின் நீ விளையாட முடியாது’ என மிரட்டியும் இருக்கிறார்.

இந்திய மகள்களின் குரலைக் கேட்பாரா மோடி?

இந்தப் புகார்கள் வெளியான பிறகு, “இந்திய மகள்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தற்போது முதல் தகவல் அறிக்கையின் மூலம் வெளியாகியிருக்கிறது. பிரிஜ் பூஷண் வீராங்கனைகளுக்குக் கொடுத்த பாலியல் தொல்லைகளைக் கேட்கும்போதே கொடூரமாக இருக்கிறது. ஏற்கெனவே, 2004-ல் பிரிஜ் பூஷணின் மகன் சக்தி சிங், `நீங்கள் உங்களது பிள்ளைகளைக் கவனிப்பதில்லை. எப்போதும் உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள். எங்கள் எதிர்காலம் இருளில் மூழ்கிவிட்டது’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைவைத்தே அவர் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிரிஜ் பூஷணே வெளிப்படையாகத் தான் கொலை செய்திருப்பதாக வீடியோ பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர்மீது சுமார் 40 குற்ற வழக்குகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இப்படியான கொடிய குற்றங்களைச் செய்தவரை மத்திய பா.ஜ.க அரசு பாதுகாக்க நினைப்பது வெட்கக்கேடு. இவ்வளவு நடந்த பிறகாவது இந்திய மகள்களின் குரலை மோடி கேட்பாரா?” என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. `சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். விசாரணைமீது நம்பிக்கை வையுங்கள்’ என்று அமித் ஷா வீராங்கனைகளிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. `உள்துறை அமைச்சரிடமிருந்து நாங்கள் விரும்பிய எதிர்வினை கிடைக்காததால், கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம்’ என வீராங்கனைகள் தரப்பு கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மல்யுத்த வீராங்கனைகள்

இதற்கிடையில், வீராங்கனைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் விவசாயச் சங்கங்கள், `ஜூன் 9 வரை பொறுத்திருப்போம். அதற்குள் பிரிஜ் பூஷணைக் கைதுசெய்யாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். ஜந்தர் மந்தரிலும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவோம்’ என மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு தலைகுனிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், சொந்தக் கட்சியின் எம்.பி-யை கைதுசெய்யத் தயங்குகிறது மத்திய அரசு. அவரைக் கைதுசெய்யவில்லையென்றால்தான், நாட்டுக்குத் தலைகுனிவு என்பதை எப்போது உணரப் போகிறதோ மோடி அரசு?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.