ஆஸ்திரேலியா என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது கங்காருகள்தான். உலகிலேயே கங்காருகள் வாழும் ஒரே பூமியும் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியன் நேஷனல் ஏர்லைன்ஸ் தொடங்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரை வரையில் அனைத்து லட்சிணைகளிலும் கங்காருவே இடம்பெற்றுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் ஆஸ்திரேலியா அரசாங்கமே கங்காரு இனத்தைக் கொத்து கொத்தாக அழிக்க வேட்டைக்காரர்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றது என்ற செய்தி என்னையும் உங்களையும் மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கங்காருகள் இல்லாத ஆஸ்திரேலியாவைக் கற்பனை செய்து கூட நம்மால் பார்க்க முடியுமா? உண்மையிலேயே ஆஸ்திரேலியாவில் கங்காருகள் அழிக்கப்படுகின்றனவா?
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம்
ஆஸ்திரேலியாவின் கலாசார சின்னங்களில் ஒன்றான கங்காருகள் உண்மையிலேயே இயற்கை தாய் ஈன்றெடுத்த ஓர் அதிசய உயிரினம். முழு வளர்ச்சியில்லாமல் பிறக்கும் குட்டிகளை வயிற்றில் உள்ள பைக்குள் வைத்து வளர்க்கும் அதிசய வரத்தை கங்காருவுக்கு வழங்கியுள்ளது இயற்கை. ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிர் அழிக்கும் பிராணியாகத்தான் கருதப்படுகிறது. அதனால் இன்று அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது.

எதற்காக கங்காருகள் கொல்லப்படுகின்றன?
முக்கியமானதும் முதன்மையானதுமான ஒரே காரணம் தற்போது ஆஸ்திரேலியாவில் கணக்கு வழக்கின்றிப் பெருகிக்கொண்டே செல்லும் கங்காருகளின் எண்ணிக்கைதான். சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கை, அந்த நாட்டு மக்கள் தொகையைப் போல இரு மடங்கு ஆகிவிட்ட நிலையில் வேறு வழியில்லாமல் சில வகை கங்காரு இனங்களை அழித்துவிட ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் ஒரு தேசிய சின்னத்தை சட்டப்பூர்வமாக அழிப்பதா என்று உலகெங்கிலும் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பலைகளும் கிளம்பியுள்ளன.
ஏற்கெனவே மக்கள் தொகையை விட கங்காருகளின் எண்ணிக்கை இரு மடங்காகப் பெருகியுள்ள வேளையில், இவை மேலும் மேலும் அதிகரித்துச் செல்கிறது என்றும் இதனால், ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது என்றும் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு. கங்காருகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவற்றுக்கான உணவு தேவை பூர்த்தி அடைவதில்லை. குறிப்பாக, பஞ்சம் நிலவும் காலங்களில், கங்காருகள் கூட்டம் கூட்டமாகப் பட்டினியால் இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, கங்காருகள் பட்டினி கிடந்து சாவதற்குப் பதிலாக, அவற்றை அழிப்பதற்கு அனுமதி கொடுக்க பரிந்துரை செய்துள்ளோம் என்கிறது ஆஸ்திரேலியா.
இது சரியா தவறா?
மிருக நல ஆர்வலர்கள், வணிக நலன்களைப் பூர்த்தி செய்யும் மிருகத்தனமான நடைமுறையாக எதிர்க்கும் இந்த நடவடிக்கை சரியா தவறா என்று முடிவு செய்வதற்கு முன் கங்காரு அழிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதும், இந்தச் சர்ச்சைக்குரிய பிரச்னைக்கு பங்களிக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்வதும் இங்கு முக்கியமாகிறது.

ஆஸ்திரேலியாவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணவும், அதன் நுட்பமான சமநிலை குலையாமல் காக்கவும், அதன் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், வனவிலங்கு மேலாண்மை அவசியம். இதில் ஏதேனும் ஒன்றுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான உடனடித் தீர்வு ஈட்டப்படுதலும் அவசியம்.
தாவர உண்ணிகளான கங்காருகள் அதிக அளவு தாவரங்களை உட்கொள்கின்றன. அது அதிகப்படியான மேய்ச்சலுக்கும் வாழ்விட சீரழிவுக்கு வழிவகுக்கும். சுற்றுச்சூழலின் உணவுச் சங்கிலியின் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கவும், பூர்வீக தாவரங்களைப் பாதுகாக்கவும், நிலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், அதிகரிக்கும் கங்காருகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டு உள்ளது.
இவை பயிர் நிலங்களைச் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிய நஷ்டத்துக்கு ஆளாகும் அதே வேளையில் கங்காருகள் டோக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் பாராடியூபர்குலோசிஸ் (Toxoplasmosis and Paratuberculosis) போன்ற நோய்களின் காரணிகளாகவும் இருப்பதால் பண்ணைகளில் கால்நடைகளுக்கு இடையே நோய் பரவல் அதிகரிப்பதாகவும் புகார் கூறப்படுகின்றது. அதிகரிக்கும் கங்காருகள் மனித நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளிலும் கூட அலைந்து திரிவதால், அவை வாகனங்களோடு மோதி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன என்ற புகார்களும் அடிக்கடி பதியப்படுகின்றன.
கருத்தடை முறைகள் அவ்வளவாகப் பயனளிக்காத நிலையில், பராமரிப்பு செலவும் அதிகரித்துக்கொண்டே செல்லும் சமயத்தில் இந்தப் பிரச்னை அனைத்துக்கும் ஒற்றைத் தீர்வாக ஆஸ்திரேலியா அரசு கையிலெடுத்திருக்கும் ஒரே முடிவு, கங்காருகளைக் கொலை செய்வது.

எவ்வாறு இவை அழிக்கப்படுகின்றன?
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக என சட்டப்பூர்வமாகக் கொல்லக்கூடிய கங்காருகளுக்கான எண்ணிக்கையை அரசு வரையறை செய்துள்ளது. New South Wales, Queensland, Victoria, South Australia மற்றும் Western Australia ஆகிய ஐந்து மாநிலங்களில் 36 மில்லியனுக்கும் அதிகமான கங்காருகள் மற்றும் வாலாரூக்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்றும், இவ்வாண்டு இந்த ஐந்து மாநிலங்களிலும் சுமார் 5 மில்லியன் கங்காருகளைக் கொல்ல சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
அரசு அனுமதி பெற்ற வேட்டைக்காரர்களால், பெரும்பாலும் இரவில் கங்காருகளின் கண்களில் பிரகாசமான ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் அவற்றுக்குத் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தி பிறகு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகின்றன.
ஆஸ்திரேலியர்களில் ஒரு பகுதியினர் கங்காருகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, சூழலியல் சமநிலைக்கு மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாதது என்று நினைக்கிறார்கள். முக்கியமாக, உணவுப் பஞ்சம் காரணமாகச் சாப்பாடு இல்லாமல் பட்டினியால் அவை பல நாள் கஷ்டப்பட்டுத் துடி துடித்து இறப்பதைக் காட்டிலும் ஒரு புல்லட் தோட்டாவில் உயிரிழப்பது எவ்வளவோ மேல் என்று அவர்கள் நம்புகிறார்கள். மறுபுறம், விலங்கு ஆர்வலர்களோ, ஆஸ்திரேலியாவின் கங்காருகள் அவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காகவே கொல்லப்படுகின்றன என்று வாதிடுகின்றனர்.

இவர்களுக்கு விடையளிக்கும் வகையில், கங்காரு அழித்தல் மனிதாபிமானமாகவும், குறைந்த வலியுடனும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய, தலையில் மட்டுமே சுட வேண்டும், ஒரே குண்டில் மூளையைச் சிதறடித்துக் கொல்ல வென்றும் போன்ற கடுமையான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அமல்படுத்தியுள்ளோம் என்கிறது ஆஸ்திரேலியா அரசாங்கம். ‘பண்ணுவது கொலை, இதில் ஆயிரம் நியாயங்கள் வேறா’ என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. சட்டங்களும் விதிகளும் பெரும்பாலும் காகிதத்திலேயே புதைந்து போக, இவற்றைக் கொல்லும் நடவடிக்கையில் மட்டும் எவ்வித மனித நேயம் இருந்துவிடப் போகிறது? பறவைக் காய்ச்சல் பரவிய காலத்தில் கோழிக் குஞ்சுகள் கழுத்து நெறிக்கப்பட்டும், பாலிதீன் பைக்குள் போட்டு மூச்சு திணறடிக்கப்பட்டும் கொல்லப்பட்டன என்பது அனைவருக்குமே நினைவிருக்கும்.
கூட்டங் கூட்டமாக அதுவும் இரவு நேரத்தில் கங்காருகளைச் சுட்டுத் தள்ளும் போது அவற்றை “மனிதாபிமானத்துடன்” கொல்லப்படுவதை உறுதி செய்வது என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. இதில் மனதைப் பிழியும் துயரம் என்னவென்றால் ‘ஜோய்ஸ்’ எனப்படும் குட்டி கங்காருகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கொல்லப்படுகின்றன.

அரசாங்கத் திட்டங்களின் கீழ், உரிமம் பெற்ற வேட்டைக்காரர்கள் தாம் கொல்லும் ஒவ்வொரு கிலோ கிராம் கங்காருவிற்கும் அரசிடம் இருந்து ஒரு தொகையைக் கட்டணமாகப் பெறுகிறார்கள். கங்காரு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட தோல் போன்றவை சுமார் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை ஆண்டொன்றிற்கு 200 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஈட்டிக்கொடுக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள்.
சமீபகாலமாக அதிகம் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படும் வனவிலங்குகள் கொல்லப்படும் `Animal Culling’ உயிர்ச் சூழலுக்கு சாதகமா இல்லை பாதகமா?
ஒரு விலங்கு ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்விடத்தில் அதிகமாக இருந்தால் இயற்கையே அதனை அழித்துவிடும். ஒன்று அவை பட்டினியால் இறக்கும் அல்லது நோய்க்கிருமிகளால் இறக்கும். அப்படியும் இல்லாவிட்டால் அதன் எதிரிகளாலேயே கங்காருகள் வேட்டையாடப்படும். கூட்டம் அதிகமாவதால் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறுவதும் இயற்கைதான். ஆனால் மனிதனாக முன்வந்து அவற்றைக் கூட்டமாக ஒழித்துக்கட்டுவதில் சாதகமான விளைவுகள் இருப்பதுபோல பல பாதகமான விளைவுகளும் தோன்றத்தான் செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கை அதிகமாகும் போது அந்த இனம் தங்களுக்கு மட்டுமல்ல, மற்ற விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது. எனவே ‘Mass Animal Culling’ எனப்படும் இந்தச் செயல்முறை ஒன்றும் உலகத்துக்குப் புதிதல்ல. பல வருடங்களாக உலகின் பல நாடுகளிலும் அவ்வப்போது நிகழும் ஒன்றுதான். உதாரணத்துக்கு, 1967 மற்றும் 1994க்கு இடையில், தென்னாப்பிரிக்கா மொத்தம் 14,562 யானைகளைக் கொன்றது. அப்படிச் செய்யாமல் விட்டிருந்தால், 2020-ம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 80,000 ஆக அதிகரித்து, யானைகள் மட்டுமல்ல, அந்த யானைகளால் அதே சூழலில் வாழும் பிற விலங்குகளும் பெரிய பட்டினிச் சாவுக்குள் மூழ்கி மடிந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

அதே போல 2016-ம் ஆண்டின், வறட்சிக்குப் பிறகு க்ரூகர் தேசிய பூங்காவில் வாழ்ந்த நீர்யானைகள் அனைத்தும் பட்டினியால் இறக்க நேரிடும் என்பதால் அவற்றை அழிக்கும் முடிவையும் தென்னாப்பிரிக்கா அறிவித்தது.
Yellowstone தேசிய பூங்காவில் 1800கள் மற்றும் 1900களின் முற்பகுதியிலிருந்து அவ்வப்போது காட்டெருமைகள் கொல்லப்பட்டு வந்தன. கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் அளவுக்கு அதிகமாகப் பெருகியுள்ள பைசன் என அழைக்கப்படும் காட்டெருமைகளைச் சுட்டுக்கொல்லத் தீர்மானித்தது அமெரிக்க அரசு. 2 மில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி பெருகிக்கொண்டே சென்ற மான்கள் இங்கிலாந்தில் கொல்லப்பட்டன.
பன்றிக்காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் (H5N1) போன்ற கொடிய நோய்களின் தொற்றுக் காரணமாகக் கோழி மற்றும் பன்றிகள் மலேசியா, சீனா, டென்மார்க் போன்ற பல நாடுகளில் மில்லியன் கணக்காக அழிக்கப்பட்டன. நியூசிலாந்தில் முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஈமுக்கள் மிக வேகமாகப் பெருகி விவசாயிகளுக்கும் விளைநிலங்களுக்கும் ஆபத்தாக இருந்தன எனக் கூறி பல லட்சம் ஈமுக்கள் கொல்லப்பட்டன. இதுபோல ஏராளமான சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மரபியல் காரணம், ஆரோக்கியம், பாலினம், சூழலுக்கு அதன் தாக்கம் போன்ற காரணிகளின் அடிப்படையில், விலங்குகளைத் தேர்ந்தெடுத்துச் சூழலிலிருந்து நீக்கும் இந்தச் செயல்முறைக்கு ஆயிரம் சப்புக்கொட்டு காரணங்களை அடுக்கினாலும் அந்த செயல்முறை தவறாகப் போகும் பட்சத்தில் மறுபுறம் மிகப்பெரிய ஆபத்தும் காத்திருக்கிறது.

தென் அமெரிக்காவில், பயங்கரமான ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கு வேம்பயர் வௌவால்கள் காரணமாகின்றன எனக்கூறி அரசாங்கம் அவற்றைக் கொல்லத் தொடங்கியது. ஆயினும் வெவ்வேறு வௌவால்கள் இனங்களுக்கு இடையே துல்லியமான வித்தியாசம் பார்க்கத் தவறியதால் பயிரினங்களில் வாழும் பூச்சிகளை அழிக்கும் சாதாரண வௌவால்களையும் பெருமளவில் கொன்று குவித்தனர்.
இதேபோன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்தது. அதிகளவில் பெருகிய வெள்ளை சுறாக்களின் தாக்குதலில் பல மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனக்கூறி டிரம் லைன்களைப் பயன்படுத்தி வெள்ளை சுராக்களைக் கொல்ல முடிவெடுத்தது அரசு. ஆனால். துரதிர்ஷ்டவசமாக, கொல்லப்பட்ட 182 சுறாக்களில் ஒன்று கூட வெள்ளை சுறா இல்லை. அதே போல சீனாவில் பில்லியன் கணக்கில் கொல்லப்பட்ட சிட்டுக்குருவிகளால் சீர்குலைந்த சூழலியல் சமநிலை இன்றுவரை சரிசெய்ய முடியாத ஒன்றாகத் தொடர்கிறது.
பல உயிரினங்கள் மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று முற்றாகவே வழக்கொழிந்து போய்விட்டன. சமீபத்தில் உலகின் கடைசி ஆண் வெள்ளை நிற காண்டாமிருகமும் இறந்து அந்த இனமே மறைந்து போன சோகக் கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். பிண்டா ராட்சத ஆமை, ஸ்பிக்ஸ் மக்காவ், பைரேனியன் ஐபெக்ஸ், டோடோ பறவை என வாழ்ந்த தடமும் மறைந்து போன பல மிருகங்களை இன்று புகைப்படங்கள் மூலம் மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதுபோல இனி வரும் காலங்களில் ஆஸ்திரேலியாவின் குழந்தைகளுக்கே கூட கங்காரு என்ற ஒரு விலங்கைப் புகைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய காலமும் வரலாம்.
விலங்குகளைக் கொல்லும் இந்தச் செயல்முறையில் அறம் பின்பற்றப்படுகிறதா என்பதே இங்குப் பிரதானமாக விஞ்சி நிற்கும் கேள்வி. மனிதனோ விலங்கோ, எந்த ஒரு உயிரையும் பறித்தல் என்பது அறத்தை மீறிய செயல் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஓர் உயிரினம் பல்கிப் பெருகும் போது, மனித நடவடிக்கை மூலம் அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் இயற்கை அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் என்பதுதான் நியதி.

ஆனாலும் இந்தப் பூமி எல்லோருக்குமானது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனித இனம் தோன்றும் முன்னரே விலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த நிலம் இது. எப்போது மனிதன் தோன்றி, நாகரீகம் வளர்ந்து, தனக்குச் சொந்தமில்லாத விலங்குகளின் இடத்தையும் சேர்த்து அபகரித்தானோ அன்று தொடங்கிய நாசம் இன்றுவரை தொடர்கிறது. அவை வாழ்ந்த இயற்கை பூமியை கான்கிரீட் காடுகளாக மாற்றிவிட்டு இன்று அவற்றினால் நமக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி அழிக்க முயல்வது எந்தக்கோணத்தில் சிந்தித்தாலும் நிச்சயம் அறமாகாது.
Torturing any life is a crime! No one has right to make other creature suffer.