`சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்படும் மறைந்த லீ குவான் யூ- க்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த டெல்டா மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்குத் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னமா எனப் பலரும் ஆச்சர்யமடைந்தனர். ஏன் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும் அதிகரித்தது. அதற்கான விடையே இந்தக் கட்டுரை.

லீ குவான் யூ

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட சிங்கப்பூர்ப் பயணத்தின்போது அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ-க்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் மற்றும் நூலகம் அமைக்கப்படும்” என்றார். சிங்கப்பூர் மக்கள் மட்டுமன்றி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களிடையே இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

குறிப்பாக மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் இதை மனதாரப் பாராட்டியதுடன் சிலாகித்துப் பேசிவருகின்றனர். லீ குவான் யூ-க்கு சிலை அமைப்பதற்கு மன்னார்குடிதான் பொறுத்தமான இடம் எனப் பெருமிதம் காட்டுகின்றனர். பஞ்சம், பசி என வாழ்வில் பின்தங்கியிருந்த இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சி அடைவதற்கு காரணம் சிங்கப்பூர். குடிசை வீடுகள் நிறைந்த இப்பகுதி இன்றைக்கு மாடி வீடு, தொழில், விவசாயம் எனப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது அதற்கு வித்திட்டவர் லீ குவான் யூ.

மன்னார்குடி

1960-ல் பஞ்சம் நிலவிவந்த நிலையில் சிங்கப்பூர் அரசு தமிழகத்திற்கு இலவசக் கப்பல் போக்குவரத்தை அறிமுகம் செய்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான லெட்சுமாங்குடி, பொதக்குடி, கூத்தாநல்லூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, மேலநத்தம், கீழநத்தம், ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, திருப்பாலக்குடி, மகாதேவப்பட்டினம், நெடுவாக்கோட்டை, தளிக்கோட்டை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வாழ்வில் முன்னேறினர்.

அதற்கு நன்றிக்கடனாக சிங்கப்பூர் மக்களுக்கு இணையாக லீ குவான் யூவை இன்றைக்கும் கொண்டாட வருகின்றனர் மன்னார்குடி மக்கள். கடந்த 2015-ல் அவர் மறைந்த போது மன்னார்குடியே சோகத்தில் மூழ்கியது. இதுவே அம்மக்கள் அவர் மீது வைத்திருக்கும் உணர்வைக் காட்டியது. ’எங்கள் குடிசை வீடுகளைக் கோபுரமாக்கிய தெய்வமே!’ எனக் கண்ணீர் அஞ்சலிப் பதாகைகள் வைத்து நன்றியைக் காணிக்கையாக்கினர்.

ஜெயப்பிரகாஷ் குடும்பத்துடன்

தங்கள் குழந்தைக்கு லீ குவான் யூ எனப் பெயரிட்டு அவர் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினர். மன்னார்குடிக்கு வந்து, சின்னச் சிங்கப்பூர் எங்கே இருக்கிறது எனக் கேட்டால் சின்னக் குழந்தைகூட கூத்தாநல்லூரைச் சொல்லி வழி காட்டும். வெளிநாட்டில் அறிமுகமாகும் எலக்ட்ரானிக் பொருள்கள் அடுத்த நாளே கிடைக்கக் கூடிய சந்தையாக கூத்தாநல்லூர் திகழ்ந்ததால் இதனைக் குட்டிச் சிங்கப்பூர் என அழைத்தனர்.

இதே போல் மன்னார்குடிப் பகுதியைச் சுற்றியுள்ள பல சிறிய கிராமங்கள்கூட குட்டிச் சிங்கப்பூராக மாறியதற்கு விதையாக இருந்தவர் லீ குவான் யூ. நம்ம ஊருக்கு அருகில் உள்ள டவுனுக்குச் சென்றுவிட்டு வருவதுபோல் அப்போதே இப்பகுதியினர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார்கள். சிங்கப்பூருக்கும், தமிழகத்திற்குமான நல்லுறவு தொடர்ந்ததால் தமிழ்நாடு என்று நினைக்கும் அளவிற்குத் தமிழ் மக்கள் சிங்கப்பூரில் எங்கும் நிறைந்திருந்தார்கள்.

கோமதி மனோகரன்

குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இன்றைக்கு அந்நாட்டின் குடியுரிமை பெற்று சிங்கப்பூர்வாசிகளாகவே மாறிவிட்டனர். தத்தெடுத்த தாயாக மாறி தமிழர்களை அரவணைத்துக் காத்த லீ குவான் யூ- தான் அதற்கு முழு முதற்காரணம் எனப் பழைய நினைவுகளை அசைபோட்டனர். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவரான மன்னார்குடி வடக்குவீதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர், எங்களின் உறவினர்கள் பலரின் வாழ்வு வளமானதற்குக் காரணமே பெரியவர் லீ குவான் யூ தான். அவர் மறைந்த அன்றைக்கு எனக்கு மகன் பிறந்தான். மகன் பிறந்த மகிழ்ச்சியை விட அவர் மறைந்த சோகம் எனக்குள் கனத்தைக் கூட்டியது.

என் நினைவில் மட்டுமல்ல என் வாழ்விலும் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என நினைத்த நான் என் மகனுக்கு லீ குவான் யூ எனப் பெயர் வைத்தேன். என் மனைவி உள்ளிட்ட பலரும் எந்த மறுப்பும் சொல்லாமல் கோரஸாக அந்தப் பெயரை உச்சரித்தனர். என்னை மட்டுமல்ல எங்கள் பகுதிக்கே ஒளி பாய்ச்சிய கதாநயாகனான அவருக்கு இதைவிட நான் எப்படி நன்றி காட்ட முடியும். அதனாலேயே அவர் பெயரை என் மகனுக்குச் சூட்டி அழகு பார்த்தேன். அப்படிப்பட்டவருக்கு தமிழக அரசு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்றார்.

மு.க. ஸ்டாலின் – லீ குவான் யூ

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய தேகா எனும் பகுதியில் வசிக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த கோமதி மனோகரன் என்பவர், ஒவ்வொருவருக்கும் குலதெய்வமாக வெவ்வேறு சாமிகள் இருக்கும். ஆனால் சிங்கப்பூரில் வாழும் எங்களைப் போன்ற தமிழர்கள், சிங்கப்பூர் சென்று தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்ட ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தமிழர்கள் அனைவருக்கும் குலதெய்வம் என்றால் அது லீ குவான் யூ தான்.

புதிதாக மன்னார்குடியில் அமையவிருக்கும் பேருந்து நிலையத்தில் அவருக்கான நினைவுச் சின்னம் அமைத்தால் பல மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பயணிகள் அனைவருக்கும் லீ குவான் யூ வைப் பார்த்துப் பரவசமடைய வசதியாக இருக்கும். எனவே தமிழக அரசு புதிய பேருந்து நிலையத்தில் அவருக்கான நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதை விகடன் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு முன் வைக்கிறேன் என்றார்.

தங்கபாபு

இதுகுறித்து மன்னார்குடியில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான தங்கபாபுவிடம் பேசினோம், ”மன்னார்குடி எம்.எல்.ஏவாகத் தொடர்ந்து மூன்று முறை இருந்துவரும் டி.ஆர்.பி.ராஜா, தற்போது தொழில் துறை அமைச்சராகி யிருக்கிறார். அவரின் கனவுத் திட்டமான மின்னும் மன்னை திட்டம் முழு வீச்சோடு நிறைவேறிவருகின்ற வேளையில் மன்னார்குடியில் லீ குவான் யூ- க்கு நினைவுச் சின்னம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கனவு டிஜிட்டல் நூலகம் அமையவிருப்பது முத்தாய்ப்பானது.

தொழில்துறை அமைச்சராகி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கொண்ட சிங்கப்பூர்ப் பயணத்தில் டி.ஆர்.பி.ராஜா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். லீ குவான் யூ மறைந்த போது மன்னார்குடியில் சிலை அமைக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தவர் டி.ஆர்.பி.ராஜா. தமிழகத்தில் பல தலைவர்களுக்குச் சிலை, நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன.

மன்னார்குடி கோயில்

சாதி, மத, நிற பேதங்கள் கடந்து தமிழ் எனும் ஒற்றைப் புள்ளியில் தமிழையும், தமிழர்களையும் ஒன்றிணைத்து, தமிழர்களின் உழைப்பை, திறமையைக் கொண்டாடி, தமிழுக்கு ஆட்சி மொழிக்கான அங்கீகாரத்தையும் தந்து தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றி உயிரில் கலந்திருக்கும் லீ குவான் யூ மன்னார்குடியில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்பட வேண்டிய மாமனிதன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.