மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் தந்த கொடைதான் தாமிரபரணி ஆறு. இந்த மலை உச்சியில் உள்ள பூங்குளம் என்ற இடத்தில் தாமிரபரணி ஆறு தோன்றி தன் பயணத்தைத் துவங்குகிறது. அங்கிருந்து இந்த ஆறு கடந்து வரும் பாதை அடர்ந்த வனப்பகுதி. எண்ணற்ற நற்பலன் தரும்  தாவரங்களைத் தழுவியவாறு காடு மலை என ஆங்காங்கே அருவியாய் விழுந்து, எழுந்து மலையின் அடிவாரம் நோக்கி ஓடி வருகிறது. பின்னர் பல பிரிவுகளாக மணிமுத்தாறு, பாபநாசம், கடனாநதி, குற்றாலம் எனப் பல இடங்களில் அருவியாய் இறங்கி, ஆறாக பாய்கிறது.  பின்னர் இந்த நன்னீர் முக்கூடலில் ஒன்று சேர்ந்து, அதிக பலத்துடன் தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பயணத்து புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது.

பொதிகை மலை

தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம்  வரை மக்களின் தாகம் தீர்க்கும் வற்றாத ஜீவ நதியாக விளங்குகிறது. இந்த ஆறு மட்டும் இல்லை என்றால் இந்த மக்களின் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது.  

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் ஆட்டோ டிரைவர் லூர்துராஜ்

ஆனால் இந்த ஆறுக்கு கைமாறாக மனிதர்கள் செய்யவது என்ன தெரியுமா? ஆற்றில்கழிவு நீர் கலப்பு, குப்பைகளைக் கொட்டுவது, குளித்து விட்டு ஆடைகளை அப்படியே கழட்டி ஆற்றில் வீசுவது, சரக்கடித்து விட்டு பாட்டில்களை ஆற்றில் வீசுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் படித்த மக்கள்தான் பெரும்பாலும் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பதுதான்.

இவர்களுக்கு மத்தியில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லூர்துராஜ் என்பவர், 2016 -ம் ஆண்டு முதல் முதல் வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் தேங்கிக்கிடக்கும் கழிவுபொருட்களை தனது நண்பர்கள் உதவியுடன் அகற்றி தூய்மைபடுத்தி வருகிறார். என்பது ஆறுதலைத் தரும் செய்தியாக உள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் 200 அடி தூரம் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தியுள்ளார். குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள், பழைய துணிகள், பழைய செருப்புகள் என சுமார் 2 டன் கழிவு பொருட்களை அகற்றியுள்ளார். அப்போது அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் ஆட்டோ டிரைவர் லூர்துராஜ்

அந்த வீடியோவில், “ஐந்தறிவு உயிரினங்கள் கூட தாகத்துக்கு  நீரைத்தான் பருகுகின்றன,  கழிவுநீரை அல்ல.

நீரின் தேவை தெரிந்தவர்கள், அதன் பற்றாக்குறையை  கேள்விப்பட்டவர்கள், பார்ப்பவர்கள், அனுபவித்தவர்கள் அனைவரும் கண்ணெதிரே பார்க்கும் தவறை எதிர்க்கவோ,  தடுக்கவோ, மாற்றவோ குரல் கொடுப்பதில்லை. தயவுசெய்து குப்பையை, வேண்டாத பொருட்களை குப்பைத் தொட்டியில் போடுங்கள். தென்மாவட்ட மக்களின் குடிநீர் தொட்டியில் போடாதீர்கள்.

இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் நல்ல நீரை கெட்ட நீராக்கும் இந்த செயலைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆட்டோ டிரைவர் லூர்துராஜ்

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் லூர்துராஜிடம் பேசினோம்.

“ நான்கு மாவட்ட மக்கள் குடிக்கும் நீரை கொடுப்பது இந்த தாமிரபரணி ஆறுதான். விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இந்த ஆறுதான். இதில் அழுக்குத்துணி, குப்பைகள், கழிவு பொருள்கள், பிளாஸ்டிக் பைகளில் பூக்களை சுற்றி போடுவது, திதி கொடுத்து விட்டு துணியை அப்படியே ஆற்றில் விடுவது என மக்கள் செய்யும் செயல்களால் தாமிரபரணி ஆறு மிகவும் மாசுபடுகிறது. நம்மால் முடிந்ததை செய்து ஆற்றை காக்கவேண்டும் என்று நினைத்து செயல்படத் தொடங்கினோம். நண்பர்கள் உடனிருந்து செயல்பட்டனர். 2016 முதல் இந்த பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உடன் மரக்கன்று நடும் நிகழ்வு

நம் தாமிரபரணி அமைப்பின் மறைந்த சக்திநாதன் (அண்ணா பல்கலை கழகத்தின் பேராசிரியர்) அவர்கள் எங்கள் பணிகளை பாராட்டினார். அவரது ஊக்கத்தால் தொடர்ந்து பல பணிகளை செய்தோம். மாவட்ட ஆட்சியர் எங்கள் பணிகளை பாராட்டி கௌரவித்தார். நம் தாமிரபரணி அமைப்பிலிருந்து பாபநாசம் படித்துறையில் டன் கணக்கில் துணிகளை எடுத்து சுத்தம் செய்தார்கள். இவர்களுடன் எங்கள் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

லூர்துராஜ் குறித்து வீரவநல்லூரை சேர்ந்த வியாபாரி ரெங்கராஜன் கூறுகையில், “சுய நலம், சுய விளம்பரம் அதிகரித்துள்ள இந்த சமுதாயத்தில் இவரைப் போல மனிதர்களும் இருக்கிறார்கள். மரம் நட்டு பராமரிப்பது, ஆறு சுத்தம் செய்தல், ஆதரவற்ற முதியோர் யாராக இருந்தாலும் தேடித் தேடி அவர்களுக்கு உதவி செய்வது, உதவித் தொகை பெற்று கொடுக்க முயற்சிப்பது, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு லூர்துராஜ் அண்ணன் செய்த பணிகள் அதிகம். கல்லிடைகுறிச்சி பூங்காவில் அவர் நட்டு வளர்த்த மரக்கன்றுகள் ஏராளம். பல எதிர்ப்புகள், அச்சுறுத்தல்களை தாண்டி ஆற்றில் கழிவுகளை கலக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உடன் கல்லிடை குறிச்சியில் பூங்கா திறந்து, மரக்கன்று நடும் நிகழ்வு

லூர்து அண்ணன் தன்னை சுற்றியுள்ள நண்பர்கள் யாராக இருந்தாலும் தன் குடும்ப உறுப்பினர் போல பாவித்து உதவிகள் செய்வார். ஆனால் அவருக்கு எந்த விதமான நிரந்தர வருமானமும் கிடையாது. தன் வீட்டில் நடமாட முடியாத வயோதிக நிலையில் உள்ள தாய், மற்றும் கணவனால் கை விடப்பட்ட உடல் நிலை சரியில்லாத தங்கை, இவர்களையும் அன்புடனும், மரியாதையுடனும், கனிவுடன் பராமரித்து கொண்டு சமூக பணிகளையும் தன்னலம் கருதாது செய்து வரும் இவர், தினமும் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் தாமிரபரணியை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருடன் நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை. இவரை பார்த்து பாபநாசம் மற்றும் கோபால சமுத்திரம் ஆகிய இடங்களிலும் ஆற்றை தூய்மை செய்யும் பணிகளை தன்னார்வலர்கள் செய்து வருகின்றார்கள்” என்றார்.

மனோன்மணி சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில்,

“திதி கொடுத்தல் போன்ற பழக்கவழக்கங்களால் பல ஆயிரம் கிலோ எடை உள்ள செயற்கை இழை (synthetic fibre: nylon, polyester fabrics) பழைய உடைகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. பருத்தி ஆடை என்றால் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கை இழை உடைகள் ஏறக்குறைய பிளாஸ்டிகை ஒத்த வேதிப் பொருட்கள். இவை அவ்வளவு எளிதில் மட்கிப்போகாது.

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் , பேராசிரியர் சக்தி நாதன் மற்றும் நண்பர்களுடன்

பல நூறு ஆண்டுகள் ஆற்று மண்ணில் புதைந்து கிடந்து  ஆற்று நீரை  மாசுபடுத்தியபடி இருக்கும். இதனால் ஆற்று நீர் புழக்கத்திற்குப் பயன்படாதவையாக மாறிவருகிறது. மீறி இந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிறைய உடல் நலக்குறைவும் பல தொந்தரவுகளும் வருகிறது. விவசாய மண்வளம் பாதிக்கிறது.  மக்கள் நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஆற்றில் துணிகளை விடுவதை விட கரையில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட்டால் மீண்டும் பயன்படுத்தும் விதமாக இருக்கும். சுத்தமான  தெளிந்த நீரும், வளமான மண்ணும், அடர்ந்த வனப்பகுதியுமே வாழ்வின் அடிப்படை என்பதனை,

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்ற குறளில் விளக்குகிறார் திருவள்ளுவர்.

வளமான மண்ணிற்கும் தண்ணீரின் தரத்திற்கும் தொடர்புண்டு. மண் மற்றும் தண்ணீரின் தரத்திற்கும்  நம் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. ஆற்றை அசுத்தப்படுத்துவது பாவம் என்பதை மக்களுக்குச் சொல்லி புரிய வைக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.