ஒரே நாளில் போட்டி முடிவுற்றுக் கோப்பை கிடைத்திருந்தால் கூட சிஎஸ்கே ரசிகர்களை இது இத்தனை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றிருக்காது. நிகழவே முடியாதென்ற நிலையிலிருந்து நினைத்த பிடித்தமான விஷயம் நிறைவேறுவது எல்லைகளற்ற மகிழ்ச்சியை அளிக்கும். சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ரசிகர்களின் தற்போதைய நிலையும் இதுதான்.

`இன்று போய் நாளை வா’ என வழியனுப்பிய மழையால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ரிசர்வ் நாளுக்கு ரீடேக் வாங்கியது இறுதிப்போட்டி.

கில்லின் விக்கெட்தான் ஐபிஎல் கோப்பை ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் குகையைத் திறப்பதற்கான மந்திரம் என்பது சிஎஸ்கே அறிந்ததே. ஷார்ட் பவுன்சர் பந்துகளை அநாயசமாக மிட்விக்கெட்டினை நோக்கி புல் செய்து பந்துகளை பவுண்டரிகளாக உருமாற்றுவதிலும், ஃபுல் லென்த்தில் லெக்சைடில் விழும் பந்தில் கிளான்ஸ் ஆடுவதிலும் கில் கில்லாடிதான். எனினும் இத்தொடரில் சமயத்தில் ஷார்ட் பால்களை புல்ஷாட் ஆக்க முற்படுகையில் டைமிங் செய்வதில் தவறிழைத்து விக்கெட்டையும் பறிகொடுத்திருந்தார். அதேபோல் பேக் ஆஃப் லென்த்தில் மிடில் ஸ்டம்பை நோக்கிப்பாயும் பந்துகளும் அவரை சோதித்தன.

IPL 2023 Final

இதனை மனதில் வைத்து அதே லைனில் தொடர்ந்து பந்துகளை தோனி வீசவைத்தார். ஒருகட்டத்தில் தீபக் சஹாரினை பேக்வேர்ட் ஸ்கொயரில் நிறுத்தி துஷாரை ஃபுல்லர் லெந்தில் தோனி வீசவைக்க நினைத்ததைப்போல் அப்பந்தை சஹாரினை நோக்கி கில் அனுப்ப, விடவே வாய்ப்பில்லாத கேட்ச்சை சஹார் கைவிட்டு பெரும் அதிர்ச்சியளித்தார். அருமையாக செட் செய்தும் தூக்கமுடியாமல் போன கில்லின் விக்கெட் சிஎஸ்கேவிற்குக் கிடைத்திருக்க வேண்டிய ப்ரேக்-த்ரூவினைத் தள்ளிப்போட்டது. அப்புள்ளியில் உடைந்த சஹாரின் தன்னம்பிக்கை மீளவேயில்லை. சாஹா தந்த Caught & Bowled கேட்சினை விட்டார், எஞ்சிய பவர்பிளே ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். கில் – சாஹா கூட்டணியும் இருபுறமும் முனை கூர்தீட்டப்பட்ட வாளாகி சஹார் – துஷாரின் பந்துகளை வீடியோகேம் ஆடுவது போல விளாசினர்.

அதிவேகத்துக்கும் சுழலுக்கும் சற்றே மடங்குவாரென்றாலும் மீடியம் பேஸ் சாஹாவுக்குச் சாதகமான ஒன்று. ஃபார்மில் உள்ள கில்லினைப் பற்றியோ சொல்ல வேண்டாம். ஆளுக்கு ஒருவராகப் புதுப்பந்து பௌலர்களை அவர்கள் தாக்கி ஆட பவர்பிளே முடிவிலேயே 62 ரன்களை குஜராத் எட்டிவிட்டது. ரன்அவுட் வாய்ப்பினை ஜடேஜாவே தவற விடுவதெல்லாம் அதிர்ஷ்டம் குஜராத்தின் பக்கம் என்பதைத் தவிர வேறென்ன சொல்லிவிட முடியும்? ஆனால் கேட்ச் டிராப்களாலும் மிஸ் ஃபீல்டுகளாலும் உண்டான வேகத்தடைகளை தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் தகர்த்தெறிந்தது. கழுகுப் பார்வையுடன் கில்லின் ஸ்டம்பை அவர் காலி செய்ததெல்லாம் டாப் கிளாஸ் கீப்பிங். லென்த்தில் வந்த ஜடேஜாவின் பந்தை ஆட கில் முன்னே செல்ல ஸ்டம்புக்கு மிக அருகே கைகளைக் கொண்டு வந்து பந்தைக் கைப்பற்றி காலதாமதம் ஏற்படாமல் அனிச்சையாகச் செயல்பட்ட அவரது சமயோசிதமும் அதிவேகமும் வெறும் 0.1 விநாடிகளுக்குள் எல்லாவற்றையும் நிகழ்த்தி முடித்தது என்பதுதான் பலராலும் நம்பமுடியாத உண்மை.

IPL 2023 Final

கில்லின் விக்கெட்டோடு குஜராத்தின் ரன்ரேட் வேகம் வெகுவாகவே குறையும் என்றோ, ஒன்டவுனில் இறக்கப்பட்ட சாய் சுதர்சனும் மிக மெதுவாகத் தனது இன்னிங்க்ஸினைக் கட்டமைப்பவர்தான் என்றோ ஆசுவாசப்படுத்த சிஎஸ்கேவால் முடியவில்லை, தொடர்ந்து ரன்கள் வந்து கொண்டிருந்தன. 12-வது ஓவரில் வேகப்பந்துவீச்சு பதிரனாவோடு திரும்பிய கட்டத்தில் இடையில் சற்றுநேரம் சட்டைப்பைக்குள் ஒளித்து வைத்திருந்த மொத்த மொமெண்டத்தை வெளியில் எடுத்தது குஜராத். சற்றே அட்டாக் செய்யத் தொடங்கியவுடன் அரைசதமடித்திருந்த சாஹா ஆட்டமிழந்தார். ஆயினும் மறுபுறம் மத்தளத்தின் இருபுறத்திலும் ஒற்றை ஆளாகவே அடித்து காதினை அதிரச்செய்யும் பேரொலியை சாய் சுதர்சன் எழுப்பத்தொடங்கினார்.

மும்பைக்கு எதிரான குவாலிஃபயரில் 43 ரன்களை 138.71 ஸ்ட்ரைக்ரேட்டோடு அடித்திருந்த அவர் 19-வது ஓவரில் ரிட்டயர்ட் அவுட் ஆகி ரஷித்கான் வந்து அடித்து ஆட வழிவிட்டார். ஆனால் இப்போட்டியிலோ செட்டில் ஆனபிறகு நில அதிர்வினை உண்டாக்கும் புள்ளியாக அவரே உருவெடுத்தார்‌. 21 பந்துகளில்கூட 30 ரன்களை மட்டுமே எடுத்து சாதாரணமாகவே ஆடிவந்தவர், சாஹாவின் விக்கெட்டுக்குப் பிறகு அதிவேகமெடுத்தார். தீக்ஷனா ஒவரில் இரண்டு சிக்ஸர்களுடன் அரைசதத்தை நிறைவு செய்தவர், அடுத்தடுத்து அதிரடியில் இறங்கினார். தேஷ்பாண்டே 17-வது ஓவரை வீசவர, அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடிக்க மேட்ச் அப்படியே சிஎஸ்கேவிடம் இருந்து குஜராத் பக்கம் நகர ஆரம்பித்தது. மறுபடியும் 19-வது ஓவரை வீச தேஷ்பாண்டே வர அந்த ஓவரில் 18-ரன்கள் எடுக்க குஜராத் 200 ரன்களை எட்டிப்பிடித்தது.

IPL 2023 Final

33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த சாய் அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் அடிப்பாரென எதிர்பார்க்காத சிஎஸ்கே தள்ளாடிப் போய்விட்டது. பதிரனாவின் இறுதி ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. சதத்தை நெருங்கி 96 ரன்களை நெருங்கி வந்தவர், பதிரனா ஓவரில் அடுத்த பந்தை அடிக்க முயன்று எல்பிடபிள்யூ ஆகி இறுதிப்போட்டியில் சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைத் தவறவிட்டார்.

IPL 2023 Final

கடைசி 5 ஓவர்களில் 71 ரன்களை அள்ளித்தந்து எட்டாவது வள்ளலாக இணைந்திருந்தது சிஎஸ்கே பௌலிங் யூனிட். இம்பேக்ட் பிளேயராக வெளிவந்து தனது அணியையே அன்று பதம் பார்த்த அதே துஷாரின் காஸ்ட்லி ஓவர்களும், இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாதவாறான பதிரனாவின் 11 எனும் எக்கானமியும், தீக்ஷனாவின் தொடர் மோசமான ஃபீல்டிங்கும் என எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குஜராத்தை ஒரு மாபெரும் ஸ்கோரினை எட்டவைத்தன. குறிப்பாக சாண்டனர் அணியில் இருக்கையில் அவரை தொடர்ந்து பெஞ்சில் உட்காரவைத்துவிட்டு தீக்ஷனாவை அணியில் எடுத்தது பெரும் பாதகமாகவே முடிந்தது. 215 ரன்கள் சேஸிங் என்பது இறுதிப்போட்டி எனும் அழுத்தத்தில் தோய்த்தெடுக்கப்படுகையில் இன்னமும் கடினமே.

215 ரன்களை 20 ஓவர்களில் எட்ட வேண்டுமெனில் 10.75 ரன்ரேட்டில் ரன்கள் வரவேண்டும். ஓவர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைக்கப்பட்டு 171 ரன்கள் என இலக்கு மாறியதால் அது 11.4 ஆக அதிகரித்திருந்தது. இருப்பினும் கைவசம் உள்ள விக்கெட்டுகள் கடிவாளமின்றி ஓடுவதற்கான உரிமத்தை சிஎஸ்கேவிற்கு அளித்தன. அதுவும் 4 ஓவர்கள்தான் பவர்பிளேக்கள் என்பதால் ஹிட்டிங் மோடிலேயேதான் ஓப்பனர்கள் ஆரம்பித்தனர். ஷமி மற்றும் பாண்டியாவின் ஓவர்கள் சூறையாடப்பட்டன. ஸ்பின்னைக் கொண்டு இடர்தர, பேரிடர் மீட்பு வீரராக ரஷித் கான் நான்காவது ஓவரை வீசவர 17 ரன்களோடு அவரும் பரிதவிக்கவே வேண்டியிருந்தது.

IPL 2023 Final

இலக்கினை நோக்கி மட்டுமல்ல ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் அடித்திருக்க வேண்டிய டக்வொர்த் லூயிஸ் முறைப்படியிலான ஸ்கோரிலும் சிஎஸ்கேவின் கவனமிருந்தது. அதைவிட அதிகமாகவே மொத்த ஸ்கோர் இருப்பதை உறுதிசெய்து கொண்டே இருந்தனர். இருப்பினும் குஜராத் சராசரி அணியாகச் சரணடையவில்லை, சாம்பியன் அணியாக கம்பேக் கொடுத்தது. நூர் அஹ்மத்தின் ஒரே ஓவர் அவர்களை ஆட்டத்தில் திரும்பக் கொண்டு வந்தது. அவரது Wrong’un கெய்க்வாட்டினையும், அவரைவிட அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் ஆடிக் கொண்டிருந்த கான்வேயினையும் அடுத்தடுத்து வெளியேற்றியது. இருதலைப் பாம்பினால் கொத்தப்பட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்த குஜராத்தின் கையில் சிக்கிய ஏணி அந்த ‘ஒரு ஓவர் – இரு விக்கெட்’ திரைக்கதை.

IPL 2023 Final

“ஸ்பின் உனக்கு, வேகப்பந்து வீச்சு எனக்கு” என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு தொடர் முழுவதும் பயணித்த ரஹானே – சிவம் துபே 34 ரன்களை 3 ஓவர்களில் கொண்டு வந்துவிட்டனர். ரஹானேவின் கேமியோ முடிவுக்கு வந்தாலும் சிவம் துபேயின் தாண்டவத்திற்குத் தடையிட முடியவில்லை. ரஷித்கானின் ஸ்பெல்லின் கடைசி இரு பந்துகளில் பேக் டு பேக் சிக்ஸரடித்து காற்றினைத் தங்களது பக்கம் திருப்பிவிட்டார். இருப்பினும் மோஹித் வீசிய போட்டியின் 13-வது ஓவர்தான் நவரசத்தையும் காற்றில் ஏற்றி அஞ்சறைப் பெட்டியிலிருக்கும் அத்தனை மசாலாக்களையும் காட்டியது. அந்த ஓவரில்தான் பெண்டுலம் போல இருபுறமும் ஆட்டத்தைப் பேட்டும் பந்தும் உருட்டி விளையாடின.

மோஹித் ஷர்மாவினை அட்டாக் செய்து முதல் மூன்று பந்துகளில் 16 ரன்களைக் கொண்டுவந்து சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அம்பதி ராயுடு. அவரது கரியரின் கடைசி ஆட்டத்தில் அவர் வாழ்நாள் மொத்தத்திற்கும் நினைவுகூரும் வகையிலான ஓர் உணர்ச்சிபூர்வமான கேமியோவினை ஆடினார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் மொத்த ஸ்டேடியத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார் மோஹித். அம்பதி ராயுடு மட்டுமல்ல தோனியின் கோல்டன் விக்கெட்டும் அவரால் வீழ்த்தப்பட்டு சிஎஸ்கேயின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. தோனி ஆட்டமிழந்தது வலியையும் கோப்பை கைநழுவிய பயத்தையும் ரசிகர்களை ஒருங்கே அனுபவிக்க வைத்தது.

IPL 2023 Final

இறுதி ஓவரும் மோஹித்தான் வீசப் போகிறார், அதிலும் 13 ரன்கள் வரவேண்டுமென்ற போதே பதற்றம் சிஎஸ்கேவின் பக்கமே படிந்திருந்தது. துல்லியமான யார்க்கர்களால் போர் தொடுத்து மூன்று ரன்களை மட்டுமே மோஹித் முதல் நான்கு பந்துகளில் கொடுத்திருந்தார். இந்த சீசனின் சிறந்த கம்பேக் வீரர் அவர்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இரண்டே பந்துகள், பத்து ரன்கள் எனப் பதற்றமும் பிரார்த்தனைகளும் மைதானத்தின் மொத்த வானிலையும் மாற்ற, ஐந்தாவது பந்தும் யார்க்கராக வர அதனை லாங் ஆஃபில் அதி அற்புதமான சிக்ஸராக்கினார் ஜடேஜா. இறுதிப்பந்தில் நான்கு ரன்கள் போதும், ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோப்பைக்கு எனும்போது லோ ஃபுல் டாஸினை ஷார்ட் ஃபைனில் பவுண்டரியாக்கி வெற்றியையும் ஐந்தாவது கோப்பையையும் சிஎஸ்கேவின் பக்கம் சேர்த்தார் ஜடேஜா . தொடரின் இடையில் சின்ன சின்ன விமர்சனங்கள் ஜடேஜாவின் பேட்டிங் பற்றி எழுந்தாலும் அத்தனையையும் இந்த ஒரு இன்னிங்ஸ் உடைத்தெறிந்து அவரை ஹீரோவாக்கி உள்ளது. தோனியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளும் ஜடேஜாவை அவர் தூக்கிக் கொண்டாடியதும் வரலாற்றில் உறைந்துவிடப் போகும் தருணங்கள்.

ஒரு வீரரால் வென்றது என்று இல்லாது மொத்த பேட்டிங் யூனிட்டும் நின்று இந்த வெற்றியைச் சாத்தியமாக்கி உள்ளது. சென்ற இடமெல்லாம் மஞ்சள் கம்பளம் விரித்து ரசிகர்கள் தந்த அன்புக்கு தோனியும் அவரது படையும் கோப்பையைப் பரிசாகத் திரும்பத் தந்துள்ளனர். குறைகளை நிறைகளாக்கும் தோனியின் மந்திரம் தொடர் முழுவதும் அவர்களை மீண்டுவரச் செய்து பெருமைக்குரிய நொடிகளுக்குள்ளும் பயணிக்க வைத்திருக்கிறது.

IPL 2023 Final

போன முறை வெளியேறும் போது, அடுத்தாண்டு பிளேஆஃபில் ஆடுவோம் என்று கொடுத்த வாக்குறுதியை மட்டுமல்ல கோப்பையையும் வென்று ரசிகர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியுள்ளனர் தோனியும் அவரது படையும்!

A promise was once made, that promise will be kept!

இன்னுமொரு வாக்குறுதியும் தந்திருக்கிறார் தோனி. அது ரசிகர்களுக்காக இன்னுமொரு சீசன் ஆடத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவது! நிச்சயம் அதையும் செய்வார் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.