சென்னை அணி சன்ரைசர்ஸூக்கு எதிராக ஆடிய போட்டியை விட போட்டிக்குப் பிறகான தோனியின் பேச்சு பயங்கர சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக,

“என்னுடைய கிரிக்கெட் கரியரின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். இனி ஆடும் நாள்களை முழுமையாக அனுபவித்து மகிழ்வாக ஆடுவதுதான் முக்கியம்!” எனப் பேசியிருந்தார். தோனியின் கடைசி ஐ.பி.எல் சீசனாக இந்த சீசன்தான் இருக்குமென அனுமானிக்கப்படும் நிலையில் தோனியின் இந்தப் பேச்சு அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

Dhoni

இந்நிலையில், இதற்கு முன்னர் ஓய்வு முடிவுகள் பற்றிய கேள்வி எழுந்த சமயங்களிலும் தோனியே ஓய்வு முடிவை அறிவித்த சமயங்களிலும் அவர் எப்படி ரியாக்ட் செய்திருக்கிறார் என்பதையெல்லாம் பற்றி குட்டியாக ஒரு ரீவைண்ட் ஓட்டிப் பார்க்கலாம்.

தோனியின் கரியரில் அவர் முதல் முதலாக ஓய்வை அறிவித்தது டெஸ்ட் போட்டிகளில்தான். அந்த 2014-இன் கடைசிக்கட்டத்தில் தோனியை யாருமே ஓய்வு பெற சொல்லி நிர்பந்தித்ததாகத் தெரியவில்லை. ஓய்வு பற்றிய கேள்விகளும் அவர் முன் வைக்கப்படவில்லை. தொடர் தோல்விகளால் அவரது கேப்டன் பதவியின் மீதுதான் பெரிய விமர்சனங்கள் இருந்தன. ஆனால், திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு டெஸ்ட் போட்டிகளிலிருந்துமே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த ஓய்வு அறிவிப்பை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க அமைதி மட்டும்தான் தோனியின் பதில்.

Dhoni – Raina

2015 ஓடிஐ உலகக்கோப்பை தோல்வி. 2016 டி20 உலகக்கோப்பை தோல்வி. இந்தத் தோல்விகளையெல்லாம் தொடர்ந்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் தோனி எப்போது ஓய்வு பெறப்போகிறார்? எனும் கேள்வி எழத் தொடங்கிவிட்டது.

இந்தச் சமயத்தில்தான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஓய்வு பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை அருகே அழைத்து அவர் வாயாலயே 2019 உலகக்கோப்பை வரை ஆடலாம் எனச் சொல்ல வைத்தார். ஓய்வு பற்றிய கேள்விக்கு அதுதான் தன்னுடைய பதில் என்றும் சொன்னார்.

தோனி குறிப்பிட்டதை போல அந்த 2019 உலகக்கோப்பையும் வந்தது. அதில் நியூசிலாந்துக்கு எதிரான அந்த ரன் அவுட்டும் இந்தியாவின் தோல்வியும் எல்லாருக்குமே நினைவிருக்கும். அப்போது, தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் உச்சம் தொட்டிருந்தன. கிரிக்கெட் உலகில் எங்கு நோக்கினும் தோனியின் எதிர்காலத்தைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. இந்தச் சமயத்திலும் தோனி ஒன்றுமே பேசவில்லை. ஓர் ஆண்டு முழுவதும் எந்தப் போட்டியிலும் ஆடாமல் இருந்தவர், திடீரென ஒருநாள் ஓய்வு முடிவை அறிவித்தார்.

ஓய்வு முடிவுகளைப் பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிக்காட்டிய புதிரான அமைதியை தோனி ஐ.பி.எல் தொடரில் வெளிக்காட்டவில்லை. தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதே 2020-ம் ஆண்டில் ஐ.பி.எல்-லிலும் தோனியின் ஓய்வு பற்றி பேச்சுகள் எழுந்திருந்தன. அதற்கேற்ப சென்னை அணியும் அந்த சீசனில் மோசமாகத் தோற்றிருந்தது. தோனியும் கடுமையாகச் சொதப்பியிருந்தார். ஃபிட்னஸ் விஷயத்திலும் பிரச்னைகள் இருந்தன. அதனால் எப்படியும் தோனி அந்த சீசனோடு ஓய்வை அறிவித்து விடுவார் என அனுமானங்கள் எழுந்திருந்தன. ஆனால்,

அந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் டேனி மோரிசன் ஓய்வு பற்றி கேட்ட கேள்விக்கு `Definitely Not’ என உறுதியாகக் கூறியிருந்தார் தோனி.

Dhoni

ஓய்வு பற்றிய கேள்விக்கு தோனி இப்படி வெளிப்படையாகப் பதில் கூறியதே புதிதாக இருந்தது.

அடுத்த 2021 ஐ.பி.எல் சீசன் இந்தியாவிலும் துபாயிலுமாக நடந்திருந்தது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மற்ற அணியின் வீரர்கள் கூட தோனியிடம் ஆலோசனை கேட்பதை இப்போதும் பார்க்கிறோம். அந்த சீசனில் தோனியிடம் ஆலோசனை கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரின் ஜெர்சியையும் நினைவுப்பரிசாக வாங்கிச் சென்றனர். இந்த லிஸ்டில் பட்லர் போன்ற பெரிய நட்சத்திர வீரர்கள் கூட அடக்கம். அந்தச் சமயத்தில் தோனி ஒய்வு குறித்து ஒரு கமெண்ட் அடித்தார்.

“எல்லாரும் நான் ஓய்வு பெறப்போவதாக எண்ணி ஜெர்சியை வாங்குகிறார்கள் என நினைக்கிறேன்” என்று ஜாலியாகப் பேசியிருந்தார்.

அந்த சீசனில் சென்னை அணிதான் சாம்பியனும் ஆனது. கொல்கத்தாவை வீழ்த்திவிட்டு ஹர்ஷா போக்லேவிடம் தோனி பேசுகையிலுமே “அடுத்த ஆண்டு ஆடுவதைப் பற்றி பிசிசிஐயின் முடிவுகளைச் சார்ந்தும் அணியின் நலன்களை சார்ந்தும்தான் முடிவெடுப்பேன்” என தோனி பேசியிருந்தார். ‘ஒரு சகாப்தத்தை உருவாக்கி அதை விட்டுச் செல்கிறீர்கள்’ என ஹர்ஷா வர்ணிக்க, “நான் இன்னும் எதையும் விட்டுச் செல்லவில்லை” எனக்கூறி ட்விஸ்ட் கொடுத்தார் தோனி. இதற்கிடையில்தான் “சேப்பாக்கத்தில் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஆடிவிட்டுதான் ஓய்வுபெறுவேன்” என்றும் தோனி கூறினார். கடந்த சீசனில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால் தோனியின் ஓய்வு பற்றி பெரிதாக எந்தப் பேச்சும் எழவில்லை.

இந்த சீசனில் சென்னை அணி மீண்டும் சேப்பாக்கத்திற்கு வந்துவிட்டது. சிறப்பாகவும் ஆடுகிறது. தோனியின் ஓய்வு பற்றிய கேள்விகளும் அனல் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், தோனி பேசிய அந்த நிகழ்வில் ஹர்ஷா போக்லே தோனியின் ஒய்வு பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஆனாலும் தோனியே முன்வந்து ஓய்வு பற்றி ஒரு டீசரைக் காட்டுவது போல ஒரு பேச்சைப் பேசியிருக்கிறார். ஓய்வு முடிவுகள் பற்றி தோனியின் பேச்சுகளின் ட்ராக் ரெக்கார்டுகளைப் பார்க்கையில், அவர் எப்போதுமே அமைதியாக இருந்திருக்கிறார் அல்லது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையிலேயே ஒரு பதிலையும் சொல்லியிருக்கிறார். ஆனால்,

Dhoni

இந்த முறை அமைதியையும் பதிலாகக் கொடுக்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாசிட்டிவ்வான பதிலையும் கொடுக்கவில்லை. ஓய்வை எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பேன். தயாராக இருங்கள் என ரசிகர்களின் மனதை எந்த முடிவிற்கும் தயார்ப்படுத்தும் வகையிலேயே பேசியிருக்கிறார்.

மேலும், இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே கவனிக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் ஐ.பி.எல் இன் ப்ளே ஆப்ஸ் போட்டிகள் நடைபெறும் இடங்களையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதன்படி, முதல் தகுதிச்சுற்றும் எலிமினேட்டரும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. முதல் தகுதிச்சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் எலிமினேட்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகளும் மோதும். ஆக, சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து ப்ளேஆப்ஸ் வந்துவிட்டால் கட்டாயமாக சேப்பாக்கத்தில் ஒரு போட்டியை ஆடியே ஆகும். இப்படி ஒரு திட்டமிடலுடன் பிசிசிஐ அட்டவணையை வெளியிட்டிருப்பதும் எதேச்சையானதாகத் தெரியவில்லை. ஒருவேளை,

சென்னை ப்ளே ஆப்ஸூக்குத் தகுதிப்பெற்று விடும்பட்சத்தில் சென்னையில் நடைபெறும் அந்தப் போட்டிதான் சேப்பாக்கில் தோனி ஆடும் கடைசி போட்டியாக இருக்கக்கூடும். அங்கேயே தோனி தனது ஓய்வு முடிவையும் அறிவிக்கக்கூடும்.

Dhoni

தோனியை இன்னமும் பிடித்து வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முற்பட்டாலும் அதிகபட்சமாக அடுத்த ஒரு சீசனை வேண்டுமானால் தோனி ஆடக்கூடும். அதற்குமேல் தோனி ஆட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஏறக்குறைய இன்னும் ஒரு மாதத்தில் தோனி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது தெரியவந்துவிடும்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என உங்களின் கணிப்புகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.