‘சென்னை அணியின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அவர்கள் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை ‘AnbuDen’என்றே குறிப்பிடுவார்கள். ‘Den’ என்றால் ‘குகை’. சிங்கத்தின் குகையென சேப்பாக்கத்தை அந்த அணி வர்ணிக்கும். சிங்கத்தின் குகையில் அதன் எஜமானரான சிங்கத்தை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல.

எப்போதோ அசந்து போன நேரத்தில் சிங்கத்தை வீழ்த்தலாமே ஒழிய அதை ஒரு வழக்கமாக எப்போதும் மாற்றவே முடியாது. கர்ஜனையிலேயே உடலை நடுங்கச் செய்யும் சிங்கத்தின் பசிக்குதான் எதிராளி இரையாகக்கூடும்.’

ஒரு வெறித்தனமான சென்னை ரசிகனை அழைத்து சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியைப் பற்றி ஒரு பத்தி எழுதிக் கொடுக்கச் சொன்னால் இப்படித்தான் அந்த ரசிகன் எழுதியிருக்கக்கூடும். ஆம், இத்தனை பில்டபுக்கும் ஏற்றவகையில்தான் சன்ரைசர்ஸ் அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

‘தோனி ஸ்பின்னர்களின் கேப்டன். சேப்பாக்கம் ஸ்பின்னர்களுக்கான மைதானம். இப்படி ஒரு மைதானத்தில் அவர்களை வீழ்த்துவது அசாத்தியமான விஷயம்’ இந்த சீசனின் தொடக்கத்தில் இப்படி ஒரு வர்ணனையை கேட்க முடிந்திருந்தது. இந்த வர்ணனைக்கு ஏற்ற வகையில்தான் சென்னை அணியின் நேற்றைய ஆட்டமும் அமைந்திருந்தது. ஸ்பின்னர்களாலேயே சன்ரைசர்ஸ் அணிக்குக் கட்டம் கட்டி சுமாரான ஸ்கோருக்குள் சுருட்டி சென்னை அணி வென்றிருக்கிறது.

தோனி ஆடுவாரா மாட்டாரா என்பது சந்தேகமாகவே இருந்ததால் ரசிகர்கள் ஒரு பதைபதைப்புடன்தான் இந்தப் போட்டியைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆனால், தோனி வழக்கம்போல ஆளுமைமிக்க சிரிப்போடு டாஸூக்கு வந்திருந்தார். அப்போதுதான் ரசிகர்களுக்கு உயிரே வந்தது.

Dhoni

“தோனியுடன் ஆடும்போது மற்ற வீரர்களுக்கு எப்போதுமே ஒரு அழுத்தம் இருப்பதை உணர முடிகிறது. உள்ளூரில் இங்கே அனைவரும் தோனியைப் பார்க்கதான் வருகிறார்கள். தோனி எந்த ஆர்டரில் வருவார் என்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கிறார்கள். ஒருவேளை தோனி களமிறங்கத் தாமதமாகினால், உள்ளே ஆடிக்கொண்டிருக்கும் வீரர் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என வேண்டிக்கொள்கிறார்கள்.”

என ரவி சாஸ்திரியும் வர்ணனையில் பேசியிருந்தார். இப்படியான பேரன்புக்குச் சொந்தக்காரர் காயத்தை கூட பொருட்படுத்தாமல் ஆடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. தோனிதான் டாஸை வென்றிருந்தார். உள்ளூர் விவகாரங்களெல்லாம் நன்கு தெரிந்தவர் என்பதால் முதலில் பந்துவீசி சிரமமான வேலையை முடித்துவிடுவதென முடிவெடுத்தார்.

சன்ரைசர்ஸ் சார்பில் ஹாரி ப்ரூக்கும் அபிஷேக்கும் ஓப்பனர்களாக இறங்கினார்கள். இந்த சீசனிலேயே பவர்ப்ளேயில் மிகக்குறைவான ரன்ரேட்டை வைத்திருக்கும் அணி சன்ரைசர்ஸ்தான். 7-ஐ சுற்றிதான் சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் இருக்கிறது. இந்தப் போட்டியிலும் ஒன்றும் விசேஷமில்லை. பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் எடுத்திருந்தது. துஷார் தேஷ்பாண்டேவும் ஆகாஷூம் நன்றாகவே வீசியிருந்தனர். துஷார் தனது மோசமான தொடக்கத்திலிருந்து வெகு விரைவாக மீண்டு வந்திருக்கிறார். ஆகாஷ் சன்ரைசர்ஸ் அணியின் பெரிய நம்பிக்கைகளில் ஒருவரான ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்திருந்தார். மிடில் ஓவர்கள் வரை நின்றால் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற பதற்றத்திலேயே ஹாரி ப்ரூக் அப்படி ஒரு ஷாட்டை முயற்சி செய்து அவுட் ஆகியிருக்க வேண்டும். பவர்ப்ளே முடிந்த பிறகுதான் சென்னை அணி தனது பிடியை இன்னும் இறுக்கியது.

CSK vs SRH

7-15 இந்த மிடில் ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 57 ரன்களை எடுத்திருந்தது. ரன்ரேட் 6 ஐ சுற்றிதான் இருந்தது. 4 விக்கெட்டுகளை வேறு இழந்திருந்தனர். சென்னை சார்பில் ஜடேஜா, மொயீன் அலி, மஹீஸ் தீக்சனா என ஸ்பின்னர்கள் சன்ரைசர்ஸை மூச்சு முட்ட வைத்தனர்.

CSK vs SRH

சேப்பாக்கம் மைதானத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் எந்தத் திட்டத்தையும் கையில் வைத்திராமல்தான் சன்ரைசர்ஸ் வந்திருந்ததை போல இருந்தது. மார்க்ரம், மயங்க் அகர்வால், அபிஷேக், ராகுல் திரிபாதி என யாருமே கொஞ்சம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. சேப்பாக்கம், வாஷிங்டன் புழுதி படிய ஆடி வளர்ந்த மைதானம். அவரை நம்பர் 8-ல் 18வது ஓவரில் இறக்கியபோதே சன்ரைசர்ஸ் தனது தோல்வியை உறுதி செய்து கொண்டது. சேப்பாக்கத்தில் நடந்த கடந்த போட்டியில் உள்ளூர்க்காரரான அஷ்வினை வைத்து ராஜஸ்தான் செய்த அந்த மேஜிக்கை சன்ரைசர்ஸாலும் செய்திருக்க முடியும். ஆனால், அத்தனை வாய்ப்பிருந்தும் சன்ரைசர்ஸ் கோட்டைவிட்டது. மிடில் ஓவர்களில் வாஷிங்டனை இறக்கி அவர் ஸ்பின்னர்களின் வியூகத்தை உடைத்திருந்தால் சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியை சவாலளிக்கும் வகையில் ஆடியிருக்க முடியும். பயன்படுத்த மறுத்த நல்வாய்ப்பு அது.

சென்னை சார்பில் தோனி ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது வழக்கம்போல அட்டகாசமாக கீப்பிங் செய்திருந்தார். மின்னல் விரல்களுக்கு சொந்தக்காரரான தோனி மயங்க் அகர்வாலை ஸ்டம்பிங் செய்திருந்தார். மார்க்ரமுக்கு ஒரு சமயோஜிதமான கேட்ச்சைப் பிடித்திருந்தார். ‘நீங்கள் ஸ்பின்னராக இருக்கும்பட்சத்தில், தோனியைத்தான் உங்களின் கீப்பராக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்’ என தோனியின் கீப்பிங்கிற்கு தனது வார்த்தைகளால் மேலும் வனப்பைக் கூட்டினார் ஹர்ஷா போக்லே.

CSK

சென்னை அணிக்கு டார்கெட் 135 மட்டும்தான். பழைய சன்ரைசர்ஸாக ஒரு லோ ஸ்கொரிங் திரில்லரை நிகழ்த்தி காண்பிப்பார்கள் என எதிர்பார்த்தால் அதற்கும் வழியில்லை. ‘நல்ல ஷாட்களை ஆட வேண்டும். பௌலர்கள் மீது பிரஷர் போட வேண்டும். பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்ய வேண்டும்.’ நாங்கள் இருவரும் இதையெல்லாம்தான் மனதில் வைத்து ஆடுவோம் என போட்டிக்குப் பிறகு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குறித்து பேசினார் கான்வே. படிநிலைகளாக விளக்கிய அத்தனையும் ருத்துராஜ் – கான்வே கூட்டணிக்கு வெற்றிகரமாக நடந்திருந்தது. மிடில் ஓவர்கள்தான் பிரச்னையாக மாறும் என்பதை உணர்ந்து பவர்ப்ளேயிலேயே முக்கால்வாசி வேலையை முடித்துவிட்டது இந்த ஓப்பனிங் கூட்டணி. பவர்ப்ளே முடிவிலேயே சென்னை அணி 60 ரன்களை எடுத்திருந்தது. கான்வே, மார்கோ யான்சனின் ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்திருந்தார். மயங்க் மார்கண்டே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையெல்லாம் பவர்ப்ளேயில் வீச விடாமல் செய்து சன்ரைசர்ஸ் அணி மீண்டும் மீண்டும் தவறுகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

ருத்துராஜ் ரன் அவுட் ஆக மிடில் ஓவர்களில் மார்கண்டே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, சென்னை அணியின் சேஸிங் கொஞ்சம் மந்தமானது. ஆனாலும் கடைசி ஓவர்வரை இழுக்காமல் 19வது ஓவரில் ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். கான்வே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 77 ரன்களை அடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் கேப் கட் என்றொரு ரீல்ஸ் ட்ரெண்டாகி வருகிறதே? கான்வே நேற்று ஆடிய அந்த பேக் ஃபுட் ஷாட்களின் ஸ்டில்களை எடுத்து அப்படி ஒரு வீடியோ க்ரியேட் செய்தால் எளிதில் வைரலாகிவிடும். அத்தனை வசீகரமாக இருந்தன அவரின் ஷாட்கள். இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தோல்வியிலிருந்து மீண்டு வருவதை போல பாவனை காண்பித்த சன்ரைசர்ஸ் அணி மீண்டும் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. சென்னை அணி மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றிப்பாதைக்குத் திரும்பியிருக்கிறது. போட்டி முடிந்த பிறகு வழக்கமாக ஒரு சில வீரர்கள் மட்டுமே தோனியைச் சந்தித்து ஆலோசனை பெறும் போட்டோக்கள் வைரலாகும். ஆனால்,

Dhoni

இந்தப் போட்டி முடிந்த பிறகு ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணியுமே தோனியிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்தது. இது ஒரு ஹெவியான குறியீடு மெட்டீரியல். என்ன குறியீடு என்பதை நீங்களே கமெண்ட் செய்யுங்க பார்க்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.