சுமார் மூன்றாண்டுக்குப் பிறகு ஹோம் – அவே ஃபார்மேட்டிற்கு திரும்பி கோலாகலமாக நடைபெற்று வருகிறது நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர். கோவிட் அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு சீஸன்களை நடத்திய பிசிசிஐ கடந்தாண்டு தொடரையும் மும்பை மற்றும் புனேவில் மட்டுமே நடத்தியது. இந்நிலையில் நடப்பு சீஸன் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியா முழுவதுமுள்ள 12 நகரங்களில் ஹோம் – அவே கேமாக மாறி மாறி நடக்கிறது.

தங்களின் சொந்த அணிக்காக மைதானங்களுக்குப் படையெடுக்கும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைத் தொடுகின்றன. மறுபக்கம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் ரசிகர் படை முன்னிலையில் விளையாடும் உணர்வை வீரர்களும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். 

சேப்பாக்கத்தில் சென்னை அணியின் ரசிகர்கள்

குறிப்பாக, தோனியைக் காண சென்னை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்குப் பெரும் டிமாண்ட் இருக்கிறது. சென்னை அணி விளையாடும் மற்ற நகரங்களிலும் இதே நிலைதான். ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூரு அணியை சின்னசுவாமி மைதானத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது சென்னை அணி. இதற்கான டிக்கெட்டுகள் கடந்த மாதமே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஈடன் கார்டனில் நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான சென்னையின் போட்டிக்கும் இதே நிலைதான். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் டிக்கெட்டுகளைப் பெறுவது குறித்து ரசிகர்கள் பலரும் குழப்பம் தெரிவிக்கின்றனர். 

மற்ற போட்டிகளைப் போல அல்லாமல் சென்னையில் நடக்கும் சி.எஸ்.கே போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஒவ்வொரு ஆட்டமாகத்தான் விற்பனைக்குத் திறக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். இந்த டிக்கெட்டுகளை இணையம், நேரடி கவுன்ட்டர் என இரு வழிகளில் பெறலாம். C, D, E, I, J, K என ஆறு அரங்குகளின் டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களின் நேரடி விற்பனைக்கு வருகின்றன. மீதமுள்ள D, E, F மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அரங்கு ஆகியவற்றின் டிக்கெட்டுகள் நேரடி விற்பனைக்குத் திறக்கப்படவில்லை. இதில் I, J, K அரங்குகளில் டிக்கெட்டுகள் ஆன்லைன், நேரடி கவுண்டர் இரண்டிலும் விற்கப்படுகின்றன. C, D, E அரங்குகளின் லோயர் தளம் நேரடியாகவும், D மற்றும் E அரங்குகளின் அப்பர் தளம் இணையம் மூலமாகவும் மட்டுமே கிடைக்கும். ஆன்லைன் மூலம் பெற இருப்போர் பயன்படுத்தவேண்டிய தளம் Paytm Insider.

MA Chidambaram Stadium Layout

சென்னை லக்னோ அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்பனைக்காகத் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. நேரடி விற்பனைக்குத் திறக்கப்பட்ட குறைவான அரங்குகள், இணையதள பிரச்னை ஆகியவற்றால் பெரும்பாலானோருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு, கள்ளச்சந்தையில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் பெரும் விலையில் விற்கப்படுவதை காணமுடிந்தது. ரூ.1500, 2000 மதிப்பிலான டிக்கெட்டுகள் 3000 முதல் 5000 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகின்றன. இதுதவிர, பிளாக் செய்யப்பட்ட ஸ்பான்ஸர்களுக்கான டிக்கெட்டுகளும் காசுக்கு விற்கப்படுகின்றன. 

இதனால் டிக்கெட்டுகளுக்குப் பெரும் டிமாண்ட் இருந்தும் முதல் போட்டியில் பல்வேறு அரங்குகளிலும் காலி இருக்கைகளைக் காண முடிந்தது. விற்பனை திறக்காமல் அதிக அளவிலான டிக்கெட்டுகளை ப்ளாக் செய்ததே இதற்கான முக்கிய காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போட்டியின்போது காலியாக உள்ள இருக்கைகள்

டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றை பிளாக் செய்ய வேண்டிய தேவை என்ன, அப்படி பிளாக் செய்தாலும் கடைசி வரை அவை காலியாகவே இருக்கின்றனவே என சமூக வலைத்தளங்கள் எங்கெங்கும் ரசிகர்களின் கேள்விகளைக் காண முடிகிறது. இது குறித்த நடவடிக்கைகளைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைந்து எடுக்க வேண்டும். ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டி டிக்கெட்டுகள் வரும் 9-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

மற்ற அணிகளின் போட்டி டிக்கெட்டுகள் பெறுவதற்கான தளங்கள்:

Lucknow SuperGiants, Gujarat Titans, Sunrisers Hyderabad, Punjab Kings – Paytm Insider, Paytm

Kolkata Knight Riders, Rajasthan Royals – Bookmyshow

Royal Challengers Bangalore – அணியின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Mumbai Indians – Bookmyshow, Paytm

Delhi Capitals – அணியின் அதிகாரப்பூர்வ இணையதளம், Paytm

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.