நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், பல்பீர் சிங் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் புகாருக்குள்ளானவர்களின் பற்களைப் பிடுங்கி அவர்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார். இந்த அதிர்ச்சியளிக்கும் மனித உரிமை மீறலை நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன் தலைமையில் பல்வேறு அமைப்பினரும் வெளியில் கொண்டு வந்தனர்.

பற்கள் பிடுங்கப்பட்டவர்கள்

காவல்துறையினரால் பற்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக தண்டனைக்கு உள்ளானதில் முகமே மாற்றமடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் இது குறித்து வெளியில் பேசவே தயங்கினார்கள். இருப்பினும், சமூக அமைப்பினரின் முயற்சியால் சிலர் வெளிப்படையாகப் பேசியதால், இந்த விவகாரம் பரபரப்பானது. அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், இது பற்றி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ஏ.எஸ்.பி-யான பல்பீர் சிங்மீது நடவடிக்கை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து ஏ.எஸ்.பி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அத்துடன் அவர்மீதான புகார் குறித்த விசாரணையும் தொடங்கியது.

பற்கள் பிடுங்கப்பட்டவர்கள்

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்று பேருக்கு சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால், போலீஸாருக்கு எதிராக சாட்சி சொன்னால் எதிர்காலத்தில் தங்கள்மீது வழக்கு பாயுமோ என்கிற அச்சத்தில் நேற்று யாருமே ஆஜராகவரவில்லை. இந்த நிலையில், இன்று ஒருவர் மட்டும் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கிறார். அவரும் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

இதனிடையே, அம்பாசமுத்திரம் பகுதியில் ஏ.எஸ்.பி பல்பீர் சிங் பணியிலிருந்தபோது உடன் பணியாற்றிய சப்-கலெக்டர் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருப்பதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் குற்றம்சாட்டினார்கள். விசாரணையின்போது சேரன்மகாதேவி டி.எஸ்.பி-யான பர்னபாஸ் உடன் இருந்ததைச் சுட்டிக் காட்டியவர்கள், காவல்துறை அதிகாரி முன்னிலையில் எப்படி நியாயமான விசாரணை நடக்கும் எனக் கேள்வி எழுப்பினார்கள்.

தமிழக மனித உரிமை ஆணைய உத்தரவு

அதனால் கலெக்டர் கார்த்திகேயன் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் தெரிவித்தனர். இந்த நிலையில், விவகாரம் தொடர்பாக விசாரிக்க தமிழக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்திருக்கிறது.

இது தொடர்பாக ஆணையத்தின் உதவி பதிவாளர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் பற்களைப் பிடுங்கியதாக வெளியான தகவல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி விசாரித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.