மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் – ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.

image

இந்நிலையில் இதுதொடர்பாக போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், ‘இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இதுபோன்று பிரச்னைகள் இருந்ததில்லை’ என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.